ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

நக்சலைட தலைவர்கள் மீது செக்ஸ் புகார் கூறிய பெண் நக்சலைட் சரண்

மாவோயிஸ்ட் தலைவர் கிஷன்ஜி உள்ளிட்ட தலைவர்கள் பெண் நக்சலைட்களை செக்ஸ் அடிமைகளாகப் பயன்படுத்தி வருவதாக புகார் கூறிய பெண் நக்சலைட் தலைவர் உமா என்கிற ஷோபா மண்டி இன்று சரணடைந்தார்.

மேற்கு வங்கத்தை ஆட்டிப்படைத்து வரும் மாவோயிஸ்ட் நக்சலைட்களை பாதுகாப்புப் படையினர் வேட்டையாடி வருகின்றனர். இதையடுத்து அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை பாதுகாப்புப் படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் சமீபத்தில் ஷோபா என்கிற உமா என்ற நக்சலைட் தலைவி பரபரப்பு புகார்களை கூறி பேட்டி அளித்திருந்தார். மாவோயிஸ்ட் தலைவர் கிஷன்ஜி உள்ளிட்ட தலைவர்கள் பெண் நக்சலைட்களை செக்ஸ் அடிமைகள் போல நடத்தி வருகின்றனர். இஷ்டத்திற்கு அவர்களை அனுபவித்து வருகின்றனர். உடன்படாதவர்களை சித்திரவதை செய்கின்றனர். ஒரு நக்சலைட் தலைவரின் மனைவி கிஷன்ஜி வசம் உள்ளார் என்று அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் உமா போலீஸில் சரணடைந்துள்ளார். இவர் கார்கிராம் பகுதி கமாண்டராக இருந்தவர் ஆவார். நேற்று இரவு இவர் மேற்கு மிதினாப்பூர் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்திற்கு தனது சீருடையில் வந்தார். எஸ்.பி. மனோஜ் வர்மாவை சந்தித்து சரணடைவதாக தெரிவித்தார். பின்னர் ரூ. 55 ஆயிரத்து 550 ரூபாயை அவரிடம் ஒப்படைத்தார்.

இவருக்கு ஞானேஸ்வரி ரயில் விபத்து சதியில் தொடர்பு உள்ளது. லால்கரில் நடந்த தாக்குதல்களிலும் இவருக்குத் தொடர்புள்ளது. சரணடைந்த உமாவை பாதுகாப்பு முகாமில் தங்க வைத்துள்ளனர். அவரது பெற்றோருக்கும் தகவல்தரப்பட்டுள்ளது. அவர்கள் தங்களது மகளைப் பார்த்தனர்.
  Read:  In English 
இதுகுறித்து எஸ்.பி. மனோஜ் வர்மா கூறுகையில், சரண் அடைந்த ஷோபா மண்டிக்கு மறுவாழ்வுத்துறை மூலம் உதவிகள் செய்ய எழுதி இருக்கிறோம். அவர் என்ன தொழில் தொடங்க விரும்புகிறாரோ அதை செய்து கொடுப்போம் என்றார்.போலீஸாரால் தேடப்பட்டு வந்த முக்கிய பெண் நக்சல் தலைவி இந்த ஷோபா என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: