சனி, 26 ஜூலை, 2025

வடநாட்டு கொடூரனை அடையாளம் காட்டிய ர் சிறுமி!- ரயிலில் வந்து பலாத்காரம்.

 tamil.oneindia.com -   Yogeshwaran Moorthi  :  திருவள்ளூர்: திருவள்ளூர் பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் வடமாநில இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள்ளார். 
இவரைப் பாதிக்கப்பட்ட 8 வயது சிறுமி அடையாளம் காட்டி இருக்கிறார். கைதானவரின் புகைப்படத்தை சிறுமியிடம் காட்டி காவல்துறையினர் உறுதி செய்திருக்கின்றனர். 
ஏற்கனவே 2 பேரைக் காவல் துறையினர் விசாரித்த நிலையில், உண்மை குற்றவாளி சிக்கி இருக்கிறார். 
இவர் ஆந்திராவில் இருந்து ரயிலில் வந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த சிறுமி அரசு உதவி பெறும் பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் ஜூலை 12ஆம் தேதியன்று பள்ளி முடிந்து நண்பகலில் தனது பாட்டி வீட்டிற்குத் திரும்பி இருக்கிறார்.

அப்போது அவரை மர்ம நபர் ஒருவர் பின்தொடர்ந்து, சிறுமியை வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது.
Thiruvallur Sexual Assault Case Real Accused Arrested After Victim s Identification

அந்த நபரிடம் 8 வயது சிறுமி, கெஞ்சிய போதும் அவர் விடவில்லை. கால்கள், முகங்களில் கொடூரமாகத் தாக்கி அடித்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதன்பின் அந்த இளைஞர் செல்ஃபோனில் பேசிக் கொண்டிருந்த போது, உயிரைப் பிடித்துக் கொண்டு எப்படியோ தப்பித்து வீட்டிற்கு வந்துள்ளார். முகங்களில் காயத்துடன் வந்த மகளைப் பார்த்த பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

இதன்பின் உடனடியாக சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவத்தை அறிந்து கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி நேரடியாகச் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டு வாக்குமூலத்தைப் பதிவு செய்தார். தொடர்ந்து சிறுமியைச் சென்னையில் உள்ள மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருக்கு மனநல ஆலோசனையும் வழங்கப்பட்டது.

இதனிடையே 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியது. அந்த சிசிடிவி காட்சிகள் தமிழ்நாடு முழுவதும் அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். இதனிடையே சிறுமியின் வாக்குமூலத்தில் அந்த இளைஞர் இந்தி பேசியதாகக் கூறி இருந்தார். இதன் மூலமாக வடமாநிலத்தவர் என்று தெரிய வந்தது.

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் புகைப்படங்களும் வெளியிடப்பட்டது. 10 நாட்களுக்கு மேலாகியும் போலீசாரால் குற்றவாளியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனைத் தொடர்ந்து தனிப்படை அமைக்கப்பட்டு, பொதுமக்கள் தெரிவித்தால் சன்மானம் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனாலும் அந்த இளைஞர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் 14 நாட்களுக்குப் பின் சிறுமியைப் பலாத்காரம் செய்த கொடூரனை போலீசார் கைது செய்துள்ளனர். அவரின் புகைப்படத்தையும் காட்டி சிறுமியிடம் உறுதி செய்திருக்கின்றனர். இதற்கு முன்பாக 2 பேரைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அவர்களின் புகைப்படத்தை சிறுமியிடம் காட்டிய போது, இல்லை என்று கூறி இருக்கிறார்.

தற்போது கைதான நபரின் புகைப்படத்தை போலீசார் காட்டிய போது, அவர் கொடூரனை சரியாக அடையாளம் காட்டி இருக்கிறார். இவர் ஆந்திரா எல்லையில் உள்ள ஒரு தாபாவில் பணியாற்றி வந்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் ஆள் நடமாட்டம் இல்லாததை அந்த இளைஞர் நோட்டமிட்டு வந்துள்ளார்.

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய ரயில் மூலமாக அந்த இளைஞர் வந்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர் கைதான தகவலை அறிந்து, அந்த சிறுமியின் உறவினர்கள் காவல் நிலையம் முன்பு குவிந்து வருகின்றனர். இதனால் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: