வியாழன், 24 ஜூலை, 2025

ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ சிகிச்சை ஏன் - அப்போலோ விளக்கம்!

 மின்னம்பலம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது குறித்து அப்போலோ மருத்துவமனை இன்று (ஜூலை 24) விளக்கம் அளித்துள்ளது. Why did Stalin undergo angioplasty – Apollo explains!
தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உடல் நல குறைவு காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 4வது நாளாக சிகிச்சை பெற்று வருகிறார்.


கடந்த 21ஆம் தேதி காலையில் வழக்கமான நடைபயிற்சியின்போது ஏற்பட்ட தலைசுற்றல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வருக்கு தொடர்ச்சியாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று பிற்பகல் 1 மணியளவில் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”முதல்வருக்கு தலை சுற்றல் பிரச்சனை தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் இதயத்துடிப்பில் உள்ள சில வேறுபாடுகள் காரணமாகவே இந்த தலை சுற்றல் ஏற்பட்டது கண்டறியப்பட்டுள்ளது.

இதய சிகிச்சை மருத்துவர் ஜி.செங்குட்டு வேலு தலைமையிலான மருத்துவ குழுவினர் அறிவுரையின் படி இதனை சரி செய்வதற்கு சிகிச்சை முறை இன்று காலை செய்யப்பட்டது.

இன்று மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோகிராம் சோதனையும் இயல்பாக இருந்தது. முதல்வர் நலமாக உள்ளார். தனது பணிகளை இரண்டு நாட்களில் மேற்கொள்வார்” என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்த மூத்த அமைச்சர் துரைமுருகன், “முதல்வருக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பரிசோதனையில் எந்த ஒரு சிறிய அடைப்பும் இல்லை. ஆஞ்சியோ பரிசோதனைக்கு பிறகு முதலமைச்சர் உடல் நலத்துடன் இருக்கிறார். எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்பதை மருத்துவர்கள் சொல்வார்கள்” என்றார்.



கருத்துகள் இல்லை: