ஞாயிறு, 20 ஜூலை, 2025

தெரு நாய்கள் கருத்தடையை தடுத்தால் சிறை - கேரள அரசு அதிரடி!

 மின்னம்பலம் : கேரளாவில் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்வதை தடுத்தால் 3 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Jail for stray dogs if they prevent sterilization in Kerala
தமிழகத்தை போலவே அண்டை மாநிலமான கேரளாவிலும் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தெரு நாய்கள் கடிப்பதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கேரள அரசு பல அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
கேரளாவில் இந்த ஆண்டு மட்டும் தெரு நாய் கடித்து சிகிச்சை பெற்றவர்களின் எண்ணிக்கை சுமார் இரண்டரை லட்சம் என புள்ளி விபரங்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த ஆண்டு சுமார் 21 பேர் வெறி நாய் கடித்ததில் உயிரிழந்து உள்ளதாக கூறப்படுகிறது.



இதையடுத்து நோய் பாதித்த நாய்கள் மற்றும் நோய் தொற்றை பரப்பக் கூடிய தெரு நாய்களை கால்நடை மருத்துவரிடம் சான்று பெற்று கருணை கொலை செய்ய உள்ளாட்சி அமைப்புகளுக்கு கேரள அரசு அனுமதி வழங்கி உள்ளது.

மேலும் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்ய 17 மையங்கள் செயல்பட்டு வருகின்றன. புதிதாக 13 மையங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யும் ஏபிசி மையங்களின் செயல்பாட்டை தடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக மூன்று மாத சிறை தண்டனை மற்றும் ரூபாய் 500 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: