வெள்ளி, 6 டிசம்பர், 2024

தமிழ்நாடு என்றும் அண்ணா நாடுதான்


ராதா மனோகர்
: தமிழக வரலாற்றில் பேரறிஞர் அண்ணா பெற்ற புகழை இதுவரை எவரும் பெறவில்லை!
கலைஞரும் எம்ஜியாரும் ஒருவருக்கு ஒருவர் கடுமையாக மோதிக்கொண்ட போதும் அண்ணாவை புகழ்வதில் அவர்களுக்கு இடையே ஒரு போட்டியே இருந்தது என்று கூறினால் மிகையல்ல.
முழுத்தமிழ்நாடும் எந்தவிதமான தயக்கம் இன்றி தமிழ்நாடு அண்ணாநாடுதான் என்று கூறுமளவுக்கு அண்ணா மிகப்பெரிய வரலாற்று ஆளுமையாக அறியப்படுகிறார்!
பேரறிஞர் அண்ணா அப்படி என்னதான் செய்துவிட்டார்?
ஏன் எல்லோரும் அவரை அளவு கணக்கில்லாமல் புகழ்கிறார்கள்?
இதுவரை பேரறிஞர் அண்ணாவின் வரலாறு போதிய அளவு பொதுவெளியில் கூறப்படவில்லைஎன்று கூட ஒரு கருத்து உண்டு.
இன்னும் கூட அண்ணாவின்  சாதனைகள் பற்றி புரிதல் பொதுவெளிக்கு இல்லை என்ற சந்தேகம் கூட எனக்கு உண்டாவதுண்டு!
உண்மையில் வரலாற்றை  கொஞ்சம் பின்னோக்கி பார்த்தால்தான் பேரறிஞர் அண்ணாவின்  பேராற்றல் எத்தகையது என்று புரியும்.
இரண்டாம் உலகப்போர் முடிவுற்ற காலப்பகுதியில் காலனித்துவ நிர்வாகத்தின் கீழிருந்த நாடுகள் விடுதலை அடையத்தொடங்கின!
அப்படி விடுதலை பெற்ற நாடுகளில் அதுவரை பெரிய அளவில் புலப்படாத பல சமூக பிரச்சனைகள் தலைதூக்க தொடங்கின.
இனரீதியான மொழி ரீதியான நிலப்பகுதிகள் ரீதியான மதரீதியான பிரச்சனைகள் அதுவரை இருந்த அளவை தாண்டி பூதாகரமாக  வெடித்து கிளம்பின.
குறிப்பாக தெற்காசியாவில் ஜாதிய ஒடுக்குமுறையும் அதற்கு எதிரான கிளர்ச்சிகளும் தோன்றியது!
ஜாதிய ஒடுக்குமுறைகளை கையாள்வதில் இந்திய நிலப்பரப்பில் மூன்றுவிதமான கோட்பாடுகள் உருவாகின.
மக்களை மதரீதியான கோட்பாடுகள் மூலம் ஜாதிய பிரச்சனைகளை தீர்த்துவிடலாம் என்று காந்தி - ஆர் எஸ் எஸ் போன்ற  இந்துத்துவா கோட்பாட்டாளர்கள் நம்பினார்கள் .. அல்லது நம்புவதாக நடித்தார்கள்
மறுபுறம் பொருளாதார ஏற்றத்தாழ்வு நீங்கினால் ஜாதிய பாகுபாடுகள் கொடுமைகள் எல்லாம் ஒழிந்து போய்விடும் என்று  இடதுசாரி மாக்சியவாதிகள் நம்பினார்கள் . அதற்காக செயல்பட்டார்கள்
மூன்றாவதாக  ஜாதி என்பதே இந்த மண்ணுக்கு உரியதல்ல.
அது ஆரியர்களின் வருகையால் ஏற்பட்ட விளைவு என்றது திராவிட இயக்கம்.
ஆரிய பார்ப்பனீயம் மண்ணின் மக்களை பிரித்து ஆள்வதற்காக பயன்படுத்திய பாசிச கோட்பாடு என்று  சுட்டி காட்டி அதற்கு எதிரான  கருத்தியல் போரை தொடங்கியது திராவிட இயக்கம்!
ஜாதியை கூறுவது பெருமை சிறுமை என்பதை தாண்டி அது ஒரு அந்நிய வரவு என்ற கருத்தை  முன் வைத்தது திராவிட இயக்கம் !
இந்த கருத்தை முன்வைத்து தென்னிந்திய நலவுரிமை சங்கம் . பார்பனரல்லாதவர் சங்கம் என்ற வரிசையில் சுயமரியாதை இயக்கம் தோன்றியது
இதுதான் பின்பு திராவிடர் கழகமாக பரிணாம வளர்ச்சி கண்டது.
பின்பு காலப்போக்கில் பல்வேறு திராவிட கருத்தியல் இயக்கங்கள் தோன்றின  . இன்றும் புதிது புதிதாக பல திராவிட  கோட்பாட்டு இயக்கங்கள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன.
ஒரு சமுதாய புரட்சி இயக்கமாக  இருந்த திராவிட இயக்கம் அரசியல் அதிகாரம் பெறவேண்டிய  கட்டாயத்திற்கு  உள்ளபோது அதை முன்னின்று அடுத்த கட்டத்திற்கு நகர்த்தினார் பேரறிஞர் அண்ணா!
அண்ணாவோடு கூடவே பல தோழர்கள் இருந்தார்கள் . ஆனால் அத்தோழர்களின் வழிகாட்டியாக அண்ணாவே இருந்தார்
திராவிடர் கழக தலைவர் தந்தை பெரியாரோடு முரண்பட்டுக்கொண்டு வெளியேறிய அண்ணாவும் தோழர்கள்  17 September 1949  இல் திமுக என்ற அரசியல் கட்சியை நிறுவினார்கள்!
சென்னை ராபின்சன் பூங்காவில் அன்று தொடங்கப்பட்ட திராவிட முன்னேற்ற கழகத்தை அன்றைய  ஆண்ட பரம்பரை   ஜமீன்களும்  மதவாதிகளும் மேட்டுக்குடி நில உடையமையாளர்களுக்கும் ஒரு வேடிக்கை காட்சியாகவே கருதினார்கள்
வெகு சாதாரண மக்களின் ஒரு பொழுது போக்கு கூத்தாகத்தான் திமுகவை அன்றைய ஆட்சியாளர்களும் மேட்டுக்குடி வர்க்கமும் நோக்கியது.
அதற்கு ஒரு காரணம் இருக்கிறது
அதுவரை தமிழகத்தை ஆண்டவர்கள் பெரும்பாலும்  பணம் படைத்த பிரமுகர்கள்தான்
அவர்களுக்கு சாதாரண மக்களோடு பெருமளவு  தொடர்புகளை இருந்திருக்கவில்லை.
அரசியல் பொதுவெளி என்பது சாதாரண மக்களுக்கு உரியதல்ல என்ற மேட்டுக்குடி கருத்தியல்வாதிகள் அவர்கள்.
மறுபுறத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவர்களோ  திராவிட கருத்தியலை கூறும் இயக்கப்பாடல்கள் கொள்கை விளக்க நாடங்ககளை திரைப்படங்கள் அளவு கணக்கில்லாத மேடைகள் தோறும்  கொள்கை முழக்கங்கள்  தெருக்கோடி கூட்டங்கள் என்று தமிழ்நாட்டின் பட்டிதொட்டி எங்கும் உரத்த சத்தத்தை  எழுப்பி கொண்டிருந்தன.
மக்கள் இவற்றால் கவரப்பட்டார்கள்.
ஒவ்வொரு திராவிட இயக்க தொண்டனுக்கும் சமூகத்தின் அடிமட்டத்தில் தொடர்புகள் ஏற்பட்டன.
மக்கள் படிப்படியாக திராவிட இயக்கம் தங்களுக்கானாது என்று  நம்பத்தொடங்கினார்கள்
இந்த சமூக மாற்றத்தை  காங்கிரஸ் தலைவர்களுக்கும் இதர மேட்டு குடி ஆளும்வர்க்கமும் சரியாக கணிக்க தவறி விட்டான.
இதை சரியாக கணித்த பேரறிஞர் அண்ணா மெதுவாக அடிமேல் அடிவைத்து காய்களை நகர்த்தினார்.
17 September 1949 தொடங்கிய திமுக  சுமார் ஒன்பது ஆண்டுகளுக்கு பின் (1957 இல் ) சட்டமன்ற தேர்தலில் நிற்கலாமா என்ற விவாதத்தை திருச்சி திமுக மாநாட்டில் முன்வைத்தார் பேரறிஞர் அண்ணா,
அந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களின் பெருவாரியானோர் திமுக தேர்தல் அரசியலில் பங்கு பற்ற வேண்டும் என்று  வாக்களித்தனர்.
அத்தீர்மானத்திற்கு அமைய  1957 தேர்தலில் திமுக முதல் தடவையாக போட்டியிட்டது,
அத்தேர்தலில்  15 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றது . இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற்றது .
இது ஆரியத்திற்கு விழுந்த முதல் அடி!
ஒரு சமூக இயக்கமாக திராவிட கருத்து போராட்டம் இருக்கும் வரைக்கும் தங்களுக்கு பிரச்சனை இல்லை என்று கருத்திகொண்டோரின்  வாசல் படியை மிதித்தது திராவிட முன்னேற்ற கழகம்.
அடுத்து 1962 இல் நடந்த தேர்தலில் போட்டி கடுமையாக இருந்தது.
திமுகவின் அரசியல் பயணத்தை நிறுத்தி விடவேண்டும் என்று அன்றைய காங்கிரஸ் ஆட்சியாளர்கள் கடுமையாக முயன்றனர். பணம் தாராளமாக பாய்ந்தது.
1962 இல் வெற்றி பெற்ற அண்ணா உட்பட அனைவரும் காங்கிரசின் பணபலத்திற்கு முன்னால் தோற்று போனார்கள்
அந்த புயலில் எதிர்நீச்சல் போட்டு வென்று வந்தார் கலைஞர் கருணாநிதி!
கூடவே புதிதாக வெற்றி பெற்ற  49 புதிய எம் எல் ஏக் களையும்  அழைத்து கொண்டு சட்டமன்றத்திற்கு வந்தார் கலைஞர்!
சட்டமன்ற தேர்தலில் தோல்வியடைந்த அண்ணாவை திமுக சார்பில் கிடைத்த ஒற்றை  ராஜ்யசபா இடத்திற்கு பேரறிஞர் அண்ணாவை தேர்ந்தெடுத்தார்கள்.
 டெல்லி நாடாளுமன்றத்தில் பிரதமர் நேரு உட்பட அனைத்திந்திய தலைவர்களுக்கும் திராவிட கருத்தியல் வகுப்பு எடுப்பதற்கு பேரறிஞர் அண்ணாவுக்கு அது காலம் தந்த பெருவாய்ப்பாக அமைந்ததது
நாங்கள்  திராவிட குடும்பத்தை சேர்ந்தவர்கள்  உங்களின் ஆரிய பார்ப்பனீய  கோட்பாட்டுக்கு நாம் உரியவர்கள் அல்ல!  
உங்களின் வழிபாட்டு கலாச்சாரம் எங்களை கட்டுப்படுத்தது நாம் சுயமரியாதை உள்ள திராவிட மக்கள் என்று முழங்கினார்
( I belonging to dravidian stock! )
அதுவரையில் தமிழ்நாடென்றால்  மதராஸி என்று கொச்சை படுத்தி பேசிய வடநாட்டு தலைகளெல்லாம் அண்ணாவின்  சொல்லாழம் சிந்தனை புரட்சி எல்லாம் கண்டு திகைக்க தொடங்கினார்கள்  
இவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல
நீண்ட வரலாற்று  செய்திகள் கொண்ட மக்கள் கூட்டம்
கைபர் கணவாய் வழியாக மேய்த்து கொண்டுவந்த தங்களால் இவர்களை அடக்கி ஆள்வது கடினம் என்று உணர்ந்து கொண்டார்கள்
திமுகவை எப்படியாவது ஒழித்து கட்டவேண்டும் என்று அன்றில் இருந்து முயன்று கொண்டே இருக்கிறார்கள!
1967 தேர்தல் இந்திய வரலாற்றில் ஒரு பெரிய திருப்புமுனை தேர்தலாகும்
பேரறிஞர் அண்ணா அவர்கள் எவ்வளவு பெரிய ராஜதந்திரி என்பதை இந்திய துணைக்கண்டத்திற்கு மட்டுமல்ல முழு உலகத்திற்கே எடுத்து  காட்டிய தேர்தல் அது!
இந்தியா என்றால் காங்கிரஸ் காங்கிரஸ் என்றால் இந்தியா என்றே அதுவரை உலகம் அறிந்து கொண்டிருந்தது .
வெறும் ஒரு சிறிய அரசியல் கட்சியாக அறியப்பட்டிருந்த திமுகவை ஆட்சி மேடைக்கு ஏற்றுவது என்பது அதுவரை இந்திய ஒன்றியம் அறியாதது.
அத்தேர்தலில் தன்வலியும் மாற்றான் வலியும் நன்கு  அறிந்து  கொண்ட அண்ணா அவர்கள் ஏழு கட்சிகளுடன் சேர்ந்து கூட்டணி அமைத்தார்
அந்த கூட்டணியில் திமுகவின் அடிப்படை கொள்கையுடன் எந்த ஒருமைப்பாடும்  இல்லாத திரு ராஜாஜியின் சுதந்திர கட்சியையும் சேர்த்துக்கொண்டார்
தமிழகத்தின் பல கோணங்களில்  இருந்து கடுமையான கேள்விக்கணைகளை பாய்ந்து வந்தன.
கொள்கையை சமரசம் செய்துவிட்டீர்களா என்று கேள்விகள் எழுந்தன.
மறுபுறத்தில் தேர்தல் பிரசாரங்களில் திரு ராஜாஜி அவர்கள் பேசும்பொழுது  பார்ப்பனர்களே உங்கள் வாக்குகளை திமுக கூட்டணிக்கே போடுங்கள் என்று பிரசாரம் செய்தார்
உங்கள் பூணூல்களை ஒரு கையில் பிடித்து கொண்டு மறுகையால் திமுகவுக்கு வாக்கு போடுங்கள் என்று பிரசாரம் செய்தார்.
கலைஞரின் புயல் வேக பிரச்சாரங்களும் கொள்கை  நாடகங்களும் கட்சி கட்டமைப்பை வேகமாக கையாளும் திறமையும் திமுக வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை மக்களிடம் தோற்றுவித்தது/
எல்லாவற்றிலும் மேலாக  எம்ஜியார் மீது எம் ஆர் ராதாவின் துப்பாக்கி சூட்டு நிகழ்ச்சி மக்களை கொந்தளிக்க வைத்தது!
இத்தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் 132 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி மேடை ஏறியது.
தேர்தலில் திமுகவுக்கு எதிராக காங்கிரசுக்கு ஆதரவாக செயல் பட்டிருந்தார் தந்தை பெரியார்.
ராஜாஜி தலைமையிலான சுதந்திரா கட்சியுடன்  திமுகவின் கூட்டணி அமைத்தது பெரியாரின்  கோபத்தை தூண்டி ருந்தது.
மறுபுறத்தில் அண்ணாவுக்கும் இதர திமுகவினருக்கு ஆட்சி நடத்துவதில் போதிய அனுபவம் இன்மையால் கொஞ்ச காலத்திற்கு தான்  முதலமைச்சராக கடமையாற்ற தயாராக இருப்பதாக திரு ராஜாஜி அவர்கள் அண்ணாவிடம் தெரிவித்தார்.
அவரது விருப்பத்தை நாகரீகமாக மறுத்த அண்ணா அவர்கள் தாமே ஆட்சி அமைக்க போவதாக தெரிவித்தார்
திமுக அரசுக்கு தான் ஒரு  ஆலோசனையாளர் என்ற ஸ்தானமாவது தனக்கு கிடைக்கும் என்று கருதி இருந்த ராஜாஜிக்கு  அடுத்த அடியாக அமைந்தது அண்ணாவின் அடுத்த செயல்.
பதவி ஏற்பதற்கு முன் தந்தை பெரியாரை போய் சந்தித்தார்
அய்யா இந்த ஆட்சி உங்களுடையது . உங்களின் விருப்படி ஆட்சி நடத்துவோம் என்றார்.
இது திரு ராஜாஜி அவர்களை மேலும் வெறுப்பேற்றியது
இவர்கள் தன்னுடன் சேர்ந்தது வெறும் தேர்தல் கூட்டணிதான்
ஆட்சி நடக்கப்போவது தந்தை பெரியார் வழிதான் என்று அவருக்கு புரிந்தது
இந்த நிகழ்வு பற்றி பெரியார் குறிப்பிடுகையில் அண்ணாவை கண்டு நான் புது மணப்பெண் போல வெட்கமடைந்தேன் . உண்மையில் அண்ணா என்னிடம் வராவிட்டாலும் நான் அவரை போய் சந்திப்பதாகத்தான் இருந்தேன் என்றார்.
வெறும் இரு அரசியல்வாதிகளுக்கு இடையே இருந்த நட்பை தாண்டி உண்மையான இரு மாமனிதர்களுக்கு இடையே இருந்த நட்பை இது காட்டுகிறது.
சுதந்திர இந்தியாவிலேயே முதல் தடைவையாக ஒரு மாநில கட்சி பலம் பொருந்திய காங்கிரஸ் கட்சியை தோற்கடித்து ஆட்சியை  பிடித்தது.
முழு உலகமும் ஒரு கணம் திரும்பி பார்த்தது
வெல்லவே முடியாத ஒரு சக்கரவர்த்திக்கு நிகரான பிரதமர் நேருவின் சாம்ராஜ்யத்தில் ஒரு பகுதி நொறுங்கி போய்விட்டதே.
அதுவும் அகில இந்திய காங்கிரசின் செயலராக பிற்காலத்தில் இந்தியாவின் கிங் மேக்கர் என்று அறியப்பட்ட காமராஜரின் மாநிலத்திலேயே காங்கிரசின் பட்டு சேலையில் பொத்தல்   விழுந்து விட்டதுவே!
இந்த  அதிசயம் எப்படி நிகழ்ந்தது?
இன்று போல் அன்று இணையம் இல்லை தொலைக்காட்சி இல்லை .. வானொலிகள் கூட மக்கள் வசம் இல்லை
ஒரு பத்து பதினைந்து ஆண்டுகளுக்குள் உருவான வெறும் மாநில கட்சி துணைக்கண்டத்தை கட்டியாண்ட கட்சி . பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை விரட்டி அடித்து துரத்திய கட்சி எப்படி திமுக என்ற சின்னசிறு நான்சென்ஸ்களிடம் தோற்று போனது? ( நான்சென்ஸ் என்ற வார்த்தை நேரு திமுகவினரை பார்த்து கூறியது)
இந்த கேள்விகளை ஆய்வுக்கு உட்படுத்தும் போது பேரறிஞர் அண்ணா என்றொரு மனிதர்தான் முதலில் நம் கண்முன்னே வருகிறார்.
திராவிட முன்னேற்ற கழகத்தின் அடிப்படை கொள்கைகளான சுயமரியாதை சமூகநீதி பகுத்தறிவு கோட்பாடுகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதில் மிகப்பெரிய அளவில் பணியாற்றியவர்கள் பெரும்பாலும் அதன் தன்னலம் கருதாத தொண்டர்கள்தான்.
அந்த தொண்டர்களுக்கு சரியான வழிகாட்டிகளாக பேரறிஞர்  அண்ணா கலைஞர் கருணாநிதி நாவலர் நெடுஞ்செழியன்   பேராசிரியர் அன்பழகன் போன்றவர்கள் மட்டுமல்ல இன்னும் ஏராளமான தலைவர்கள் பணியாற்றினார்கள் .
திமுகவின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு போய் சேர்ந்ததில் திரைப்படங்கள் பெரும்பங்காற்றின.
வேலைக்காரி பராசக்தி போன்ற படங்கள் மட்டுமல்ல ஏராளமான நாடகங்களும் பெரும்பங்காற்றின.
திமுகவின் கொள்கைகளை தமிழ்நாட்டின்  மூலைமுடுக்குகள் தோறும்  கொண்டுபோய் சேர்த்தத்தில் மக்கள் திலகம் எம்ஜியாரின் படங்கள்  அளப்பெரியர் பங்காற்றின.
மக்கள் திலகம் எம்ஜியாரும் கலைஞர் கருணாநிதியும்  பிற்காலத்தில் எதிர் எதிர் கட்சிகளில் இருந்து ஒருவரை எதிர்த்து அரசியல் செய்தாலும்  இருவரும் திராவிட இயக்கத்தின் எழுச்சிக்கு ஆற்றிய பங்கு வரலாற்று பெருமை வாய்ந்ததாகும்.
அண்ணாவின் காலத்திலேயே தலைவர்கள் தொண்டர்கள் இடையே அவ்வப்போது பல பிரச்சனைகள் தோன்றியதுண்டு  
உதாரணமாக இ வி கே சம்பத் போன்ற பலரும் பல காலக்கட்டங்களில் திமுகவை விட்டு வெளியேறிய வரலாறுகளும் உண்டு .
எல்லாவற்றையும் சமாளித்து திமுகவை ஆட்சிமேடை வரை அழைத்து வந்தவர் அண்ணா!
ஒரு கோட்பாட்டு ரீதியான சமூக இயக்கம் . சமூக புரட்சியை அடித்தளமாக கொண்ட ஒரு இயக்கம் அரசியல் அதிகாரத்தை ஜனநாயக அடிப்படையில் பெறுவதே ஒரு உலக சாதனைதான்
அதுவும் மூட நம்பிக்கைகள் மண்டிப்போய் கிடந்த அன்றைய தமிழ்நாட்டில் சுயமரியாதை சமுக நீதி சுயசிந்தனை கருத்தியலை சாதாரண மக்களிடையே கொண்டு போய் சேர்த்தததுதான்  மிகப்பெரிய சாதனை!
இந்த சாதனையை அண்ணா அவர்கள் தனியே பெற்றுவிடவில்லை
ஏனைய தலைவர்கள் தொண்டர்களின் தன்னலம் கருதாத பணிமூலம்தான் இது சாத்தியமாகி உள்ளது.
எல்லோரையும் ஒருங்கிணைத்து ஒரு படைத்தளபதியை விட பலமடங்கு மதிநுட்பத்துடன் படை நடத்தி வெற்றி கொண்ட மாமேதை பேரறிஞர் அண்ணா!
எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் தப்பி தவறி ஆரிய சங்கிகளே ஆட்சிக்கு வந்தாலும் அண்ணா அமைத்து வைத்த  சுயமரியாதை  சமூகநீதி சுயசிந்தனை பாதையை விட்டு வெகு தூரம் சென்றுவிட முடியாது.
ஏனெனில் அண்ணா அவர்கள் வெறும் நிலத்தில் மட்டும் திராவிடத்தை விதைத்து விட்டு செல்லவில்லை
ஓவொரு திராவிடர்களின் மனங்களில் விதைத்து விட்டு சென்றுள்ளார்
திராவிட கோட்பாட்டை மனதில் பதித்து கொண்ட ஒவ்வொரு மனங்களிலும் பேரறிஞர் அண்ணா வாழ்கிறார்!   
ஆரிய சங்கிகள் உலகம் முழுதும் தங்களின் ஆரிய மனுவாத பாசிசத்தை இன்று பரப்புரை செய்கிறார்கள்.
புலம்பெயரும் நாடுகள் தோறும் ஆரிய பாசிசத்தை விதைக்கிறார்கள்
இந்த காலக்கட்டத்தில் பேரறிஞர் அண்ணாவை நாம் உலகம் முழுவதும் கொண்டு செல்லவேண்டும்.
இந்த கருத்தை ஒட்டிய ஒரு அறைகூவலாகத்தான் இக்கட்டுரையை எழுதி உள்ளேன்.

கருத்துகள் இல்லை: