வெள்ளி, 6 டிசம்பர், 2024

முரசொலி அறக்கட்டளை தொடர்ந்த வழக்கு ரத்து: BJP முருகனுக்கு திடீர் நிம்மதி

தினமலர் ; புதுடில்லி : மத்திய அமைச்சர் முருகனுக்கு எதிராக முரசொலி அறக்கட்டளை தாக்கல் செய்திருந்த அவதுாறு வழக்கை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் முருகன், கடந்த 2020ல் அளித்த பேட்டியில், 'முரசொலி அறக்கட்டளையின் சென்னை அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளது' என்று கூறியிருந்தார். இதையடுத்து அவருக்கு எதிராக, முரசொலி அறக்கட்டளை சார்பில் அவதுாறு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு, சென்னையில் உள்ள எம்.பி., - எம்.எல்.ஏ-.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முருகன் தாக்கல் செய்த மனு, கடந்த ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டது.

இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முருகன் மேல்முறையீடு செய்தார். இந்த மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரத்தில் யாரையும் அவதுாறு செய்யும் எண்ணம் இல்லை என முருகன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் பி.ஆர். கவாய், கே.வி. விஸ்வநாதன் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது முருகன் தரப்பு வாதத்தை ஏற்றும், அதன் அடிப்படையில், அவதுாறு வழக்கைத் தொடரப்போவதில்லை என்று முரசொலி அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டதையும் அமர்வு குறிப்பிட்டது.

இதையடுத்து, அவதுாறு வழக்கை ரத்து செய்ய மறுத்து உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்வதாக அமர்வு குறிப்பிட்டது. மேலும், சென்னை நீதிமன்றத்தில் உள்ள முருகனுக்கு எதிரான அவதுாறு வழக்கை ரத்து செய்தும், உச்ச நீதிமன்ற அமர்வு உத்தரவிட்டது.

கருத்துகள் இல்லை: