சனி, 2 நவம்பர், 2024

களவாடப்பட்ட இந்திய மாநிலங்களின் தேசிய மொழிகள்!

 ராதா மனோகர் : கடந்த நூற்றாண்டில் திராவிடம் சாதித்த சாதனைகளில் தலையாயது என்று எதை கூறுவது என்ற தடுமாற்றம் ஏற்படுவது இயற்கை!
அந்த அளவுக்கு பலதுறைகளில் சாதனைகள் அரங்கேறியுள்ளன.
இன்று தென்னிந்திய மாநில திரையுலகம் கோடிக்கணக்கான மக்களின் வேலை வாய்ப்பாகவும் மொழிபரம்பலுக்கு உறுதுணையாகவும் விளங்குகிறது.
வடமாநிலங்கள் இந்தி ஆதிக்கத்தை கண்டுகொள்ளாமல் விட்டதன் விளைவாக தங்கள் மாநில மொழி அடையாளங்களை மட்டுமல்ல அவற்றோடு சேர்ந்த தொழில்களையும் இந்தி பேயிடம் பறிகொடுத்து விட்டு நிற்கின்றன!
மீள்பதிவு  :  
களவாடப்பட்ட இந்திய மாநிலங்களின்  தேசிய மொழிகள்!
வடஇந்திய மாநில மொழிகள் மீது நடத்தப்பட்ட பாரிய மொழிச்சுத்திகரிப்பு!   
மீள் பதிவு ராஜஸ்தான் குஜராத் மகாராஷ்டிரம் பஞ்சாப் வங்காளம் ஒடிஷா மேலும் பல மொழி பேசும் மாநில மொழி திரைப்படங்கள் பாடல்கள் பெரும்பாலும் அழிந்தே விட்டன.
தமிழ்நாடு முன்னெடுத்த ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தின் விளைவாக தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாள திரைப்படங்களும் பாடல்களும் இன்றும் உயிரோடு உள்ளன.


மாநில மொழிகளை தமிழ்நாடு காப்பாற்றியதன் மூலமாக கலைத்துறையிலும் ஊடக துறையிலும் பல இலட்சம் மக்களின் வாழ்வாதாரமாக தென்னிந்திய கலைத்துறை உயிரோடு இருக்கிறது.
இந்திய மக்கள் தொகையில் தமிழர்களின் வீதம் 6.7 மட்டுமே .ஆனால் தமிழ் திரைப்படங்களின் வியாபாரம் 2019 கணக்கின் படி இந்தியாவில்  13 வீதமாகும்  
இதைவிட உலக நாடுகளில் தமிழ் திரைப்படங்களும் பாடல்களும் தமிழக ஊடகங்களினால் கிடைக்கும் அந்நிய செலவாணியும் இன்னும் சரியாக கணக்கிடப்படவில்லை  
அவை குறிப்பிடத்தக்க அளவில் தற்போது உயர்ந்துள்ளன. குறிப்பாக திரைப்படங்களின் டிஜிட்டல் வெளியீட்டுக்கு பின்பாக.
வெறும் பத்து பதினைந்து சதவீதம் அளவே இருந்திருக்க வேண்டிய ஹிந்தி திரைப்படங்களின் இந்திய வியாபாரம்,
இன்று 44 வீதமாக வீங்கி இருப்பது வட இந்திய மாநில மொழிகளின் அழிவினால் கிடைத்த திருட்டு வியாபாரமாகும்.
தமிழ்நாட்டின் மீது வடவர்கள் மேற்கொள்ளும் காலனித்துவ பாணி ஆதிக்கத்தின் பின்னணியில் ஹிந்தி மொழி திணிப்பு இருப்பதை இந்த கண்ணோட்டத்திலும் நோக்கவேண்டும் .
தமிழ் கன்னடம் தெலுங்கு மலையாளம் போன்ற மொழிகளுக்குள் ஊடுருவி அழித்து விட்டால் பெரும் காப்பரேட்டுக்களின் விளம்பர செலவும் மிச்சமாகும்
ஒரே மொழி பேசும் வாடிக்கையாளர்கள் அல்லது மக்கள் மட்டுமே இருந்தால் காப்பரேட்டுக்களின் வியாபாரத்துக்கு அது ஒரு நிரந்தர இலாபம் கொடுக்கும் வசதியாகும்
குஜராத்தியை தாய்மொழியாக கொண்ட அதானி அம்பானி போன்ற பனியாக்கள் தங்கள் குஜராத்தி மொழியை கூட மறந்துவிட்டு ஹிந்தி குட்டையில் ஊறியதன் இரகசியம் இதுதான்.
ஹிந்தி மொழியை அவர்களின் வியாபாரத்திற்கு அதிக வாடிக்கையாளர்களை இழுத்து கொண்டுவரும் மொழியாக உருவாக்க முயல்கிறார்கள்.
தங்கள் தாய் மொழியே அழிந்தாலும் பரவாயில்லை தங்கள் பணப்பெட்டி நிரம்பினால் போதும் என்று கருதும் பேராசை பிசாசுகள் அவர்கள்
ஒவ்வொரு மொழியும் அழியும் போது அந்த மொழியின் வரலாற்று சுவடுகள் மட்டும் அழியவில்லை
அந்த மொழி பயணிக்கும் கலைகளும் கலாச்சாரமும் கூடவே அழிகிறது  
கதாசிரியர்கள் வசனகர்த்தாக்கள் பாடலாசிரியர்கள் பாடகர்கள் இசையமைப்பாளர்கள் நடிகர்கள் பத்திரிகை ஆசிரியர்கள் நிருபர்கள் எழுத்தாளர்கள் என்று கணக்கில் அடங்காத பெரும் தொகையான மக்களின் வாழ்வும் கேள்விக்கு உரியதாகிறது.
ராஜஸ்தான் குஜராத் வங்காளம் ஒடிஷா பஞ்சாப் போன்ற பல மாநில மக்களிடம் கேட்டு பாருங்கள்
எங்கே உங்கள் கதாசிரியர்கள்?
எங்கே உங்கள் வசனகர்தாக்கள்?
எங்கே உங்கள் எழுத்தாளர்கள்?
எங்கே உங்கள் பாடகர்கள்?
எங்கே உங்கள் இசையமைப்பாளர்கள்?
எங்கே எங்கே எங்கே ?
எந்த பதிலும் தெரியாமல் முழிப்பார்கள்
அங்கே தெரிகிறது ஹிந்தி எதிர்ப்பு போரின் வெற்றி
அங்கே தெரிகிறது திராவிடத்தின் முன்னோக்கிய பாய்ச்சல்!.
மீள்பதிவு
உதாரணமாக ,
ராஜஸ்தான் மொழி ( மார்வாடி)  சுமார் ஐந்து கோடி மக்களின் தாய்மொழி என்று கருதப்படுகிறது.
இந்த மொழி இந்திமொழியில் கரைந்து போய்விட்டது  இவர்களின் சொந்த மொழி பாடல்கள் திரைப்படங்கள் வரலாறு இலக்கியம் போன்றவை எல்லாம் காணாமலே போய்விட்டது
ராஜஸ்தான் பஞ்சாப் மற்றும் பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாணத்திலும் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் உள்ளனர்.
ராஜஸ்தானி மொழியானது பல வழக்கு மொழிகளின் கலப்பு மொழி போல உள்ளது
அழிவின் விழிம்பில் உள்ள இந்த மொழியை மீட்டெடுக்கும் முயற்சி தற்போது ஓரளவு நடைபெறுகிறது.
கவலைக்கு உரியவிடயமாக இளந்தலை முறையினருக்கு இந்த மொழி தெரியவில்லை  
இந்த காணொளியில்  ( பின்னூட்டத்தில்)  இவர்கள் இதை பேச முயலும் காட்சிகள் பார்ப்போரை கவலைக்கு உள்ளாக்கும்.
ராஜஸ்தானின் வட்டார வழக்கு மொழிகள் பற்றிய ஒரு குறிப்புக்கள் பின்வருமாறு :
மால்வி மொழி  ஒரு கோடி மக்கள் பேசும் மொழி மத்திய பிரதேசத்தில் உள்ள மால்வா பிரதேசத்தில் உள்ளனர்
துந்துரி மொழி எண்பது இலட்சம் மக்கள் பேசுகிறார்கள் ராஜஸ்தானில் உள்ள துந்தார் பிரதேசத்தில் இது பேசப்பட்டது
ஹாரோலி மொழி 40 இலட்ச்சம் மக்கள் தாய் மொழியாக கொண்டுள்ளனர்.ராஜஸ்தானில் ஹாடோதி பிரதேசத்தில் உள்ளனர்
மேவாரி மொழி 50 இலட்சம் மக்களின் தாய்மொழி ராஜஸ்தானில் மேவார் பிரதேசத்தில் உள்ளனர். .
அகினாவாதி மொழி 30 இலட்சம் மக்களின் தாய்மொழி .ஹரியானா ராஜஸ்தான் மாநிலங்களில் உள்ள அஹினாவாதி பிரதேசத்தில் உள்ளனர்.
சேகனாவதி மொழி 30 இலட்சம் மக்களின் தாய்மொழி.ராஜஸ்தானில் உள்ள செகாவதி பிரதேசத்தில் உள்ளனர்.   
வாக்வாதி சுமார் 22 இலட்ச்சம் மக்களின் தாய்மொழி . துங்கப்பூர் பன்ஸ்வார்ஸ் பகுதிகளில் உள்ளனர் .
பாக்ரி மொழி சுமார் 14 இலட்ச்சம் மக்களின் தாய்மொழி .வடக்கு ராஜஸ்தானிலும் வடமேற்கு ஹரியானவிலும் உள்ளனர் .
நிமாதி மொழி சுமார் 22 இலட்ச்சம் மக்களின் தாய்மொழி மத்திய பிரதேசம் ராஜஸ்தான் பகுதிகளில் உள்ளனர்

கருத்துகள் இல்லை: