மின்னம்பலம் - christopher : மதச்சார்பின்மை, எல்லோருக்கும் எல்லாம், சமூக நீதி என நல்ல விஷயங்களை தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் விஜய் அழுத்தமாக பேசியிருப்பதாக துரை வைகோ எம்.பி இன்று (அக்டோபர் 29) பாராட்டு தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த 27ஆம் தேதி விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது.
அதில் கட்சியின் கொள்கைகள், செயல்திட்டங்கள் குறித்த விஜய்யின் பேச்சு தற்போது தமிழக அரசியல் களத்தில் முக்கிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.
அவரது பேச்சை ஆளும் கட்சியான திமுக, அதன் கூட்டணி, பாஜக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், எதிர்க்கட்சியான அதிமுகவினர் வரவேற்று வருகின்றனர்.
இந்த நிலையில் திமுக கூட்டணி கட்சியில் இடம்பெற்றுள்ள மதிமுக கட்சியின் முதன்மை செயலாளரும், திருச்சி எம்.பியுமான துரை வைகோ விஜய் யின் பேச்சை வரவேற்று கருத்து தெரிவித்துள்ளார்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள மதிமுக அலுவலகத்தில் துரை வைகோ இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர், “சகோதரர் விஜய்யை பொருத்தவரை, எல்லாருக்கும் எல்லாம், சமூக நீதி, மதசார்பின்மை தான் அவர் சொல்லியிருந்த நல்ல விஷயங்கள். இதனை அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லும்போதே சொல்லியிருந்தார். இப்போது மாநாட்டில் அதை அழுத்தமாக கூறியுள்ளார். இதை வரவேற்கிறேன். பாராட்டுகிறேன்.
திரைத்துறையில் அவர் முக்கிய மிகப்பெரிய நட்சத்திரம். அவர் பின்னால் லட்சக்கணக்கான இளைஞர்கள் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் விஜய்யின் சேவை தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் தேவை. ஆனால் மதவாத சக்திகளுக்கு மறைமுகமாக வாய்ப்பு கொடுக்கக்கூடிய சூழல் ஏற்படக்கூடாது.
விஜய் படித்த இளைஞர். 50 வயதாகியுள்ள அவருக்கு சிறந்த அனுபவம் உள்ளது. வருங்காலங்களில் அவர் யோசித்து நிதானமாக முடிவு எடுக்க வேண்டும். யாரோ சொல்கிறார்கள் என்பதற்காக முடிவெடுத்து மதவாத சக்திகளுக்கு ஆதரவாக போய் விடக்கூடாது.
தற்போது இருக்கக்கூடிய அரசியலில் மதவாத பிரிவினைவாதிகளை எதிர்க்கும் இரண்டாவது அணியாக திராவிடம் இருக்கிறது. அதற்குப் பிறகு மூன்றாவது அணிக்கு வாய்ப்பு கம்மிதான்.
திருமாவளவன், செல்வப்பெருந்தகை ஆகியோர் அவர்களுடைய இயக்க தோழர்களின் நிலைப்பாட்டை பிரதிபலிக்கின்றனர். அது தவறு இல்லை. அவர்களுடைய ஆசை. ஆனால் ஆட்சியில் பங்கு என்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை” என துரை வைகோ தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக