செவ்வாய், 29 அக்டோபர், 2024

கனடா வால்மார்ட் பேக்கரியில் எரிந்த நிலையில் இந்திய சீக்கிய பெண்

 தினமணி : கனடாவில் பணிபுரிந்து வந்த இந்திய சீக்கிய பெண் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது அந்நாட்டில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த 19 வயதான சீக்கிய பெண் ஒருவர், கனடாவின் ஹாலிஃபேக்ஸ் நகரில் உள்ள பல்பொருள் அங்காடியின் பேக்கரியில் இருந்த அடுப்பிலிருந்து சடலமாக சனிக்கிழமை (அக். 19) இரவு 9.30 மணியளவில் மீட்கப்பட்டார்.
இந்த சம்பவத்திற்கான காரணத்தை விரைவில் கண்டறியுமாறு வலியுறுத்தி, மரிட்டைம் சீக்கிய சமூக அமைப்பினர் உள்பட பொதுமக்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.



இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவத்தில் விசாரணை நடப்பதாகவும், இது தொடர்பான வதந்திகளை சமூக ஊடகங்களில் யாரும் பரப்ப வேண்டாம் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அப்பெண்ணின் குடும்பத்தினரிடம் இரங்கல் தெரிவித்த வால்மார்ட் நிறுவனம், எந்த நிலையிலும் உடனிருப்போம் என்றும் கூறியுள்ளனர்.

ஏற்கெனவே, இந்தியாவுக்கும் கனடாவுக்குமான உறவில் அண்மையில் விரிசல் ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்திய பெண்ணின் மர்ம மரணமும் இரு நாட்டு உறவில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை விவகாரத்தில் இந்தியத் தூதருக்கு தொடர்பிருப்பதாக கனடா கூறியதற்கு, அண்மையில் இந்தியா கடும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தது.

மேலும், கனடா மக்களை குறிவைத்து நடத்தப்படும் குற்றச்செயல்களுக்கு இந்திய அரசு துணை நிற்பதாக, இந்தியா மீது கனடா பிரதமர் குற்றஞ்சாட்டியிருந்தது, இரு நாட்டு உறவுகளில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, கனடா பிரதமரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து, இந்தியாவில் உள்ள கனடா தூதா் உள்ளிட்ட 6 அதிகாரிகள் வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டதற்கு பதிலடி நடவடிக்கையாக, கனடாவுக்கான இந்திய தூதா் உள்பட கனடாவிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகள் உடனடியாக வெளியேற கனடா அரசு உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: