மின்னம்பலம் -Kavi: உயர்கல்விக்காக உங்கள் குழந்தைகளை கனடாவுக்கு அனுப்ப வேண்டாம் என்று பெற்றோருக்கு கனடாவுக்கான இந்திய தூதர் சஞ்சய் வர்மா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கனடாவில் கடந்த ஆண்டு அடையாளம் தெரியாத நபர்களால் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டார்.
அதில் சஞ்சய் வர்மாவையும், பிற இந்திய தூதரக அதிகாரிகளையும் கனடா தொடர்புபடுத்தியது.
இந்தக் குற்றச்சாட்டுகளால் கடும் அதிருப்தி அடைந்த மத்திய அரசு,
இந்தியாவில் இருந்து கனடா தூதர் மற்றும் அந்நாட்டின் ஐந்து தூதரக அதிகாரிகளை வெளியேற உத்தரவிட்டதுடன்,
கனடாவில் இருந்து சஞ்சய் வர்மா மற்றும் ஐந்து இந்திய தூதரக அதிகாரிகளை தாயகத்துக்கு திரும்ப அழைத்துக் கொள்வதாகவும் அறிவித்தது.
இந்த நிலையில் இந்தியாவுக்கு வந்துள்ள தூதர் சஞ்சய் வர்மா அளித்த பேட்டியில்,
“தற்போது, கனடாவில் நிலைமை சரியில்லை. எனவே, கனடாவில் உயர்கல்வி பயில்வதற்காக உங்கள் குழந்தைகளை இந்தியாவிலுள்ள பெற்றோர் அனுப்ப வேண்டாம்.
தரமற்ற வாழ்க்கை நிலைமை, வேலையின்மை, அதிகரித்து வரும் காலிஸ்தான் பிரச்சினை போன்றவை நிலவி வருவதால் இந்திய மாணவர்கள் அங்கு செல்ல வேண்டாம்.
நல்ல வசதி படைத்த மாணவர்கள் கனடாவுக்கு உயர்கல்வி பயில வரும்போது, அவர்கள் நெரிசலான அறைகளில் தங்குமாறு வற்புறுத்தப்படுகின்றனர். ஒரே அறையில் எட்டு மாணவர்கள் இருக்குமாறு நிர்பந்தம் செய்யப்படுகின்றனர்.
தரமான கல்வி கிடைக்கும் என்ற எண்ணத்தில் வருபவர்கள், குறைந்த அளவிலான வகுப்புகள் நடத்தப்படும் கல்வி நிறுவனங்களில் சேர வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. மேலும், அவர்கள் குறைந்த ஊதியத்தில் பகுதி நேரப் பணியில் சேரவும் இது வழிவகுக்கும்.
ஒரு வாரம் முழுவதும் நிறுவனத்திலோ அல்லது கடையிலோ தினக்கூலி போன்று அவர்கள் வேலை செய்ய வேண்டிய நிலை உள்ளது.
கல்வி மீது அவர்கள் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு அவர்கள் பகுதி நேர வேலைக்குத் தள்ளப்படுகின்றனர். டாக்ஸி டிரைவர் போன்ற வேலைகளில் அவர்கள் ஈடுபடுகின்றனர்.
கனடாவில் உள்ள சமூக நிலைமை கவலை அளிக்கிறது. இளம் மாணவர்களிடையே அவர்கள் காலிஸ்தான் விவகாரங்களை விதைக்கின்றனர். காலிஸ்தானுக்கு ஆதரவு தராத மாணவர்களுக்கு மிரட்டல் விடுக்கப்படுகிறது.
காலிஸ்தான் இயக்கத்தில் சேரும் அப்பாவி மாணவர்கள் கிரிமினல்களாகவும், கேங்ஸ்டர்களாகவும், காலிஸ்தானி கிரிமினல்களாகவும் மாறுகின்றனர்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
ராஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக