சனி, 15 ஜூலை, 2023

திராவிட சினிமா .. விமர்சனங்கள் மட்டுமே வரலாறாகி விடக்கூடாது

 திராவிட இயக்க கொள்கைகளை தமிழ்நாட்டின் பட்டிதொட்டிகளையும் தாண்டி இலங்கை மலாயா பர்மா மொரிசியஸ் போன்ற நாடுகளுக்கும் எடுத்து சென்றதில்,
அன்றைய  மேடை பேச்சுக்களும்  கொள்கை பாடல்களும் நாடகங்களும் திரைப்படங்களும்  திரைபட பாடல்களும் பெரும் பங்காற்றி உள்ளன.
நான் திரைப்படம் பார்க்கும் வயதை எட்டும் முன்பே கூட என் காதில் அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா என்ற வரிகள் ஆழமாக பதிந்து விட்டிருந்தது
இப்போது கேட்டாலும் இன்றுதான் இந்த பாடலை புதிதாக கேட்பது போன்ற புத்துணர்வு ஏற்படுகிறது.
பேரறிஞர் அண்ணாவின் வேலைக்காரியில் தொடங்கி பராசக்தியில் எகிறி பாய்ந்த திராவிட திரையின் ஆட்சி எவ்வளவு பிரமாண்டமானது என்பதை நாம் சற்று மறந்து விட்டோம் என்று தோன்றுகிறது.
அன்றைய காலக்கட்டத்தில் மேற்கு நாடுகளை போலல்லாது தெற்கு ஆசிய மிகவும் பின் தங்கி இருந்தது.
அந்த இருண்ட காலத்தில் ஆசியாவின் தென்கோடியில் உதித்த திராவிட சூரியனின் வரலாறு உலகிற்கு இன்னும் சரியாக சொல்லப்படவில்லை என்று கருதுகிறேன்.


நம்மவர்களுக்கே கூட இன்னும் சரியான புரிதல் இல்லையோ என்றும் தோன்றுகிறது.
சாதாரண மக்களின் வாழ்வியலை பற்றி சிந்தித்து செயலாற்றியதில் பல வளர்ந்த மேற்கு நாடுகளை விட தமிழ்நாடு தூரநோக்கோடு செயலாற்றி இருப்பதுதான் அந்த திராவிட சிந்தனையின் மாண்பு!
உதாரணங்கள் எத்தனையோ கூறமுடியும் ..
இலவச கண் புரை அறுவை சிகிச்சையில் தொடங்கி பள்ளிகளில் சத்துணவு  மகளிர் இலவச பேருந்து வரை கூறிக்கொண்டே போகலாம்!
இவை எல்லாம் பலம் அற்ற மனிதர்களுக்கு வாழ்வில் வாய்ப்புக்களையும் சக்தியையும் வழங்கிய திட்டங்கள்தான்!
 
தமிழ்நாட்டின் சமூகநீதி திட்டங்களுக்கு இணையாக உலகில் எத்தனை நாடுகளில் எத்தனை திட்டங்கள் நடைமுறையில் இருந்தன?  பதில் தேடவேண்டிய கேள்வி இது!
 
திராவிட இயக்கம் விதைத்த அறிவு புரட்சியின் விளைச்சல் இன்னும் அதிகமாக இருந்திருக்க வேண்டுமே என்ற ஆதங்கமும் எனக்கு சற்று உண்டு!
மறைந்த எம்ஜியாரின் திரைப்படங்கள் மக்களிடையே உண்டாக்கிய தாக்கங்கள் பற்றியும் நாம் போதியளவு பேசவில்லை என்றும் எண்ணுகிறேன்!
கலைஞருக்கும் எம்ஜியாருக்கும் இடையே உண்டான கசப்பு அரசியல் என்பது தற்போது காலாவதியாகி விட்டது என்றுதான் எண்ணுகிறேன்
இருவரும் தோளோடு தோளாக நின்று களமாடியவர்கள்.
எம்ஜியார் மறைந்த போது வேறு எவரையும் விட அதிகமாக கண்ணீர் சிந்தித்தவர் கலைஞர்தான்!
இருவரும் எதிர்திசையில் அரசியல் செய்த காலத்தையும் தாண்டி திராவிட இயக்கத்திற்கு இருவரும் ஆற்றிய தொண்டு எவராலும் மறுக்க முடியாதது
நிச்சயம் மறக்கவும் கூடாது.!
இருவருமே வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் திராவிட கருத்துக்களை மக்களிடம் எடுத்து சென்றுள்ளார்கள்
வெறும் விமர்சனங்கள் மட்டுமே வரலாறாகி விடக்கூடாது
இந்த வகையில் எம்ஜியாரின் திராவிட சினிமா பற்றிய வரலாற்று பதிவுகளை வரவேற்கிறேன்!

கருத்துகள் இல்லை: