புதன், 12 ஜூலை, 2023

நடிகர் விஜய் .. 234 தொகுதிகளிலும் இரவு பாடசாலைகளை தொடங்க திட்டம் . காமராஜர் பிறந்தநாளில்

tamil.oneindia.com  - Jeyalakshmi C : சென்னை: தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் இரவு பாடசாலைகளை தொடங்கப்போவதாக நடிகர் விஜய் அறிவித்துள்ளார்.
காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு இந்த இரவு பாடசாலை திட்டம் தொடங்கப்பட உள்ளத
கல்வி உதவித்தொகைகளை வழங்கிய நடிகர் விஜய் இளம் தலைமுறை வாக்காளர்களை கவரும் வகையில் இரவு பாடசாலை திட்டத்தை தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார்.
நடிகர் விஜய் தன் தொண்டர்கள் மூலம் பல சமூக சேவைகளை செய்து வருகிறார்.
அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அதற்காக போஸ்டர்கள் ஒட்டியும் அழைப்பு விடுத்து வருகின்றனர்.


இந்த ஆண்டு 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை சந்தித்தார் நடிகர் விஜய். 234 சட்டசபை தொகுதிகளில் உள்ள 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற தலா மூன்று மாணவர்கள் வீதம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ - மாணவியருக்கு பரிசு, கல்வி உதவித் தொகை வழங்கினார். மேடையில் பேசிய மாணவர்கள் நடிகர் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.

நடிகர் விஜய்யின் இந்த செயல் அரசியல் வருகைக்கான முன்னோட்டமாக இருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் அரசியல் பயணம் குறித்து நடிகர் விஜய் இப்போது வரை வாய் திறக்கவில்லை. நடிகர் விஜய்யும் வெளிப்படையாக அரசியல் குறித்து அறிவிக்காவிட்டாலும், ரசிகர் மன்றத்தை எல்லாம் விஜய் மக்கள் இயக்கம் என ஒருங்கிணைத்து செயல்பட்டு வருகின்றனர்.

நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்துக் கடந்த சில ஆண்டுகளாகவே பேச்சு உள்ளது. அதற்கேற்ப விஜய்யின் படங்களிலும் அரசியல் வசனங்கள் தவறாது இடம் பெறுகின்றன. தலைவா படத்தில் டைம் டூ லீட் என்ற வாசகம் இடம் பெற்றது. கத்தி, மெர்சல், சர்க்கார் என அடுத்தடுத்த படங்களிலும் அரசியல் வசனங்கள் இடம் பெற்றன. ஆடியோ வெளியீட்டின் போது அரசியல் திட்டம் குறித்துத் தொடர்ந்து மறைமுகமாக வெளிப்படுத்தி வருபவர் விஜய்.

கடந்த ஆண்டு காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு அனுமதி அளித்தார் விஜய். தனது பெயரையும் படத்தையும் பயன்படுத்தவும் அனுமதி அளித்தார் விஜய். விஜய் ரசிகர்கள் வெற்றி பெற்று விஜய் கட்சியின் அரசியல் பயணத்திற்கு பிள்ளையார் சுழி போட்டனர். வெற்றி பெற்ற ரசிகர்களை சந்தித்தார் விஜய்.

விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மூலம் நிறைய உதவிகளை செய்து வருகிறார். அது போல் அவரது ரசிகர்களையும் மக்கள் நல பணிகளில் ஈடுபடுமாறு அறிவுறுத்தி வருகிறார். உள்ளாட்சித் தேர்தலில் ஆழம் பார்த்த விஜய், அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகி வருகிறார். கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை தமிழகம் முழுவதும் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தினர் கொண்டாட வேண்டும் என்றும், அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதனால் விஜய் ரசிகர்கள் தமிழகம் முழுவதும் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதன்மூலம் நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போவதற்கான அறிகுறி தான் என்று தகவல் பரவியது.

தற்போது நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் அரசியல் இயக்கமாக மாறி வருகிறது. அரசியலுக்கு வருவதாக அவர் வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும், அவரது இயக்கம் மற்றும் அவரது செயல்பாடுகளால் விரைவில் விஜய் அரசியலுக்கு வருவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே அதிகரித்துள்ளது.

நடிகர் விஜய்யின் அறிவுறுத்தலின்படி, கடந்த மாதம் 28ஆம் தேதி உலக பட்டினி தினத்தில் 234 தொகுதிகளிலும் 'தளபதி விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவையகம்' திட்டம் மூலம் ஏழைகளுக்கு மக்கள் இயக்க நிர்வாகிகள் மதிய உணவு வழங்கினர்.

இந்த நிலையில்தான் நடிகர் விஜய் அடுத்த தலைமுறை வாக்காளர்களான மாணவர்களை சந்தித்து பரிசுகளை வழங்கி வாழ்த்தினார். தற்போது தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து பேசி வருகிறார். இரண்டாவது நாளான இன்று விஜய் மக்கள் இயக்க தொகுதி பொறுப்பாளர்களுடன் நடிகர் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார். பெரியார், காமராஜர், அண்ணாவை பற்றி பள்ளி மாணவர்கள் படிக்க வேண்டும் என மாணவர்களுக்கு நடிகர் விஜய் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தார். இந்நிலையில் இந்த கூட்டத்தில் 234 தொகுதிகளிலும் இரவு நேர பாடசாலையை காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15ஆம் தேதி தொடங்க நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளதாக விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட பொறுப்பாளர்கள் தெரிவித்தனர்.

கல்வி கண் திறந்த காமராஜர் பிறந்தநாள் தமிழ்நாடு முழுவதும் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. கண்தானம் செய்வதற்காக விழியகம், இரத்த தானம் செய்வதற்காக குருதியகம், பசி பட்டினியால் தவிப்போருக்காக விருந்தகத்தை தொடங்கிய விஜய் தற்போது பள்ளி மாணவர்களுக்காக இரவு நேர பாடசாலையை தொடங்குகிறார். மேலும் முழு நேரமாக அரசியலுக்கு வந்துவிட்டால் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என நடிகர் விஜய் பொறுப்பாளர்கள் முன்னிலையில் பேசியதாக கூறப்படுகிறது. விஜய் எப்போது அரசியலுக்கு வந்தாலும் தீவிரமாக பணியாற்ற தயாராக இருப்பதாக மக்கள் இயக்க பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

English summary
Actor Vijay has announced that he will start night schools in all 234 constituencies across Tamil Nadu. On the occasion of Kamaraj's birthday, the night school program will be started. Actor Vijay, who has provided scholarships, has announced that he will start a night school scheme to attract the young generation of voters.
 

கருத்துகள் இல்லை: