செவ்வாய், 15 மார்ச், 2022

பா.ஜ.கவின் சட்டவிரோத நன்கொடை (கப்பம்) வசூல்... RTI மூலம் அம்பலம் ‘நமோ' ஆப் மூலம்

 கலைஞர் செய்திகள்   : பா.ஜ.க நடத்திவரும் சட்டவிரோத நன்கொடை வசூல்... RTI மூலம் அம்பலமான மாபெரும் முறைகேடு!
சட்டத்திற்குப் புறம்பாக அரசு திட்டங்களின் பெயரில் பா.ஜ.க, மக்களிடம் நன்கொடை வசூலித்து வருவது அம்பலமாகியுள்ளது.
கடந்தாண்டு டிசம்பர் 25ஆம் தேதி, முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாளை ஒட்டி, பா.ஜ.க, பிரதமர் மோடியின் 'நமோ' செயலி மூலம் நன்கொடை வசூல் பிரச்சாரத்தைத் தொடங்கியது. இந்த பிரச்சாரத்தில் பா.ஜ.கவினர் மற்றும் பொதுமக்களிடம் இருந்து கட்சிக்கு ரூ.5 முதல் ரூ.1,000 வரை நன்கொடை கோரப்பட்டது.
பிரதமர் மோடி ரூ.1,000 நன்கொடை அளித்ததோடு, நன்கொடை ரசீது நகலை ட்வீட் செய்து, பா.ஜ.கவை பலப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். தொடர்ந்து, நாடு முழுவதுமுள்ள பா.ஜ.க தலைவர்கள், அமைச்சர்கள், கட்சித் தொண்டர்கள் என பலரும் நன்கொடைகளை அளித்து, பொதுமக்களிடமும் நன்கொடை கோரி வருகின்றனர்.



நமோ செயலியின் இந்தப் பிரச்சாரத்தில் பா.ஜ.கட்சிக்கான நிதி 'ஸ்வச் பாரத்' மற்றும் 'பேட்டி பச்சாவோ பேட்டி பதாவோ திட்டம்' ஆகிய பெயர்களில் கோரப்பட்டது. இவை இரண்டும் பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசின் முக்கியமான திட்டங்களாகும். ஒரு அரசியல் கட்சி, அரசின் திட்டங்களின் பெயரில் சட்டத்திற்கு விரோதமாக நிதி திரட்டுவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக ஊடகவியலாளர் அரவிந்தாக்ஷன், அரசுத் திட்டங்களுக்கு நிதி சேகரிக்க ‘நமோ’ செயலி அனுமதி பெற்றுள்ளதா என்பது உள்ளிட்ட 16 கேள்விகளுடன் ஆர்.டி.ஐ மூலம் கேள்வி எழுப்பினார்.

இந்த RTI விண்ணப்பத்திற்குப் பதிலளித்த பிரதமர் அலுவலகம், "தேடப்படும் தகவல் பிரதமர் அலுவலகம் வைத்திருக்கும் பதிவின் ஒரு பகுதியாக இல்லை" என்று பதிலளித்தது.
பா.ஜ.க நடத்திவரும் சட்டவிரோத நன்கொடை வசூல்... RTI மூலம் அம்பலமான மாபெரும் முறைகேடு!

'பேட்டி பச்சாவோ பேட்டி பதாவோ' திட்டத்திற்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள் நிதி திரட்ட அனுமதிக்கப்படுமா என்றும், 'நமோ செயலி'க்கு நிதி திரட்ட ஏதேனும் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என்றும் கேட்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்துக்கு மற்றொரு ஆர்.டி.ஐ விண்ணப்பம் அனுப்பப்பட்டது.

அரவிந்தாக்ஷன் எழுப்பிய ஆர்.டி.ஐ கேள்விகளுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் அனுப்பிய பதிலில், “பேட்டி பச்சாவோ பேட்டி படாவோ திட்டத்திற்காக நமோ செயலி மூலம் நிதி திரட்ட சிறப்பு அனுமதி எதுவும் வழங்கப்படல்லை” எனத் தெரிவிக்கப்பட்டது.

'ஸ்வச் பாரத்’ திட்டத்தைச் செயல்படுத்தும் குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகத்திடம் எழுப்பிய ஆர்.டி.ஐ விண்ணப்பத்திற்கும், இதுபோன்ற அனுமதி எதுவும் வழங்கப்படுவதில்லை என பதில் கிடைத்துள்ளது.

ஆளும் கட்சியாக உள்ள பா.ஜ.க தனது பதவியை தவறாக பயன்படுத்தி, அரசின் திட்டங்கள் என்ற பெயரில், சட்டவிரோதமாக நன்கொடை வசூலித்து வருவது ஆர்.டி.ஐ பதில்களின் மூலம் அம்பலமாகியுள்ளது.

கருத்துகள் இல்லை: