வியாழன், 17 மார்ச், 2022

5 டோல்கேட்களை அகற்றுங்கள்: கட்கரியிடம் வலியுறுத்திய அமைச்சர் எ.வ.வேலு

5 டோல்கேட்களை அகற்றுங்கள்: கட்கரியிடம் வலியுறுத்திய எ.வ.வேலு

மின்னம்பலம் : ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின்கட்கரியைத் தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று இரவு சந்தித்துப் பேசினார்.
அப்போது பல்வேறு கோரிக்கைகளை அடங்கிய மனுவையும் கொடுத்தார். அவருடன் திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி.யும் உடன் இருந்தார். இதையடுத்து தமிழ்நாடு அரசு தரப்பில் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகளைப் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் நிதின்கட்கரி உறுதியளித்துள்ளார்.


இந்த சந்திப்பு இரவு நடைபெற்ற நிலையில், இதுதொடர்பாக அமைச்சர் எ.வ.வேலு டெல்லியில் இன்று(மார்ச் 17) காலை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, “ஒன்றிய அமைச்சரைச் சந்தித்த போது 10 வகையான கடிதங்களை கொடுத்தேன். தற்போது சென்னையிலிருந்து செங்கல்பட்டு வரை உள்ள சாலை 8 வழிச் சாலையாக மாற்றப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை திண்டிவனம் வரை நீட்டித்து விரைந்து செயல்பட வேண்டும் என ஒரு கடிதம் கொடுத்தேன்.

மாதவரம் சந்திப்பிலிருந்து சென்னை செல்லும் வெளிவட்ட சாலையை ஆறு வழிச்சாலையாக மாற்ற வேண்டும். திருச்சியில் இருந்து துவாக்குடி இடையே உயர்மட்ட சாலை அமைக்க வேண்டும் . தாம்பரத்திலிருந்து பரனூர் வரை உயர்மட்ட சாலை அமைக்க வேண்டும்.

மதுரவாயலிலிருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை உயர் மட்ட சாலை. கோவையிலிருந்து சத்தியமங்கலம் வரை உள்ள சாலைகளை ஆறு வழி சாலைகளாக்க வேண்டும். கோவை, திருச்சியில் அரைவட்ட சாலைகளை உருவாக்க வேண்டும். தமிழ்நாட்டில் 8 சாலைகளை தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற வேண்டும்.

மக்களுக்குப் பிரச்சினையை ஏற்படுத்தும் வகையில் உள்ள பரனூர், சென்ன சமுத்திரம், வானகரம், சூரப்பட்டு, நெமிலி ஆகிய 5 டோல்கேட்களை அகற்ற வேண்டும். இந்த ஆண்டு புதிய சாலைப் பணிகளை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை மனுக்களைக் கொடுத்தேன்.

தமிழகத்தில் மத்திய அரசின் சாலைப் பணிகள் என்பது குறைந்த அளவிலேயே நடந்து வருகிறது. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் பல பணிகள் தாமதமாகவே நடக்கிறது. ஒப்பந்ததாரர்களைக் கேட்டால் ஏற்கனவே இருந்த மாநில அரசு ஒத்துழைக்கவில்லை என்றார்கள். எனவே, நான் அமைச்சரான பிறகு முதல்வர் என்னை அழைத்து தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு என்னென்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்துகொடுங்கள் என்றார்.

இதையடுத்து ஒப்பந்ததாரர்களை அழைத்து அவர்களுக்கு என்னென்ன தேவையோ அதனைக் கேட்டுக் குறிப்பு எடுத்துக்கொண்டு, துறை செயலாளர்கள், தலைமை செயலாளருடன் பல கட்ட ஆலோசனைகளை நடத்திப் பல பணிகளை விரைந்து செயல்படுத்தினோம். ஏற்கனவே நிலுவையிலிருந்த பணிகளில் 90 சதவிகிதம் முடித்துவிட்டோம்.

மாநில அரசாங்கத்தைப் பொறுத்தவரை ஒன்றிய அரசுக்கு முழுக்கு முழுக்க ஒத்துழைப்பு நல்கி பணிகளை விரைந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்று சொன்னால், திண்டிவனம் - கிருஷ்ணகிரி சாலைப் பணி தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் கிட்டத்தட்ட 11 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. என் சொந்த ஊரான திருவண்ணாமலைக்கு நானே இந்த வழியாகத்தான் போகவேண்டும். இதையும் நான் சுட்டிக்காட்டினேன். ஒப்பந்தரார்களை அழைத்து விரைவில் சாலைப் பணிகளைப் போடச் சொல்லுங்கள் என்று சொல்லியிருக்கிறோம்.

தென் மாவட்டங்களில் இருந்து வருகிற எல்லா வாகனங்களும் செங்கல்பட்டு டோல்கேட் பரனூரில் இருந்து ஆரம்பித்துத்தான் சென்னைக்குள் வரவேண்டும். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, ஒன்றை மணி நேரம் கூட தாமதமாகிறது. எனவே, இங்கு உயர்மட்ட சாலை அமைக்க, டிபிஆர் தயாரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இதனைக் கட்டாயம் செய்து கொடுப்பதாக அமைச்சர் உறுதி அளித்துள்ளார். 6 மாத காலத்துக்குள் இந்த பணிகள் தொடங்கும் என நம்புகிறேன்” என்றார்.

தமிழகத்தில், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்டங்களை செயல்படுத்த, தமிழக அரசு போதிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியிருந்த நிலையில், இந்த சந்திப்பு நடந்துள்ளது. அதுபோன்று ஏற்கனவே இருந்த அரசு ஒத்துழைக்கவில்லை என அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-பிரியா

கருத்துகள் இல்லை: