.bazeerlanka.com : தீண்டாமைக்கெதிரான 1966 ஒக்ரோபர் 21 எழுச்சியின் 50 ஆவது ஆண்டு நினைவாக: முன்னுதாரணமான ஒரு போராட்டத்தின் படிப்பினைகள்! – முதலி சின்னையன்
இலங்கைத் தமிழர்களின் வரலாற்றில் 1966 ஒக்ரோபர் 21 இல் ஆரம்பமான தீண்டாமைக்கு எதிரான போராட்ட எழுச்சி ஏற்பட்டு 2016 ஒக்ரோபர் 21 ஆம் திகதியுடன் 50 வருடங்கள் பூர்த்தியாகி இருக்கிறது. இந்தப் போராட்டம் தமிழர்களின் போராட்ட வாழ்வில் ஒரு மைல் கல்லாகவும், பெறுமதியான படிப்பினைகளை வழங்கும் பொக்கிசமாகவும் திகழ்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
இலங்கை சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து தமிழ் மக்கள் தமது இன உரிமைகளுக்காக முதலில் சாத்வீக வழியிலும், பின்னர் ஆயுதப் போராட்ட வழியிலும் போராடியிருக்கிறார்கள் எனப் பலரும் கூறுவதுண்டு.
இந்தக் கூற்றில் ஓரளவு உண்மையும் உண்டு.
அதே நேரத்தில் சுதந்திரத்துக்கு முன்னரும், அதன் பின்னரும் தமிழ் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதினரான தாழ்த்தப்பட்ட மக்கள், தம்மீது திணிக்கப்பட்ட சாதி மற்றும் தீண்டாமை ஒடுக்குமுறைகளுக்கு எதிராக மனித உரிமை வேண்டிப் போராடிய வரலாறும் நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்டதாக இருக்கின்றது.
இதை இன்னொரு வகையிலும் பார்க்கலாம். அதாவது எப்படி ஒரு பெரிய இனம் தன்னைவிடச் சிறிய இனத்தை அடக்கிக் கொண்டு, அந்நிய ஆட்சியாளர்களிடமிருந்து தமக்கு சுதந்திரத்தை எதிர்பார்ப்பது முரணானதோ, அதேபோல ஒரு சிறிய இனம் தனது இனத்துக்குள்ளேயே ஒரு பகுதி மக்களை அடக்கி ஒடுக்கிக் கொண்டு பெரிய இனத்திடமிருந்து உரிமைகளை எதிர்பார்ப்பதும் முரணானதுதான்.
சில வேளைகளில் தமிழினத்தின் இன உரிமைகளுக்கான போராட்டம் தொடந்து தோல்வியைத் தழுவி வருவதற்கான காரணங்களில் இதுவும் ஒன்றாகவும் இருக்கக்கூடும் என எண்ணத் தோன்றுகிறது.
எது எப்படியிருப்பினும், 1966 ஒக்ரோபர் 21 இல் ஆரம்பமாகி சுமார் 5 ஆண்டுகள் வரை நீடித்த, வடக்கில் சூறாவளி எனச் சுழன்றடித்த தீண்டாமைக்கு எதிரான போராட்டத்தில் இருந்து கற்றுக் கொள்வதற்கு நிறை விடயங்கள் இருக்கின்றன. தமது தேசிய இனப் போராட்டத்தில் தோல்விக்கு மேல் தோல்வி கண்டுவரும் இலங்கைத் தமிழர்கள் மட்டுமின்றி, தென்னாசிய நாடுகளில் வாழுகின்ற பல இன சமூகங்களே இந்தப் போராட்டத்திலிருந்து கற்றுக் கொள்வதற்கு நிறைய விடயங்கள் இருக்கின்றன.
இந்தப் போராட்டத்தை விளங்கிக் கொள்வதற்கு முதலில் இந்தப் போராட்டம் உருவான வரலாற்றைச் சுருக்கமாகத் தன்னும் பார்ப்பது அவசியமாகும்.
இலங்கையின் வட பகுதியில் வாழுகின்ற தாழ்த்தப்பட்ட மக்களின் மீது அங்குள்ள உயர்சாதியினர், குறிப்பாக வெள்ளாள சாதியினர் செலுத்தி வருகின்ற சாதி ஒடுக்குமுறையும், தீண்டாமைப் புறக்கணிப்பும் மிகவும் கொடூரமானதும் நீண்ட வரலாற்றைக் கொண்டதுமாகும். இந்த ஒடுக்குமுறைக்கு எதிராக தாழ்த்தப்பட்ட மக்கள் ஆரம்பத்தில் சில தனிநபர் ரீதியிலான போராட்டங்களையும், பின்னர் அமைப்பு ரீதியிலான போராட்டங்களையும் நடாத்தி வந்திருக்கின்றனர்.
இதில் சாதி வெறியர்களின் பலம் என்னவென்றால், அவர்களுக்கு அரசியல் ரீதியிலான ஒரு பலம் இருந்தமையே. தமிழர்களின் முதலாவது அரசியல் கட்சி என வர்ணிக்கப்படும் ஜீ.ஜீ.பொன்னம்பலம் தலைமையில் செயல்பட்ட அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி வெளிப்படையாகவே சாதி அடிப்படையில் செயல்பட்ட, யாழ்ப்பாண சைவ வேளாள மேட்டுக்குடியினரைப் பிரதிநிதித்துவம் செய்த கட்சி.
அதேபோல, அக்கட்சியிலிருந்து வெளியேறிய எஸ்.ஜே.வி. செல்வநாயகம் தலைமையில் உருவாக்கப்பட்ட தமிழரசுக் கட்சியும் சொல்லளவில் ‘சாதி ஒழிய வேண்டும்” என்று சொன்னாலும், நடைமுறையில் சாதி அமைப்பைப் பாதுகாத்த, அதே யாழ். சைவ வேளாள மேட்டுக்குடியினரின் நலன்களைப் பாதுகாத்த ஒரு கட்சிதான். இதற்குப் பல உதாரணங்கள் உண்டு.
இந்த நிலையில் 1965 பொதுத் தேர்தலின் பின் ஏகாதிபத்திய சார்பு பிற்போக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் சிங்கள – தமிழ் இனவாதப் போக்குடைய 7 கட்சிகள் சேர்ந்து அமைத்த கூட்டரசாங்கத்தில் தமிழரசுக் கட்சியும், தமிழ் காங்கிரஸ் கட்சியும் இணைந்து கொண்டன. தம்மைப் பிரதிநிதித்துவப்படுத்திய கட்சிகள் இரண்டும் ஆட்சிப் பங்காளர்கள் ஆகியமை வட பகுதியில் இருந்த உயர்சாதி வெறியர்கள் மத்தியில் உற்சாகத்தைக் கிளப்பி விட்டது. சந்தர்ப்பத்தைப் பாரத்திருந்த அவர்கள் இந்தச் சூழலைப் பயன்படுத்தி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறையை இறுக்கத் தொடங்கினர்.
திடீரென அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராகப் பல நடவடிக்கைகளில் இறங்கினர். பொதுவாக நிலமற்ற அந்த மக்கள் உயர்சாதியினரின் காணிகளிலேயே குடியிருந்து வந்தனர். அப்படி குடியிருந்த மக்களில் சிலர் அந்தக் காணிகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அவர்கள் தமது பிரதான ஜீவனோபாயத்துக்காக கள்ளுச் சீவி வந்த உயர்சாதியினரின் பனை, தென்னை மரங்களை வழங்க மறுத்தனர். சில இடங்களில் அவர்கள் கள்ளு சீவி வந்த மரங்களின் பாளைகளைத் தமது கைக்கூலிகள் மூலம் வெட்டியெறிந்தனர். தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்தி வந்த கிணறுகளில் மலம் கொட்டப்பட்டது. பாடசாலைகளில் தாழ்த்தப்பட்ட பிள்ளைகள் சாதி ரீதியாக அவமானப்படுத்தப்பட்டனர். பொது இடங்களில் அந்த மக்கள் தாக்குதலுக்கும் உள்ளாகினர். இந்த நடவடிக்கைகளில் எல்லா உயர்சாதி மக்களும் ஈடுபடாவிட்டாலும், ஊருக்குஊர் உயர்சாதியினரின் கைக்கூலிகளாகச் செயல்பட்ட ~சண்டியர்கள்| இதில் முன் நின்றனர்.
இந்தச் சூழ்நிலையில்தான், தாழ்த்தப்பட்ட மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய சில அமைப்புகள் இந்தப் பிரச்சினை குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதற்காக அச்சுவேலியிலிருந்த தாழ்த்தப்பட்டவர் ஒருவருக்குச் சொந்தமான சினிமா கொட்டகையில் மாநாடு ஒன்றைக் கூட்டின. இந்த மாநாட்டுக்கு சகல கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. மாநாட்டில் சில கட்சிகள் பங்குபற்றின. சில கட்சிகள் பங்குபற்றவில்லை. தமிழ் மக்களைப் பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்திய பிரதான கட்சியான தமிழரசுக் கட்சி இதில் பங்குபற்றியது. பங்குபற்றிய இடதுசாரிக் கட்சிகளில் ~சீனசார்பு கம்யூனிஸ்ட் கட்சி| என அழைக்கப்பட்ட புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி முக்கியமானது.
மாநாட்டில் சில முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்படனவாயினும், அதை நடைமுறைப்படுத்துவதில் தமிழரசுக் கட்சியோ இதர கட்சிகளோ ஆர்வம் எதுவும் காட்டவில்லை. புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் விதிவிலக்காக இருந்தது. அக்கட்சி அந்த சர்வகட்சி மாநாட்டுத் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதில் உறுதியுடனும் அர்ப்பணிப்புடனும் செயல்பட முன்வந்தது. அதன் தொடக்கப் புள்ளியாக, ‘சாதி அமைப்புத் தகரட்டும், சமத்துவ நீதி ஓங்கட்டும்” என்ற கோசத்துடன் சாதி அமைப்புக்கும் தீண்டாமைக்கும் எதிரான மாபெரும் கண்டன ஆர்பாட்ட ஊர்வலமொன்றை 1966 ஒக்ரோபர் 21 ஆம் திகதி சுன்னாகத்தில் இருந்து யாழ்ப்பாணம் வரை நடாத்துவதென்றும், முடிவில் யாழ். முற்றவெளி மைதானத்தில் பகிரங்கப் பொதுக்கூட்டம் ஒன்றை நடாத்துவதெனவும் அக்கட்சி தீர்மானித்தது.
ஆனால் பொலிசார் ஊர்வலத்துக்கு அனுமதி தர மறுத்துவிட்டார்கள். அதற்குக் காரணம் இருந்தது. ஆட்சியில் பிற்போக்கு ஐ.தே.க. இருந்தது. அந்த அரசின் பங்காளிகளாக சாதிவெறி பிடித்த தமிழரசு – தமிழ் காங்கிரஸ் கட்சிகள் இருந்தன. வட பகுதியில் பணிபுரிந்த பெரும்பாலான தமிழ் பொலிசார் உயர்சாதிகளைச் சேர்ந்தவர்களாக இருந்ததுடன், தமிழ் கட்சிகள் இரண்டினதும் ஆதரவாளர்களாக இருந்தனர். எனவே அவர்கள் சாதி வெறியர்களின் சொற்படியே செயற்பட்டு வந்தனர்.
இருந்தும் சில சிங்கள பொலிஸ் அதிகாரிகள் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது அனுதாபம் கொண்டிருந்தனர் என்பதையும் மறுப்பதற்கில்லை. உதாரணத்துக்கு ஒன்றைக் கூறலாம். ஊர்வலத்துக்கு அனுமதி கேட்டு அந்த நேரத்தில் சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இருந்த சிங்கள இனப் பொலிஸ அதிகாரியை எமது தோழர்கள் அணுகிய போது, அனுமதி தர முடியாது என்ற அரசாங்கத்தின் உத்தரவை வருத்தத்துடன் தெரிவித்த அவர், ‘தடையை மீறி நீங்கள் ஊர்வலம் நடாத்தினால் தேவையேற்படின் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்பதைத் தெரிவித்ததுடன், ‘இந்தச் சூழ்நிலையில் தடையை மீறி நீங்கள் ஊர்வலம் நடாத்தினால் இன்னொரு கந்தசாமி தினம் கொண்டாட வேண்டி வரும்” எனவும் எச்சரித்தார்.
அத்துடன் ஊர்வலத்துக்கு எதிராகப் பலாத்காரம் பிரயோகிப்பதைத் தான் விரும்பாததால் ஒரு வார காலம் விடுமுறையில் செல்லப் போவதாகக் கூறிய அவர், உண்மையிலும் அவ்வாறே செய்து தாழ்த்தப்பட்ட மக்கள் மீருந்த அனுதாபத்தையும் எடுத்துக் காட்டினார்.
இங்கு அந்தப் பொலிஸ் அதிகாரி ~இன்னொரு கந்தசாமி தினம்| என்று குறிப்பிட்டது அர்த்தபுஸ்டியுடன் ஆகும். 1947 இல் அரசாங்க ஊழியர்கள் நடாத்திய பொது வேலைநிறுத்தத்தின் போது பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த கந்தசாமி என்ற தமிழ் அரசாங்க ஊழியர் பலியானார். அவரது தியாகத்தை மதித்து வருடாவருடம் ‘தியாகி கந்தசாமி தினம்’ என்ற மகுடத்தின் கீழ் அவர் இறந்த தினத்தை இலங்கைத் தொழிலாளி வர்க்கம் இன, மத, மொழி வேற்றுமைகளைக் கடந்து கொண்டாடுவது ஒரு வழமையாக இருந்து வந்தது. அதை மனதில் வைத்தே அந்தப் பொலிஸ் அதிகாரி அப்பொழுது புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியின் வட பிரதேச செயலாளராக இருந்த தோழர் வி.ஏ.கந்தசாமியை மனதில் கொண்டே அவ்வாறு கூறினார். என்னே அவரது ஒப்புவமை!
அந்த சிங்கள் பொலிஸ் அதிகாரி விடுமுறையில் சென்றதும், சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் உதவி பொலிஸ் அதிகாரியாக இருந்த இராசையா என்பவர் தற்காலிகப் பொறுப்பதிகாரியாகப் பொறுப்பேற்றார். இராசையா மிகவும் சாதி வெறி பிடித்தவர். ஏதாவது காரணங்களுக்காக தாழ்த்தப்பட்ட மக்கள் யாராவது கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையம் கொண்டுவரப்பட்டால் அவர்களை அடித்து நொருக்குவதில் இன்பம் காண்பவர். அப்படியானவர் கைகளில் அதிகாரம் கொடுக்கப்பட்டால் சொல்லவா வேண்டும்? (இதே போன்ற தமோதரம்பிள்ளை என்ற பெயருடைய ஒரு சாதிவெறி பிடித்த பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் சங்கானை பொலிஸ் நிலையத்தில் இருந்தார்)
ஒக்ரோபர் 21 ஆம் திகதி ஊர்வலம் ஆரம்பிப்பதற்கு முன்னரே இராசையா தனது கைவரிசையைக் காட்ட ஆரம்பித்துவிட்டார். முதல் வேலையாக ஒரு நள்ளிரவு நேரத்தில் சுன்னாகத்தில் இருந்த புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சிக் காரியாலயத்துக்குச் சென்ற அவர், அங்கு தூங்கிக் கொண்டிருந்த காரியாலயப் பொறுப்பாளர் நா.யோகேந்திரநாதனையும், அவருடன் இருந்த ச.சுப்பிரமணியம் (இயக்கச்சி மணியம்) என்பவரையும் – இருவரும் முழுநேரமாக கட்சிப் பணி புரிவதற்காக முதல் வருடம்தான் படிப்பை இடை நிறுத்திய ஸ்கந்தவரோதயக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் – கைது செய்து பொலிஸ் நிலையம் கொண்டு வந்து அவர்களைத் தூசணை வொர்த்தைகளால் திட்டியதுடன், விடியும் வரை அவர்கள் மீது தாக்குதலும் நடாத்திவிட்டே விடுதலை செய்தார்.
ஆனாலும் பொலிசாரின் தடையையும் மீறி கட்சி 1966 ஒக்ரோபர் 21 ஆம் திகதி பிற்பகல் 2 மணிக்கு சுன்னாகத்திலிருந்து ஊர்வலத்தை ஆரம்பித்தது. ஊர்வலத்தை சுன்னாகம் பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் வழி மறித்த இராசையா தலைமையிலான பொலிசார், ஊர்வலத்தினர் மீது தடிகளாலும் துப்பாக்கிப் பிடிகளாலும் கடுமையாகத் தாக்கியதுடன், தோழர்கள் வி.ஏ.கந்தசாமி, கே.ஏ.சுப்பிரமணியம், இ.கா.சூடாமணி ஆகியோரைக் கைது செய்து கொண்டு சென்று வழக்குத் தாக்கல் செய்தனர்.
தாக்குதலின் பின்னர் கோசமெதுவும் எழுப்பாமல் அமைதியான முறையில் இரண்டு இரண்டு போராகச் செல்லுமாறு பொலிசார் பணித்தனர். அதன் பின்னர் ஊரவலத்தினர் வாய்களைக் கறுப்புத் துணியால் கட்டியபடி யாழ்ப்பாண நகரம் வரை நடந்து சென்று அங்கு பொதுக்கூட்டம் ஒன்றை நடாத்தினர். அங்கு உரையாற்றிய கட்சித் தலைவர்கள் பொலிசாரின் செயலைக் கடுமையாகக் கண்டனம் செய்து உரையாற்றினர்.
பொலிசாரால் நடாத்தப்பட்ட இந்த அராஜகம் தாழ்த்தப்பட்ட மக்களிடமும், முற்போக்கு சக்திகளிடமும் பெரும் கோபாவேசத்தைக் கிளறிவிட்டது. அதன் காரணமாக அவர்கள் மத்தியில் போராட்ட உணர்வு கிளர்ந்தெழுந்தது. இந்தச் சூழல் கட்சி மேற்கொள்ளவிருந்த எதிர்காலப் போராட்டங்களுக்கு பெரும் உந்துதலைக் கொடுத்தது. பொலிசாரின் சுன்னாகத் தாக்குதலைக் கண்டித்தும், சாதி அமைப்புக்கு எதிராகவும் கட்சி வட பகுதி முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களையும், பொதுக் கூட்டங்களையும் ஏற்பாடு செய்து நடாத்தியது. இந்தக் கூட்டங்களில் வட பகுதித் தோழர்கள் மட்டுமின்றி, தென் பகுதியிலிருந்து சிங்கள, முஸ்லீம், மலையக முற்போக்கு சக்திகளும் பங்குபற்றி ஆதரவளித்தனர்.
குறிப்பாக சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் கம்பஹா பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.டி.பண்டாரநாயக்க தலைமையிலான அக்கட்சியின் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் வடக்கே வந்து இந்தக் கூட்டங்களில் பங்குபற்றியதுடன், பாராளுமன்றத்திலும் பொலிசாரின் நடவடிக்கையைக் கண்டித்தும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவாகவும் உரையாற்றினர்.
ஆனால் அதே நேரத்தில் வட பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்திய தமிழரசு – தமிழ் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்தப் போராட்டத்தை ஏறெடுத்தும் பார்க்காததுடன், சாதி வெறியர்கள் பக்கமும் சேர்ந்து நின்று கொண்டனர். தாழ்த்தப்பட்ட மக்களின் இந்தப் போராட்டத்தை கொச்சைப்படுத்தி பாராளுமன்றத்தில் பேசிய தமிழரசுக் கட்சி செயலாளர் அ.அமிர்தலிங்கம், “கம்யூனிஸ்ட்டுகள் வடக்கில் ஒரு சாங்காயை, ஒரு வியட்நாமை உருவாக்க முயல்கிறார்கள்” என அவதூறு செய்தார்.
தமிழரசுக் கட்சித் தலைவர் செல்வநாயகமோ தனது தொகுதியில் நடைபெற்ற மாவிட்டபுரம் கந்தசாமி கோவில் ஆலயப் பிரவேசப் போராட்டத்திலிருந்து தப்புவதற்காக, தான் கிறிஸ்தவர் என்றும், எனவே சைவ சமயத்தவர்களின் விவகாரங்களில் தலையிட விரும்பவில்லையென்றும் கூறி நழுவிக் கொண்டார்.
ஆனால் இவர்கள் அனைவரதும் பல்வேறு தடைகளையும் மீறி புரட்சிகர கம்யூனிஸ்ட் தனது தலைமையில் உருவாக்கிய ‘தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம்’ என்ற அமைப்பின் ஊடாக தாழ்த்தப்பட்ட மக்களின் ஆலயப் பிரவேச – தேநீர்க்கடைப் பிரவேசப் போராட்டத்தை துணிச்சலுடனும், உறுதியுடனும் முன்னெடுத்துச் சென்றது. இந்த தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் ஒரு சிறப்பு என்னவெனில், அதுவரை காலமும் தாழ்த்தப்பட்ட மக்களுக்காகச் செயற்பட்ட அமைப்புகள் எல்லாமே முற்றுமுழுதாக அந்த மக்களாலேயே நடாத்தப்பட்டவையாகும். ஆனால் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தைப் பொறுத்தவரை, அதன் தலைமைப் பதவிகளில் தாழ்த்தப்பட்ட மக்கள் இருந்த அதேவேளையில், அதன் நிர்வாக சபைகளில் நல்லெண்ணம் படைத்த உயர் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இணைந்து செயல்பட்டனர். இந்த நிலைமை இந்தப் போராட்டங்கள் கணிசமான வெற்றியைப் பெறுவதறங்கு ஒரு காரணமாகும்.
1966 முதல் 70 வரையிலான காலகட்டத்தில் வட பகுதி பூராவும் தீண்;டாமைக்கு எதிரான சூறாவளி ஒரு பிரளயமாகச் சுழன்றடித்தது. இந்தக் காலகட்டத்தில் மாவிட்டபுரம் கந்தசாமி கோவில், மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோவில், அச்சுவேலி உலவிக்குளம் பிள்ளையார் கோவில் உட்பட பெரியதும் சின்னதுமாக பல கோவில்களில் ஆலயப் பிரவேசப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு, பல எதிர்ப்புகளை முறியடித்து இறுதியில் அவை வெற்றி பெற்றன.
அதேபோல, சுன்னாகம், சங்கானை, அச்சுவேலி, நெல்லியடி, சாவகச்சேரி, கொடிகாமம், மருதனாமடம், தாவடி உட்பட பல இடங்களில் தேநீர்க்கடைப் பிரவேசங்கள் நடாத்தப்பட்டு அவையும் வெற்றிபெற்றன.
அதே நேரத்தில் இந்தப் போராட்டங்கள் எதுவும் இலேசாகவோ, இழப்புகள் இன்றியோ நடந்து முடிந்துவிடவில்லை. சாதி வெறியர்கள் பக்கமும், தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியிலும் சுமார் தலா பத்து பேர்வரையில் உயிர் பலி கொடுக்கப்பட்டே இந்தப் போராட்டங்கள் முடிவுக்கு வந்தன. போராட்டத்தின் மையக் களங்களாக சங்கானையிலுள்ள நிச்சாமம் கிராமம், மட்டுவிலுள்ள மானாவளைக் கிராமம், நெல்லியடியிலுள்ள கன்பொல்லை கிராமம் என்பன திகழ்ந்தன. உதாரணமாக போராட்டத்தில் முன்னணிப் படையாகத் திகழ்ந்த நிச்சாமம் கிராம மக்களின் வீரத்தைப் புகழ்ந்து, “சங்கானைக்கென் வணக்கம்” என்ற தலைப்பில் மட்டுநகர் கவிஞர் சுபத்திரன் எழுதிய ஒரு கவிதையில், “எச்சாமம் வந்து எதிரி நுழைந்தாலும் நிச்சாமக் கண்கள் நெருப்பெறிந்து நீறாக்கும்” எனச் சிலாகித்து எழுதியுள்ளார். இந்தக் கிராமங்களின் மக்கள் என்றென்றும் வரலாற்றில் அழிக்கப்பட முடியாத பெருமைக்குரியவர்கள்.
இன்று 50 வருடங்கள் கழிந்துவிட்ட போதிலும் இந்தப் போராட்டங்கள் வழங்கிய அனுபவப் பாடங்கள் வரலாற்றிலிருந்து மறைந்துவிடக் கூடியவை அல்ல. பண பலம், அதிகார பலம், ஆயுத பலம், சர்வதேச பலம் என அனைத்துப் பலங்களையும் பெற்றிருந்த தமிழ் தேசிய இனத்தின் 60 ஆண்டுகளுக்கும் மேலான போராட்டங்கள் தொடர்ந்து தோல்வியைத் தழுவி இன்று மிகவும் மோசமான ஒரு இக்கட்டான நிலையை வந்தடைந்துள்ள ஒரு சூழலில், மிகவும் பலவீனமான நிலையில் இருந்த ஒரு மக்கட்பிரிவான தாழ்த்தப்பட்ட மக்களின் தீண்டாமைக் கொடுமைக்கு எதிரான இப்போராட்டம் கணிசமான ஒரு வெற்றியைப் பெற்றதற்கான காரணம் என்ன என்பது சகலராலும், குறிப்பாகத் தமிழ் போராட்ட சக்திகளால் ஆராய்ந்து பார்க்கப்படுவது அவசியமாகும். அந்த வகையில் தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டம் வெற்றி பெற்றதற்கான காரணிகளாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
• போராட்டத்துக்கு ஒரு சரியான மார்க்சிச – லெனினிச தலைமை வழங்கப்பட்டமை.
• அதுவரை காலமும் இருந்தது போல அல்லாமல் தாழ்த்தப்பட்ட மக்களின் அடிமட்ட மக்கள் பூரணமாக அணிதிரட்டப்பட்டமை.
• ‘தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம்’ என்ற பரந்துபட்ட ஒரு வெகுஜன அமைப்பின் மூலம் தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டுமின்றி, நீதியை நேசித்த அனைத்து சமூக மக்களும் ஒரு அணியில் திரட்டப்பட்டமை.
• வெறும் சாத்வீகம் அல்லது வெறும் ஆயுத மோகம் என்றில்லாமல், வெகுஜனப் போராட்டத்துடன், தேவையான இடங்களில் ஆயுத பலாத்காரமும் பிரயோகிக்கப்பட்டமை.
• பொதுக்கூட்டம், ஊர்வலம், சுவரொட்டி, துண்டுப் பிரசுரம் என பரந்துபட்ட பிரச்சார இயக்கத்தை மக்களிடம் முன்னெடுத்தமை.
• கலை இலக்கியத்தை, நாடகம் – குறிப்பாக ‘கந்தன் கருணை’ என்ற நாடகம் – தெருக்கூத்து, கதை, கவிதை, கவியரங்கம், ஓவியக் கண்காட்சி, புகைப்படக் கண்காட்சி என சகல வடிவங்களிலும் போராட்டத்துக்கு ஆதரவாகப் பயன்படுத்தியமை.
• சம்பந்தப்பட்ட மக்கள் மட்டுமின்றி, நாட்டில் வாழுகின்ற ஏனைய இனங்களான சிங்கள, முஸ்லீம், மலையக மக்கள் மத்தியில் போராட்டத்துக்கு அனுதாபமான சூழலை புரட்சிகரக் கட்சியின் துணையுடன் உருவாக்கியமை.
இவைதான் இந்தப் போராட்டம் வெற்றிக்கு இட்டுக் செல்ல உதவிய காரணிகளாகும். அதேநேரத்தில் தமிழ் மக்களின் தேசிய இன விடுதலைக்கான போராட்டம் தொடர்ந்தும் ஏன் தோல்வியைத் தழுவி வருகின்றது என்பதை ஒப்பீட்டு வகையில் ஆராய்ந்து பார்ப்பதற்கும் இந்தக் காரணிகள் உறுதுணையாக இருக்க முடியும். குறிப்பாக, ஒரு போராட்டத்தின் வெற்றிக்கு அதற்குத் தலைமை தாங்கும் சக்தியின் வர்க்கக் குணாம்சம், அது பின்பற்றும் சித்தாந்த – அரசியல் மார்க்கமும் வழிமுறையும், அது அணிதிரட்டும் நேச சக்திகள், என்பவை மிக முக்கியமானவையாகும். இவை யாதொன்றும் தமிழ் மக்களின் தேசிய இனப் போராட்டத்துக்கு இல்லையென்பதே அதன் தொடர் தோல்விக்குக் காரணம் என அடித்துக் கூற முடியும்.
தாழ்த்தப்பட்ட மக்களின் தீண்டாமைக்கு எதிரான 1966 ஒக்ரோபர் 21 எழுச்சி ஆரம்பமாகி இன்று 50 வருடங்கள் பூர்த்தியாகிவிட்ட சூழ்நிலையில், தமிழ் மக்கள் வாழ்விலும் அவர்களில் ஒரு பகுதியினரான தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்விலும், உலக அரங்கிலும் எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. தாழ்த்தப்பட்ட மக்கள் தமது உரிமைப் போராட்டங்களில் பல வெற்றிகளைப் பெற்று ஓரளவுக்கு அடிமை குடிமை முறையினின்று மீண்டுவிட்டாலும், அந்த மாற்றங்கள் புறச் சூழ்நிலையில் ஏற்பட்ட மாற்றங்கள் மட்டுமே. அகச் சூழலைப் பொறுத்தவரை ஆழமான சாதி மனோபாவமும் தீண்டாமைச் சிந்தனையும் நீறுபூத்த நெருப்பாக யாழ்ப்பாண மேட்டுக்குடியினரின் சிந்தனையில் இன்னமும் கனன்று கொண்டு இருப்பது மறுக்க முடியாத உண்மை.
சமூகப் புரட்சி ஒன்றின் மூலம் அமைகின்ற ஒரு சோசலிச சமத்துவ சமுதாயத்தின் உருவாக்கத்திலும், அதன் நீட்சியிலுமே அதற்கான இறுதி வெற்றியைப் பெற முடியும். அதேபோல தமிழ் மக்களின் தேசிய இன விடுதலையும், உழைக்கும் மக்களின் வர்க்க விடுதலையும் கூட அந்த மாற்றத்திலேயே தங்கியுள்ளது. சாராம்சமாகச் சொல்வதானால், உழைக்கும் மக்களின் விடுதலை, ஒடுக்கப்பட்ட தமிழ் தேசிய இனத்தின் விடுதலை, தாழ்த்தப்பட்ட மக்களின் சமூக விடுதலை, ஒடுக்கப்பட்ட பெண்களின் விடுதலை என எல்லா ஒடுக்குமுறைகளிலிருந்தும் விடுதலை பெறுவதற்கான ஒரே வழி இவர்களின் தனித்தனியான போராட்டங்களை ஒரு சோசலிச இலட்சியத்தை நோக்கி ஒன்றிணைப்பதிலேயே தங்கி இருக்கின்றது.
source: "Vaanavil"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக