புதன், 15 டிசம்பர், 2021

பணத்துக்கு பதிலாக பாண்ட்? அரசு ஊழியர்கள் படபடப்பு!

பணத்துக்கு பதிலாக பாண்ட்?  அரசு ஊழியர்கள் படபடப்பு!

மின்னம்பலம் : கடந்த அதிமுக ஆட்சியில் நிதிப் பற்றாக்குறையால் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறக்கூடிய வயது 59ஆக நீட்டிக்கப்பட்டது. 2021இல் திமுக ஆட்சி பொறுப்பேற்று முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றதும் 59 வயதை 60ஆக உயர்த்தி அரசாணையை வெளியிட்டார், இதனால் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மற்றொரு பக்கம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கொடுக்க காலியிடங்களை நிரப்பாமல் அரசு தவிர்த்து வருகிறது அரசு என்று குற்றச்சாட்டுகளும் எழுந்தன.


இந்த நிலையில் வரும் 2022 ஜனவரி மாதம் 5ஆம் தேதி கூடும் தமிழகச் சட்டப்பேரவை கூட்டத்தொடரில், அரசு ஊழியர்களின் ஓய்வு வயது தொடர்பாக, தமிழக அரசு புதிய அறிவிப்பை வெளியிடலாம், அதன்படி 33 வருடங்கள் அரசு பணி செய்தவர்கள் 58 வயதிலும், மற்றவர்கள் 60 வயதிலும் ஓய்வு பெறலாம் என்று அறிவிக்கப்படலாம் எனத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுமட்டுமல்ல... “நிதி சுமையால்தான் அரசு ஊழியர்களின் பணி ஓய்வு வயதை உயர்த்தியது, தற்போது ஓய்வு பெறும் வயதை 58ஆகக் குறைத்தால் பல ஆயிரம் பேர் ஓய்வு பெறுவார்கள். அவர்களுக்குப் பணப்பலன் எப்படிக் கொடுப்பது என்பது முக்கிய கேள்வியாக இருக்கிறது. அனைவருக்கும் பாண்ட் பத்திரம் கொடுத்து அனுப்ப முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்றும் கோட்டை வட்டாரத்தில் இருந்து தகவல்கள் கசிகின்றன.

இவ்விவகாரம் தொடர்பாக, அரசு ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் தமிழ்செல்வியிடம் பேசினோம்.

அவர், “நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனும் முதல்வரும் வெவ்வேறு கருத்துகளைச் சொல்லி வருகிறார்கள். ஒரு வாரத்திற்கு முன்பு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிப் பற்றாக்குறையால் காலி பணியிடங்களை நிரப்ப முடியவில்லை என்று பேசினார். இந்த நிலையில் வயது வரம்பைக் குறைக்க புதிய அறிவிப்பு செய்யப் போவதாகக் கடந்த பத்து தினங்களாக வாட்ஸ்அப்பில் ஒரு குறுஞ்செய்தி பரவி வருகிறது.

33 வருடங்கள் பணி செய்தவர்கள் 58 வயதில் பணி ஓய்வு என்றால் காவல் துறையில் மட்டும் சுமார் 20,000 பேர் ஓய்வு பெறுவார்கள், அவர்களுக்குப் பணப்பலன் எப்படிக் கொடுப்பார்கள்? 33 வருடங்கள் பணி செய்தவர்களுக்கு பத்து மாதம் (ஈட்டிய விடுப்பு) சம்பளம் கொடுக்க வேண்டும். ஜிபிஎஃப் போன்ற பணப்பலன்கள் ஒவ்வொருவருக்கும் குறைந்தது 30 லட்சம் கொடுக்க வேண்டியது இருக்கும். அப்படி என்றால் சுமார் 600 கோடி ரூபாய் வழங்க வேண்டியிருக்கும்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எனப் பழைய பென்ஷன் திட்டத்தில் உள்ள சுமார் மூன்றரை லட்சம் ஊழியர்களும், புதிய பென்ஷன் திட்டத்தில் ஆறரை லட்சம் ஊழியர்களும் மொத்தம் பத்து லட்சம் ஊழியர்கள் பணி செய்து வருகிறார்கள்.

2022இல் 60 வயது நிரம்பியவர்கள் என்றால் லட்சம் ஊழியர்களுக்குக் குறையாமல் இருப்பார்கள். அவர்களுக்கு சுமார் 4,000 கோடி வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப நிதி இல்லை என்று சொல்கிறார்களே, 4,000 கோடி ரூபாய் கொடுத்து லட்சம் அரசு ஊழியர்களை எப்படி வீட்டுக்கு அனுப்புவார்கள்” என்றார்.

“பணத்துக்கு பதிலாக பாண்ட் கொடுக்க அரசு முடிவு செய்துள்ளதாகச் சொல்கிறார்களே?” என்று கேள்வி எழுப்பினோம்...

“2003 அதிமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறுபவர்களுக்கு பாண்ட் பத்திரம் வழங்குவதைக் கடுமையாக எதிர்த்தார் கலைஞர் கருணாநிதி, தற்போது தந்தை எதிர்த்த பாண்ட் பத்திரத்தை ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்குக் கலைஞர் மகன் முதல்வர் ஸ்டாலின் வழங்குவரா என்ன?

33 வருடங்கள் உழைத்துப் பணி ஓய்வுபெறும்போது நிம்மதியான வாழ்க்கை வாழ நினைப்பவர்களுக்குப் பத்திரம் கொடுப்பது கொடுமையானது. இப்படி ஒரு செயலை முதல்வர் செய்தால், ஒட்டுமொத்த அரசு ஊழியர்களின் குடும்பங்களும் அரசுக்கு எதிரான போராட்டத்தில் இறங்கும், அதன் விளைவை அடுத்த தேர்தலில் சந்திப்பார்” என்று கூறினார்.

சட்டமன்றக் கூட்டத் தொடருக்கு முன்பே, டிசம்பர் 18,19 தேதிகளில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க 14ஆவது மாநில மாநாடு சென்னையில் நடக்கிறது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, புதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும். முடக்கப்பட்ட அகவிலைப்படியை வழங்க வேண்டும் . பறிக்கப்பட்ட சரண் விடுப்பு மீண்டும் அளிக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தும் இந்த மாநாட்டின் இரண்டாம் நாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். அந்த மாநாட்டில் முதல்வரின் பேச்சை அரசு ஊழியர்கள் ஆர்வமாக எதிர்பார்த்திருக்கின்றனர்.

-வணங்காமுடி

கருத்துகள் இல்லை: