Rajkumar R - Oneindia Tamil : சென்னை : சென்னை ஆழ்வார்பேட்டை முகாம் அலுவலகத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் சந்தித்து பேசினார். சந்திப்பின் போது இரு மாநில தொழில்துறை அமைச்சர்களும் பங்கேற்றனர்.
ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆலயத்தில் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவ் சாமி நேற்று தரிசனம் செய்தார். இதற்காக தெலுங்கானாவில் இருந்து முதலமைச்சர் சந்திரசேகரராவ் நேற்று காலை தனி விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். அவரது வருகையையொட்டி திருச்சியில் காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தனர்.
சுவாமி தரிசனத்திற்கு பிறகு முதலமைச்சர் சந்திரசேகர ராவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஸ்ரீரங்கம் கோவிலை சிறப்பாக பராமரித்து வருகிறார்கள்,
அதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், சென்னையில் தமிழ்நாடு முதலமைச்சரை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அவரை சந்திக்க உள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று மாலை சென்னையில் தெலுங்கான முதல்வர் சந்திரசேகரராவ், தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வரின் முகாம் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட இரு மாநில தொழில்துறை அமைச்சர்கள் பங்கேற்றனர்.
மரியாதை நிமித்தமான சந்திப்பு என கூறப்பட்டாலும், இரு மாநில உறவுகள் , தேசிய அரசியல் குறித்து பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக கோதாவரி காவிரி நதி நீர் இணைப்பு குறித்து இரு மாநில முதல்வர்களும் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இரு மாநிலங்கள் தொழில்துறை வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பு குறித்து பேசியதாகவும், அதன் காரணமாகவே இரு மாநில தொழில்துறை அமைச்சர்கள் பங்கேற்றதாகவும் கூறப்படுகிறது.
மேலும் தேசிய அரசியலில் பாஜக - காங்கிரஸ் கட்சிகளுக்கு மாற்றாக மூன்றாவது அணி என்ற பேச்சு பல ஆண்டுகளாகவே அடிபட்டு வருகிறது. ஆனாலும் அது கைகூடாமல் போனது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக 3வது அணி முயற்சியை மேற்கு வங்க முதல்வர் மம்தா பேனர்ஜி மேற்கொண்டு வருகிறார். மாநிலத்தில் கோலோச்சும் முக்கிய கட்சி நிர்வாகிகளை சந்தித்து அவர் பேசி வரும் நிலையில் இந்த சந்திப்பும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
ஆந்திரா, தெலுங்கானா, தமிழகத்தில் மாநில கட்சிகள் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக காங்கிரஸ் அல்லாத கட்சிகள் 3 வது அணி அமைத்து போட்டியிட அதிக வாய்ப்புள்ளாத கருதப்படுகிறது., ஆனால் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்திருக்கும் திமுக அதற்கு உடன்பட வாய்ப்பில்லை என்றே கருதப்படுகிறது. தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்த உறுதியான தகவல்கள் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக