BBC : இலங்கை நாடாளுமன்ற தேர்தல் முடிவில், சிறுபான்மை கட்சிகள் அதிக வாக்குகள் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.தமிழர்கள் அதிகம் . >வாழும் பகுதிகளில் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் பெருமளவில் தேர்வாகியுள்ளனர். குறிப்பாக, வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பகுதி உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் தமிழர்கள், குறிப்பிடத்தக்களவில் வாக்குகளை தனதாக்கிக் கொண்டுள்ளனர். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொடர்ச்சியாக முன்னிலை வகித்து வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு இந்த முறை லேசான சரிவு ஏற்பட்டதை கவனிக்க முடிகிறது.கடந்த நாடாளுமன்றத்தில் 16 ஆசனங்களை கைப்பற்றியிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இந்த முறை 10 ஆசனங்கள் மாத்திரமே கிடைத்துள்ளன. இலங்கை தமிழரசு கட்சி (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) யாழ்ப்பாணத்தில் மூன்று ஆசனங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளன. சிவஞானம் சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் யாழ்ப்பாணத்தில் தேர்வாகியுள்ளனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்த முறை தேர்வாகியுள்ளனர்.
அத்துடன், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பில் டக்ளஸ் தேவானந்தா தெரிவாகியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி யாழ்ப்பாணத்தில் போட்டியிட்ட நிலையில், அங்கு அங்கஜன் ராமநாதன் வெற்றி பெற்றுள்ளார் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிளவுப்பட்டு, தமிழ் மக்கள் தேசிய கட்சியை வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆரம்பித்திருந்த நிலையில், அவருக்கும் இந்த முறை, தேர்தலின் ஊடாக ஒரு ஆசனம் கிடைத்துள்ளது.
இதேபோல, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னி தேர்தல் மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி மூன்று ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.
இதன்படி, சார்ள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைகலநாதன் மற்றும் எஸ்.வினோநோகராதலிங்கம் ஆகியோர் இந்த முறை நாடாளுமன்றத்துக்கு தேர்வாகியுள்ளனர்.
வன்னி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட ரிஷாட் பதியூதீன் ஒரு ஆசனத்தை கைப்பற்றியுள்ளார்.
அத்துடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட காதர் மஸ்தான் ஒரு ஆசனத்தையும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் குலசிங்கம் திலிபன் ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளனர்.
கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட இரண்டு முஸ்லிம் வேட்பாளர்கள் இந்த முறை நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றுக் கொண்டுள்ளனர்.
இதன்படி, எம்.எஸ்.நவுபீக் மற்றும் இம்ரான் மஹரூப் ஆகியோரே திருகோணமலை மாவட்டத்தில் அதிகளவிலான வாக்குகளை பெற்றுக்கொண்டுள்ளனர்.
அதற்கு அடுத்தப்படியாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட கபில அத்துகோரல ஒரு ஆசனத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.
இலங்கை தமிழரசு கட்சி சார்பில் அங்கு போட்டியிட்ட ஆர்.சம்பந்தனுக்கு ஒரு ஆசனம் கிடைத்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்பாராத விதமாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினரான சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஒரு ஆசனத்தை கைப்பற்றியுள்ளார்.
அவரது கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மட்டக்களப்பில் 54 ஆயிரத்து 198 வாக்குகளை அதிகூடிய வாக்குகளாக பெற்றுக்கொண்டுள்ளது.
அதற்கு அடுத்ததாக மட்டக்களப்பில் இலங்கை தமிழரசு கட்சிக்கு இரண்டு ஆசனங்கள் கிடைத்துள்ளன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்று, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து போட்டியிட்ட எஸ்.வியாழேந்திரக்கு அந்த மாவட்டத்தில் ஒரு ஆசனம் கிடைத்துள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு ஆசனம் கிடைத்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
இந்த தேர்தலின் ஊடாக அம்பாறை மாவட்டத்தில் (திகாமடுல்ல) தமிழர் பிரதிநிதித்துவம் ஒன்றை பெற்றுக்கொள்ள முடியாது போயுள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியே ஆதிக்கம் செலுத்தியுள்ளதை காண முடிகின்றது.
இதன்படி, அந்த கட்சி சார்பில் போட்டியிட்ட மூவர் இந்த நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொண்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட எச்.எம்.எம்.ஹரீஸ் மற்றும் பைசால் ஆகிய இருவரும் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.
தேசிய காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஏ.எல்.எம்.அதாவுல்லா மூன்றாவது இடத்தை அந்த மாவட்டத்தில் பெற்றுக் கொண்டுள்ளார்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட எஸ்.எம்.எம்.எம்.முஷாரப் ஒரு ஆசனத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.
இந்திய வம்சாவளித் தமிழர்கள் அதிகளவில் வாழும் நுவரெலியா மாவட்டத்திலும் தமிழர்களுக்கான பிரதிநிதித்துவம் இந்த முறை உறுதி செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் உயிரிழந்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் புதல்வரான ஜீவன் தொண்டமான், இந்த முறை நாடாளுமன்றத்திற்கு நுவரெலியா மாவட்டத்திலிருந்து அதிகூடிய வாக்குகளினால் செல்லவுள்ளார்.
இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிட்ட ஜீவன் தொண்டமான், மருதபாண்டி ரமேஷ் ஆகிய தமிழர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.
அந்த கட்சியில் தெரிவான எஞ்சிய மூவரும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களாவர்.
அத்துடன், நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட பழனி திகாம்பரம், வீ.இராதாகிருஸ்ணன், எம்.உதயகுமார் ஆகியோரும் இந்த முறை நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றுக் கொண்டுள்ளனர்.
பதுளை மாவட்டத்தில் இரண்டு தமிழ் மக்கள் பிரதிநிதிகள் இந்த முறை நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.
இதன்படி, வடிவேல் சுரேஷ் மற்றும் அரவிந்த குமார் ஆகியோரே இந்த முறை நாடாளுமன்றத்திற்கு பதுளை மாவட்டத்திலிருந்து தெரிவாகியுள்ளனர்.
கண்டி மாவட்டத்தில் ஒரு தமிழரும், இரண்டு முஸ்லிம் மக்கள் பிரதிநிதிகளும் இந்த முறை நாடாளுமன்றத்துக்கு தேர்வாகியுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட ரவூப் ஹக்கீம், அப்துல் ஹலீம் ஆகியோர் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள அதேவேளை, எம்.வேலுகுமாரும் கண்டி மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளார்.
கொழும்பு மாவட்டத்தில் மூன்று சிறுபான்மை மக்கள் பிரதிநிதிகள் இந்த முறை நாடாளுமன்ற பிரவேசத்தை பெற்றுக்கொண்டுள்ளனர்.
இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட எஸ்.எம்.மரிக்கார், முஜீபூர் ரகுமான் மற்றும் மனோ கணேஷன் ஆகியோரே நாடாளுமன்ற பிரவேசத்தை கொழும்பு மாவட்டத்தில் பெற்றுக்கொண்டுள்ளனர்.
கேகாலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட கபிர் ஹசிம் ஒரு ஆசனத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக