Murugan Sivalingam : தோட்ட நிர்வாகங்களை உலுக்கிய தொழிற்சங்கவாதி..! தொழிற்சங்கவாதி அமரர் எம்.எஸ்.செல்லசாமி அவர்களின் மறைவு மலையகத் தொழிற்சங்க வரலாற்றில் ஓர் துயர் நிறைந்த பக்கமாகும்.
எனது “பெருந் தோட்டத் தொழிற்சங்க வரலாற்று நூலில்” அன்னார் ஒரு முக்கிய
பக்கத்தில் பதியப்பட்டுள்ளார். இவர் தொழிலாளர் கூட்டங்களில் மக்களைக்
கவரும்படி பேசும் ஆற்றல் மிக்கவர். அவரது பேச்சில் வீரம் நிறைந்திருக்கும்.
தொழிலாளரின் பிரச்சினைகளை தோட்ட நிர்வாகிகளிடம் தொலைபேசியிலேயே உரையாடி…
தீர்த்து வைப்பார். அன்று 20 அல்லது 22 எழுத்துள்ள டைப்ரைட்டரிலேயே
யூனியன் பிரதிநிதி¸ தொழிலாளர் பிரச்சினைகளை டைப் செய்து தோட்ட நிர்வாகிக்கு
அனுப்பி வைப்பார்….! அந்த டைப் ரைட்டார்கள் தொழிற்சங்கவாதிகள்
எம்.பி.யாகி.. மந்திரியாகிய காலத்திலும் இருந்து வந்தன!
அன்று தி.மு.க.
வில் அண்ணாவுக்கு கலைஞர் கருணாநிதி எவ்வாறு துணையாக நின்று கழகத்தை
வளர்த்தாரோ… அதே போன்று அமரர் தொண்டமானுக்கு செல்லசாமி அவர்கள் துணையாக
நின்று காங்கிரசை வளர்த்தார். அன்று இ.தொ.கா.வின் அதீத வளர்ச்சிக்கு அமரர்
செல்லசாமி… துடிப்பு மிக்க…. துணிவு மிக்க… கட்சி விசுவாச மிக்க தொண்டனாக
விளங்கினார். எங்களது கல்லூரி காலத்தில் அட்டன் நகரில் காங்கிரஸ் கூட்டம்
நடந்தால்¸ செயலாளர் செல்லசாமியின் மேடைப் பேச்சை கவனித்து வரும்படி எங்களது
ஆசிரியர்களான இர.சிவலிங்கம்¸ எஸ்.திருச்செந்தூரன் இருவரும் அனுப்பி
வைப்பார்கள்.
செல்லசாமி அவர்களை தோட்ட நிர்வாகிகள் “செல்லா” என்றே
அழைப்பார்கள். இவர் கொழும்பில் ஒருமுறை நாடாளுமன்றத் தேர்தலில்
போட்டியிட்ட போது …ஒரு பிரபல அரசியல்வாதி யான கம்யூனிஸ "தோழர்" பீட்டர்
கெனமன் “செல்லசாமி ஒரு தோட்டசாமி…! அவர் எப்படி கொழும்பில் போட்டியிட
முடியும்?”என்றார்..!
இன்று மோடி அவர்களும் பன்னீர் செல்வம் அவர்களும்
முன்னைய காலத்தில் தேனீர் கடையில் தொழில் செய்தவர்கள் என்று மக்கள் பேசி
வருவதை அறிகின்றோம். செல்லா அவர்களும் ஆரம்பத்தில் தேனீர் கடையில் தொழில்
செய்தார் என்ற தகவலும் உண்டு..
தொழிற்சங்கத்துக்கு வரும் முன் தமிழை
மட்டுமே கற்றிருந்தவர் பின்னர் ஆங்கிலத்தை கற்று பல தொழிற்சங்க பேச்சு
வார்த்தைகளில் தோட்ட நிர்வாகிகளுடனும் - முதலாளிமார் சம்மேளனத்துடனும்
சரளமாக ஆங்கில மொழியில் அவர்கள் அதிர்ச்சியடையும்படி பேசத்தெடங்கினார்.!
மலையக மக்கள் முன்னணியின் மற்றொரு பிரிவான தொழிங்சங்கத்துக்கும் நான்
செயலாளராக இருந்த போது அமரர் செல்லசாமி அவர்களும் நானும் இணைந்து நீண்ட
நாட்கள் நீடித்த தலவாக்கொல்லை மடக்கும்புர தோட்ட வேலை நிறுத்தப்
போராட்டத்துக்கு பின்னணியில் நின்றோம். பெர்ணான்டோ என்ற ஒரு தோட்ட
நிர்வாகிக்கு எதிராக அவரை இடமாற்றம் செய்ய வேண்டுமென அனைத்துச் சங்க
தொழிலாள இளைஞர்கள் செயல்பட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு சுவாரசியமான
சம்பவம் நடந்தது. வேலை நிறுத்த காலத்தில் தொழிலாளருக்கு முற் பணம் கொடுக்க
முடியாதென்று அந்த தோட்ட நிர்வாகி மறுத்து விட்டார்.! தொழிலாளருக்கு தினசரி
செலவுக்கு பணம் தேவை. செல்லா அவர்களும்¸ நானும் “கை செலவுக்கு கொழுந்த
பறிச்சி கொழுந்து யாவாரிகள்கிட்ட வித்துக்கிட்டா என்னா..?” என்று யோசனை
சொன்னோம்!. உடனே இளைஞர்கள் “அதெல்லாம் சோக்கா நடக்குதுங்க சேர்.!.” என்று
பலமாகச் சிரித்தார்கள்…! கொழுந்து மூட்டைகளை கிராமத்து வியாபாரி வாங்கி
செல்வார்..! நிர்வாகம் காவலர்களை அனுப்பி வைக்கும்…. காவலர்களுக்கு
இளைஞர்கள் தென்னங்கள்ளு சப்ளை பண்ணுவார்கள்..!..காவலர்கள் கித்துல் கள்ளு
கேட்பார்கள். அதுவும் கிடைத்தது…!
அடுத்த வாரம்…. “தொழிலாளர்கள் வேலை
நிறுத்தக் காலத்தில் கொழுந்தைப் பறித்து விற்கத் தொடங்கி வட்டார்கள். இது
அராஜகச் செயல்.. நீங்கள் இருவரும் உடனே பேச்சு வார்த்தைக்கு வர வேணடும்.
பேச்சு வார்த்தை வட்டகொடை சிங்கள பாடசாலையில் நடைபெறும்” என்று கம்பெனி
எங்களுக்கு கடிதம் எழுதியிருந்தது.
செல்லாவும்¸ நானும்
பாடசாலைக்குச் சென்றிருந்தோம். அந்த பாடசாலையில் ஒரு மூட்டை தேயிலைக்
கொழுந்து பேச்சு வார்த்தை மேசையின் பக்கம் இருந்தது.! தோட்ட நிர்வாகி
எழுந்து “இது என் தோட்டத்து கொழுந்து.. வழியில் பறிமுதல் செய்து கொண்டு
வந்தேன்.” என்று சத்தம் போட்டார். அப்போது செல்லா எழுந்து “ ஜோக்கடிக்க
வேண்டாம் மிஸ்டர் பெர்ணான்டோ!.. இது எப்படி உங்கள் தோட்டத்து கொழுந்து
என்று அடையாளப்படுத்த முடியும்? ஒவ்வொரு கொழுந்திலும் மடக்கும்புர என்று
“ப்ரேன்ட்” போடப்பட்டிருக்கிறதா..? கண் சாட்சி இல்லாமல் தொழிலாளியை
திருடன் என்று குற்றம் சாட்ட முடியுமா..? என் தொழிலாளருக்கு மான நஷ்ட ஈடு
வழக்கு தொடர்ந்து இன்னும் பல நாட்களுக்கு வேலை நிறுத்தத்தை தொடரப்
போகிறோம்… கம்பெனி பல கோடி ருபா பணம் கட்ட வரும்!” என்று கர்ஜனை செய்தார்.
உடனே கம்பெனிகாரர்கள் சமாதானத்துக்கு வந்தார்கள்…! தொழிலாளர் பிரச்சனைகளை
தீர்ப்பதாக உறுதி கூறினார்கள்..! வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்தது.! அந்த
நிர்வாகியும் இடம் மாற்றப்பட்டார்.! இந்த சம்பவத்துக்கு அன்றைய
இளந்தொழிலாளர்கள் சாட்சி..!
அன்றிலிருந்து இன்று வரை இவ்வாறான
தொழிற்சங்கவாதியை¸ தொழிலாளர்கள் தேடிக் கொண்டே இருக்கிறார்கள்..! அமரர்
செல்லசாமியின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம். அன்னாரின்
குடும்பத்தாருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள். (படம்: சென்னையில் நடந்த உலகத் தமிழ் பேரமைப்பு மாநாட்டில் (2002) கலந்துக்கொள்ள எங்களோடு வந்திருந்தபோது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக