செவ்வாய், 30 ஜூலை, 2019

கேரளா வந்த சே குவேரா மகள் அலெய்டா குவேரா! -பினராயி விஜயனுடன் சந்திப்பு

விகடன் : மார்க்சிய சிந்தனையாளர்களால் பெரிதும் மதிக்கப்படும் தலைவரான சே குவேராவின் மகள் அலெய்டா குவேரா கியூவிலிருந்து கேரளா வந்தார். அப்போது அவர் முதல்வர் பினராயி விஜயனைச் சந்தித்தார். கியூபாவின் விடுதலைக்குப் பாடுபட்ட முக்கியத் தலைவர், சே குவேரா. நாட்டின் விடுதலைக்குப் பின்னர் அவருக்கு பெரிய பொறுப்புகள் வழங்கப்பட்டபோது அதை ஏற்க மறுத்து பிற நாடுகளின் விடுதலைக்காகப் பாடுபடப்போவதாக அறிவித்தவர். மார்க்சியவாதிகளால் போற்றப்பட்டு வரும் அவரது வரலாற்றை அறிந்து கொள்வதில் கேரள இளைஞர்கள் மிகுந்த ஈடுபாடு காட்டுகிறார்கள். ஜனநாயக இந்திய வாலிபர் சங்கத்தினர், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் சே குவேரா படம் பொறித்த டீ-சர்ட் அணிவதையும் அவரது உருவப் படத்தை வாகனங்களில் பொறிப்பதையும் பெருமைக்குரியதாகக் கருதுகிறார்கள்.






கேரள முதல்வருடன் அலெய்டா குவேரா
இந்திய இளைஞர்கள் மற்றும் மார்க்சிய சிந்தனையாளர்களின் மதிப்புக்கு உரியவராக விளங்கும் சே குவேராவின் மகள் அலெய்டா குவேரா பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக கேரளாவுக்கு வந்துள்ளார். டெல்லி வழியாக திருவனந்தபுரம் வந்து சேர்ந்த அவர் இன்று கேரள முதல்வர் பினராய் விஜயனை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது மார்க்சிஸ்ட் கட்சியின் பொலீட்பீரோ உறுப்பினரான எம்.ஏ.பேபி உடனிருந்தார்.


இந்தச் சந்திப்பு குறித்து தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ள பினராயி விஜயன், ``கடந்த 1994-ம் ஆண்டு கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்தார்கள். அதே வருடத்தில் கியூபாவில் ஒற்றுமை மாநாடு நடந்தபோது கேரளாவில் இருந்து முக்கியத் தலைவர்கள் பங்கேற்றோம். அந்தச் சம்பவத்தை எம்.ஏ.பேபி நினைவுகூர்ந்தபோது, தானும் அந்த மாநாட்டில் பங்கேற்றதையும் அப்போது அது குறித்து விவாதித்ததையும் அலெய்டா குவேரா தெரிவித்தார்.



பினராயி விஜயன் ஃபேஸ்புக் பதிவு



பினராயி விஜயன் ஃபேஸ்புக் பதிவு
கேரளாவுக்கு இதற்கு முன்பு வந்ததைக் குறிப்பிட்ட அலெய்டா குவேரா, இயற்கை எழில் கொஞ்சும் அழகு தன்னைக் கவர்வதாக மகிழ்ந்தார். கேரளாவில் மார்க்சிஸ்டுகளின் கோட்டையாகத் திகழும் கண்ணூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 1-ம் தேதி நடக்கும் மாநாட்டிலும், மறுநாளில் எர்ணாகுளம் நகரில் நடக்கும் மாநாட்டிலும் அலெய்டா குவேரா பங்கேற்க உள்ளார்’’ எனக் குறிப்பிட்டுள்ளார். மிகுந்த மரியாதையுடன் போற்றப்படும் தலைவராக மறைந்த சே குவேரா உள்ள நிலையில், அவரின் மகளது பேச்சைக் கேட்க கேரள மாநில இளைஞர்கள் ஆர்வமாக உள்ளனர்.

கருத்துகள் இல்லை: