ஞாயிறு, 28 ஜூலை, 2019

எம்ஜிஆருக்கு முன்பே கலைஞர் பணக்காரராக இருந்தாரா?

Kathir RS : கேள்வி: எம்ஜிஆருக்கு முன்பே கலைஞர் பணக்காரராக இருந்தாரா? -Jashwant Krishna சென்னை
பதில்: இந்த கேள்வி வரலாறு தெரிந்தவர்களுக்கு சிரிப்பூட்டும் என்றாலும் திரிக்கப்பட்ட பல கட்டுக் கதைகள் இந்த சமூகத்தில் பரப்பப்பட்டு வருகின்றன என்பதும், அவைதான் உங்களைப்போன்ற இளைஞர்களை இப்படி கேள்வி கேட்க வைக் கின்றன என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. சரி கவனமாக படியுங்கள்.
கலைஞர் பிறந்தது 1924ல்.
சேலத்தில் செயல்பட்ட ஜுபிடர் துரைப்பட நிறுவனத்தில் கதை வசனம் எழுத்தாளராக வேலைக்கு சேர்ந்தது 1944ல் அதாவது இருபது வயதில். (அவர் முதன் முதலில் சேலத்துக்குதான் சென்றார்.சென்னைக்கு அல்ல)
மூன்றாண்டுகள் உதவி எழுத்தாளராக இருந்தவருக்கு 1947ல் ராஜகுமாரி என்ற திரைப்படத்தில் முதல் அங்கீகாரம் கிடைத்தது அதாவது உதவி ஆசிரியர் மு.கருணாநிதி என்ற பெயரில்.
அப்போது அவருக்கு வயது 23.அந்த படத்தில் முன்னணி பாத்திரத்தில் நடித்தவர் எம்ஜிஆர்.
கலைஞருக்கு அடுத்தடுத்து படங்கள் அமைந்தன. 1948ல் அபிமன்யு,1949ல் மருதநாட்டு இளவரசி 1950ல் மந்திரிகுமாரி என படங்கள் தந்த புகழில் கலைஞர் உச்சத்துக்கு போனார்.

1952ல் கலைஞர் சொந்தமாக கார் வைத்திருந்தார்(படம் பார்க்க) கோபாலபுரத்தில் வீடும் வாங்கிவிட்டார்(1955)
அப்போதிருந்த திராவிட இயக்கத்தினரிடையே மிகவும் இளையவராகவும் பணக்காரராகவும் இருந்தவர் கலைஞர்.
எம்ஜிஆர் நடித்த எல்லா படங்களுக்கும் நட்பின் அடிப்படையில் கலைஞர் கைகொடுத்து வாய்பளித்தார்.
எம்ஜிஆருக்கு மந்திரிகுமாரி படம் திருப்புமுனையாக அமைந்தது(1950)
அப்படம் திருப்புமுனையாக இருந்தாலும் அவரை சூப்பர் ஸ்டார் உயரத்துக்கு கொண்டு சென்ற படம் மலைக்களளன (1954).அதுவும் கலைஞர் திரைக்கதை வசனம் எழுதிய படமாகும்.
ஆனால் அதற்குமுன்பே கலைஞர் ஒரு மாபெரும் சூப்பர்ஸ்டாராக இருந்தார்.
அவர் கதைவசனம் எழுதி சிவாஜிகணேசன் அறிமுகமான பராசக்தி திரைப்படம் 1952 வந்தது.
இங்கே கவனிக்க வேண்டியது 1952 முதல் 1954 வரை சிவாஜியை விடவும் எம்ஜிஆர் சின்ன நடிகராக இருந்தார் என்பதாகும்
இன்னொன்று சொல்கிறேன்.
திமுக தொடங்கப்பட்டது 1949ல்
முதன் முதலில் தேர்தலின் நின்றது 1959ல்
வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது 1967ல். கலைஞர் அமைச்சாரனதும் அப்போதுதான்.
1944ல் தனது சினிமா வாழ்க்கையைத் தொடங்கி 1947ல் உச்சம்பெற்று 1952ல் சூப்பர்ஸ்டாராகி 1955க்குள் தனக்கு தேவையான எல்லா சொத்துக்களையும் தனது உழைப்பால் கலைஞர் சேர்த்துவிட்டார்.
அது மட்டுமல்ல. எம்ஜிஆர் சிவாஜி என்ற மாபெரும் திறமை படைத்த திரைக் கலைஞர்களை உலகத்திற்கு கொடுத்திருக்கிறார்.
அவர் கோடீஸ்வரனாகி சுமார் 13 ஆண்டுகள் கழித்துதான் அமைச்சர் பதவிக்கு வந்தார்.
இன்றைக்கும் கலைஞரின் சொத்து 1955ல் எவ்வளவு இருந்ததோ அவ்வளவுதான் இருக்கிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.அந்த சொத்து கூட எதிர்காலத்தில் மருத்துவமனையாக வேண்டும் என்றே அவர் உயில் எழுதி வைத்திருக்கிறார்.
தங்கள் சந்தேகம் தீர்ந்திருக்கும் என நம்புகிறேன்.
Kathir RS
28/7/19

கருத்துகள் இல்லை: