வியாழன், 22 மார்ச், 2018

திராவிட மொழி தோற்றம் 4500 ஆண்டுகளுக்கு முற்பட்டது, அது 6000-6500 ஆண்டுகளுக்கு முன்பாகவும் இருக்க வாய்ப்பு?


Aazhi Senthil Nathan : திராவிட மொழிக்குடும்பத்தின் தோற்றம் 4500 ஆண்டுகளுக்கு முற்பட்டது, அது 6000-6500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகவும்கூட இருக்கக்கூடும் என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
A Bayesian phylogenetic study of the Dravidian language family என்கிற தலைப்பில், Vishnupriya Kolipakam, Fiona M. Jordan, Michael Dunn, Simon J. Greenhill, Remco Bouckaert, Russell D. Gray, Annemarie Verkerk ஆகிய ஆய்வாளர்கள் வெளியிட்ட ஆய்வுக்கட்டுரை ஒன்று நேற்று http://rsos.royalsocietypublishing.org/content/5/3/171504 இல் வெளியிடப்பட்டது. இக்கட்டுரை பற்றி நேற்றே பல செய்திகள் வந்துள்ளன. (கூடுதலாக நீங்கள் தேட உதவும் என்பதால் கட்டுரை, கட்டுரையாளர்களின் பெயர்களை ஆங்கிலத்திலேயே கொடுத்திருக்கிறேன். மொழியியலாளர்கள் யாரேனும் இக்கட்டுரையை மொழிபெயர்த்தால் நன்றாக இருக்கும்).
தமிழின் தொன்மை, திராவிட மொழிகளின் தோற்றம் குறித்த பல ஆய்வுகள் நீண்ட காலமாகவே மொழியியல், அகழ்வாய்வுகள் சார்ந்தே இருந்தன. பல கருத்துகள் தொன்மங்கள் என்கிற நிலையிலிருந்து மேம்படாமலிருந்தன. ஆனால் அண்மைக்காலத்தில் மரபணு ஆய்வுகளும் மனிதப்புலப்பெயர்வு தொடர்பான ஆய்வுகளும் தென்னிந்திய நிலப்பகுதியில் வாழ்ந்த மூதாதையர் குறித்து பல புதிய வெளிச்சங்களைக் காட்டிவருகின்றன.

அந்த வரிசையில் மொழியியல் துறை சார்ந்த புதிய அணுகுமுறைகளின் வழியாக மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வு திராவிட மொழிகளின் காலம் 4500 ஆண்டுகள் என உறுதியாகச் சொல்கின்றது. அது 6000-6500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகவும் இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு எனத் தெரிவிக்கின்றன. ( " We find the general congruence across models on a median root age for the Dravidian language family of around 4000–4500 years ago including similar 95% HDP ranges supportive of a positive evaluation of the dating results. Nevertheless, the uncertainty on the root age is large, especially for the best-fitting analyses featuring a relaxed clock. Therefore, we cannot exclude the possibility that the root of the Dravidian language family is 6000 or 6500 years old.").
இந்த ஆய்வு Bayesian phylogenetic ஆய்வு என்று அழைக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட கருதுகோள் தொடர்பாக கூடுதலான சான்றுகள் உருவாகும் போது, அந்தச் சான்றுகளின் அடிப்படையில் அந்த கருதுகோள் எந்த அளவுக்குச் சரி என்று ஆய்வதற்கு பேயஸியன் புள்ளியியல் முறை உதவுகிறது. ஒரு குறிப்பிட்ட குழுவுக்குள் ஒன்றிலிருந்து ஒன்று எப்படி கிளைக்கிறது என்பதை அறிய பைலைஜெனிட்டிக் முறை உதவுகிறது.
மொழி சார்ந்த எல்லா ஆய்வுகளும் நம்மைப் பொறுத்தவரை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தவை. இன்னமும் தமிழ் மொழிக்கு உரிய முக்கியத்துவத்தை அளிக்க மறுக்கும், தமிழை தொன்மொழியாக ஏற்க மறுக்கும் இந்தியாவில், தென்மாநிலங்கள் புறக்கணிக்கப்படுகிறது என்கிற உணர்வு மின்னல்வேகத்தில் பரவிவருகிற ஒரு நிலையில், இந்தச் செய்தி கூடுதல் கவனம் பெறவே செய்யும்.
மக்கள் பரவல் தொடர்பான மரபணுவியல் ஆய்வில் பயன்படுத்தப்பட்ட Ancestral South Indian என்கிற கருதுகோளையும் மொழிக்குடும்ப தொடர்பு தொடர்பான இந்தக் கருதுகோளையும் சேர்த்துப் பார்க்கையில், மேலும் பல புதிர்களுக்கு விடை கிடைக்கலாம்.
http://rsos.royalsocietypublishing.org/content/5/3/171504

கருத்துகள் இல்லை: