சனி, 21 ஜனவரி, 2017

வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு தமிழ்நாட்டில் நிரந்தர தடை ! மெரீனாவில் சங்கு ஊதப்பட்டது!


பெப்சி, கோக் போன்ற வெளிநாட்டு குளிர்பானங்களை இனி குடிக்கக் கூடாது, கடைகளில் விற்கக் கூடாது என, தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. தென் தமிழ்நாட்டின் நீராதாரங்களை உறிஞ்சுவதில் இந்த வெளிநாட்டு குளிர்பான நிறுவனங்களுக்கு முக்கியப் பங்குண்டு. விவசாயிகளுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரைத்தான் இந்த நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன. இதனால் குளிர்பானங்களை பயன்படுத்தக் கூடாது என்ற கோஷம் மக்களிடம் ஓங்கி ஒலிக்கிறது. சமீபத்தில் பெப்சி, கோக் போன்ற குளிர்பானங்களை கடையில் இருந்து வாங்கி சாலையில் ஊற்றிய போராட்டமும் கோவில்பட்டியில் நடந்தது. இப்போது சென்னைக்கு அருகில் வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு மாலை போட்டு ஒப்பாரி வைத்து இறுதிச் சடங்கு நடத்தி எதிர்ப்புத் தெரிவித்துள்ளதும் நடந்திருக்கிறது.


சென்னை அருகேயுள்ள கூடுவாஞ்சேரியை அடுத்துள்ள ஆதனூர், டி.டி.சி.நகர், மாடம்பாக்கம், ஒரத்தூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவுகோரி, கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் மனிதச் சங்கிலி நடத்தினர். இதற்கு குன்றத்தூர் ஒன்றிய திமுக மகளிரணி செயலாளரும் முன்னாள் ஒன்றியக் கவுன்சிலருமான மலர்விழி தமிழ்அமுதன், இளைஞரணிச் செயலாளர் ஸ்ரீதர் ஆகியோர் தலைமை தாங்கினர். ஊரப்பாக்கம்- காரணைப்புதுச்சேரி கூட்ரோடு, வண்டலூர் உயிரியல் பூங்கா எதிரே 1000க்கும் மேற்பட்ட இளைஞர்கள், வியாபாரிகள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பெண்கள் உட்பட பொதுமக்கள் கலந்துகொண்டு கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் உள்ள கொளப்பாக்கம் பகுதியில் மக்கள் வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு பாடை கட்டி, மாலை போட்டு, ஒப்பாரி வைத்தனர். பின்னர், தேங்காய் உடைத்து ஏராளமான பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கருத்துகள் இல்லை: