புதன், 18 ஜனவரி, 2017

டிவி பார்த்துட்டு இருக்க முடில. அதான் கெளம்பி வந்துட்டோம்!’ – போராட்டத்தில் பெண்கள்

ஜல்லிகட்டு போராட்டத்தில் கல்லூரி மாணவிகள்ஜல்லிக்கட்டு நடைபெறாததால் தமிழ்நாடு முழுவதும் பலத்த போராட்டங்கள் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் நேற்று அலங்காநல்லூரில் இரவு பகலாக மாணவர்கள் போராட்டம் நடத்தினர். மாணவர்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தவும் நிலைமை மிகவும் பூதாகரமாக வெடித்தது. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மாணவர்கள் கைது செய்யப்பட்டு, தனியார் மஹாலில் அடைக்கப்பட்டனர். பிறகு சில மாணவர்கள் மட்டும் விடுவிக்கப்பட்டனர். அதனை தொடர்ந்து அலங்காநல்லூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பெண்கள் சாலை மறியலில் இறங்க, இளைஞர் பட்டாளர் அதிக உத்வேகம் அடைந்தனர். அப்படி போராட்டத்தில் ஈடுபட்ட சில பெண்களிடம் பேசினோம். அவர்கள் கூறுகையில்,

ஜல்லிகட்டு போராட்டத்தில் முத்துமாரி (அலங்காநல்லூர்)
முத்துமாரி:
”எனக்கு வயது 65 ஆச்சு. எனக்கு கல்யாணம் ஆனா நாள்ல இருந்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்ட பாத்திக்கிட்டு வர்றேன்.
என் வீட்ல ரெண்டு மாடு வளர்க்கிறேன். ரெம்ப பாசமா வைச்சுக்குவேன். ஆனா, மாட கொடுமை பண்றதா சொல்லி பீட்டாக்காரங்க தடை பண்ணி வைச்சிருக்கிறதை மனசு ஏத்துக்க மாட்டிக்குது. யாராவது பெத்த புள்ளய கொல்ல பார்ப்பாங்களா சொல்லுங்க? நாங்க வளர்கிற மாட ஜல்லிக்கட்டுல விடுறதுல இவுங்களுக்கு என்ன கஷ்டம் இருக்கு.
நேத்து நிறைய ஊர்ல இருந்து வந்த படிக்கிற பசங்கள போலீஸ் பிடிச்சுட்டு போய் கொடுமப்படுத்துனாங்க. அவங்களுக்கு ஒரு வா தண்ணி கொடுக்க கூட போலீஸ் விடல. மனசு பொறுக்காம நான் எங்க வீட்ல டீ போட்டு கொடுக்க போனா, அதையும் போலீஸ் தட்டி விட்டிருச்சு. போலீஸும் தமிழ்நாட்டுக்காரங்கதான… அப்புறம் ஏன் இப்புடி பண்றாங்க. நேத்து என் மவனையும் போலீஸ் கைது பண்ணி கூட்டிட்டு போயிடுச்சு. இன்னும் அவன் வீடு திரும்பல பீட்டாகாரங்க இங்க வரட்டும் அப்புறம் இருக்கு சங்கதி” என்றவர் போராட்டத்தில் ஐக்கியமானார்”.
அலங்காநல்லூர் போராட்டத்தில் ரீட்டா சரவணன்
ரீட்டா சரவணன்:
”நான் மேட்டுப்பட்டியில் இருந்து வாரேன். அலங்காநல்லூர் பக்கத்து கிராமம்தான் எங்களோடது. நாங்க நெறைய பொம்பளைங்க இங்க பச்ச தண்ணீ கூட குடிக்காம ராப்பகலா உக்காந்திருக்கோம். ஒரு அமைப்பு சார்பா இங்க 50க்கும் அதிகமான பொம்பளைங்க ஒண்ணு கூடியிருக்கோம். தன்னைப் பத்தி கவலப்படாம போராட்டம் பண்ணிட்டு இருக்கிறவங்கள டிவியில பார்த்துட்டு சும்மா இருக்க முடியல. அதான் கெளம்பி வந்துட்டோம். எங்க வீட்டுல எல்லாருமே இதோ, இந்த கூட்டத்துலதான் உக்காந்திருக்காங்க. ஆனா எங்கனு தெரியல. கண்டிப்பா ஜல்லிக்கட்டு நடக்கணும். எங்களலா வீட்ல டீவிய பாத்திக்கிட்டு சும்மா இருக்கமுடியல எங்க… எங்க இருந்தோ பசங்க வந்து போராடுராங்க நாம ஏன் போராடக்கூடாதுன்னு கிளம்பி வந்துட்டோம். கண்டிப்பா ஜல்லிக்கட்டு நடத்தியே ஆகணும். இல்லாட்டி எதிர்காலத்துல மாடுகளே இல்லாம போயிரும்ய்யா”.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ராமுதேவி
ராமுதேவி:
”நானும் மேட்டுப்பட்டியில் இருந்துதான் வர்றேன். போராட்டம் தீவிரமாகுதுனு தெரிஞ்சதும் எல்லா பொம்பளைகளும் கெளம்பிட்டோம். எல்லா வேலையையும் வீட்டுல அப்படியே உட்டுட்டு ஓடியாந்துட்டேன். இங்கன வந்த பெறகுதான் மனசே நிம்மதியா இருக்கு. நியாயத்துக்காக போராடுறோம். எங்கள மாதிரி கிராமத்து சனத்துக்காக வெளியூர்ல இருந்து வந்து பச்ச தண்ணி கூட குடிக்காம கஷ்டப்படுற பசங்கள பார்த்தா மனசுக்கு சந்தோஷமா இருக்குய்யா. என்ன நடக்க போகுதுனு தெரியல. ஆனா என்ன நடந்தாலும் நாங்க வீட்டுக்கு போக போறதில்ல. அது நிச்சயம்”.
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் மாணவர்கள்

சே.சின்னதுரை
vikatan.com

கருத்துகள் இல்லை: