அடேயப்பா! எவ்வளவுப் பெரிய ஆர்ப்பாட்டம்! மோடி என்ற புதிய அவதார புருஷனைப் பாரீர்! எத்தகைய அசகாய சூரர் இவர்.
நூற்றாண்டைக் கண்ட காங்கிரசை நூல் நூலாகப் பிரித்து எடுத்து விட்ட ஜாம்பவான் இவர்!
குஜராத்தை எப்படி எல்லாம் தூக்கி உட்கார
வைத்தார். இந்தியாவையும் இமய மலை எவரஸ்டுக்கு மேலும் பறக்க விடுவார் என்று
கார்ப்பரேட்டுகளின் கைகளில் உள்ள ஊடகங்களும் ,பார்ப்பனமயமான பத்திரிகைகளும்
பராக்குப் பாடினரே!
அந்தப் பட்டம் ஒரு எட்டு மாதத்தில் கிழிந்து தொங்கும் என்று யார்தான் எதிர்ப்பார்த்திருக்க முடியும்?
இந்தியாவின் தலைநகரமான டில்லிக்கு உட்பட்ட
ஏழு மக்களவைத் தொகுதி களையும் வென்று வாய்க்குள் போட்ட பா.ஜ.க. - எட்டு
மாதத்திற்குள் மூன்றே மூன்று சட்டப் பேரவை இடங்களைக் கைப்பற்றி 67
தொகுதிகளில் மண்ணைக் கவ்வியது என்றால் எளிதில் நம்ப முடியாதுதான். ஆனாலும்
என்ன செய்ய! அதுதான் நடந்தது - நடந்தே விட்டது.
இவ்வளவுக்கும் பிரதமர் மோடி அய்ந்து
இடங்களில் அடேயப்பா கோடையிடியாக அல்லவா முழங்கினார் அந்தப் பேச்சில் தான்
எத்தனை எத்தனை மின்னல் வெட்டுகள்! அக்னிப் புயல்களின் ஆவேச ஆட்டம்!
ஆட்சியின் சாதனைகளை எடுத்துக் கூறி
அலசினாரா? வாக்குறுதிகளை நிறைவேற்றிய பட்டியல் பட்டத்தைப் பறக்க
விட்டாரா?அதுதான் இல்லை வைத்துக் கொண்டா வஞ்சனை செய்தார் - சட்டியில்
இருந்தால்தானே அகப்பையில் வரும்?
அதற்குப் பதிலாக ஆம் ஆத்மி கட்சி யின்
தலைவரும் டில்லி முதல் அமைச்சருக் கான வேட்பாளருமான கேஜ்ரிவாலை சும்மா
புரட்டிப் புரட்டியடித்தார்!
தனிப்பட்ட முறையில் தாக்குத் தாக்கு என்று தாக்கித் தள்ளினார்.
பந்தை அடிக்க முடியவில்லை என்றால் காலைத் தானே அடிப்பார்கள்? அந்தத் தப்பாட்டத்தைத்தான் பிரதமர் மோடி அழகாகவே ஆடிக்காட்டினார்.
யார் இந்த கெஜ்ரிவால்? அராஜகவாதி, வெற்று
ஆர்ப்பாட்டக்காரர், கடைந்தெடுத்த பொய்யர், தீவிரவாதிகள் என்று சொல்லிக்
கொள்ளும் இவர்கள் நக்சலைட்டுகளிடம் தஞ்சமாக வேண்டியவர்கள் - அராஜகம்
டில்லிக்கு உரியதல்ல - நாட்டின் தலைநகரம் - மய்யப் பகுதி என்று அடேயப்பா
அவர் பேச்சு முழுவதும் அரட்டைக் கச்சேரி யாகவே இருந்தது.
49 நாட்களில் ஆட்சியை விட்டே ஓடியவர்களை வாக்காளர்களே நீங்கள் தண்டிக்க வேண்டும் என்று போர்ப் பாட்டும் பாடினார்.
கெஜ்ரிவாலின் குடும்பத்தைப் பற்றியும்
குழந்தைகளையும் கூட விட்டு வைக்க வில்லை; ஏன் அவர் சார்ந்த ஒட்டு மொத்த
சமுதாயத்தையும் சாடு சாடு என்று சாடி னார்கள் (வாழ்க அவர்களின் வழியும்
தார்மீகப் பண்பாடும்!)
அவர் மட்டுமல்ல; கட்சியின் தலைவர்
அசாத்திய சாணக்கியர் என்று அண்டம் குலுங்கப் பிரச்சாரம் செய்யப்படும்
அமித்ஷா செய்யாத தந்திரங்களா? சூழ்ச்சிகளா?
மோடியும், அமித்ஷா மட்டுமா? 20 மத்திய
அமைச்சர்களும் 120 நாடாளுமன்ற உறுப்பினர்களும் களம் இறக்கப்பட்டனர் -
விட்டேனா பார்! நானா நீயா? என்று சவால் விட்டனர்.
இதில் என்ன வேடிக்கை தெரியுமா? டில்லி
தேர்தலில் இந்தியாவையே ஆளும் பிஜேபி கட்சி ஒரு தேர்தல் அறிக்கையைக் கூட
முன்வைக்கவில்லை! (வாய் நீளத்தைப் பாரு!)
ஆனால், ஆகாயத்திலிருந்து, அதிசய தேவதையாக
பாராசூட்டில் குதிக்கச் செய் யப்பட்ட அய்.பி.எஸ் அதிகாரி கிரண்பேடி 35
கேள்விகளை கெஜ்ரிவால் முன் வைத்தார். சவாலைச் சந்திக்கத் தயார் என்று
வரிந்து கட்டி கெஜ்ரிவால் நின்றதுதான் தாமதம் - பதுங்கி விட்டார்
அய்.பி.எஸ். அதிகாரி! - அதையெல்லாம் சட்டசபையில் பேசிக் கொள்வோம் என்று
சறுக்கினார். முதல் கோணல்! அந்தோ பரிதாபம், சட்டசபைக்கே அவர் போக
முடியவில்லை!.
ஆம் ஆத்மியோ முறையாக தேர்தல் அறிக்கையை
வெளியிட்டது. மோடி பாணியில் முண்டா தட்டாமல் மக்கள் பிரச்சினையை மட்டும்
மய்யப்படுத்தி பிரச்சாரப் பெருமழையைப் பெய்தது.
டில்லி தேர்தல் அறிவிக்கப்பட்டு
பிரச்சாரம் நடந்து கொண்டிருக்கும் அதே கால கட்டத்தில், ஆர்.எஸ்.எஸ். சங்பரி
வார்கள் தங்களுக்கே உரித்தான ஆபாச - அநாகரிகப் பேச்சுகளை அள்ளிக் கொட்
டினர்.
கலை நிகழ்ச்சி நடத்தி வந்த ஒரு பெண்மணி -
மத்திய அமைச்சராகவும் ஆக்கப்பட்ட நிலையில், தேர்தல் பிரச்சாரத் தில் பிச்சி
உதறினார் பாருங்கள்.
இந்தியாவில் ராமனை ஏற்றுக் கொண்டவர்கள்
அனைவரும் ராமனின் பிள்ளைகள், (ராம் ஜாதி) ராமனை ஏற்றுக் கொள்ளாதவர்கள்
அனைவரும் முறைதவறிப் பிறந்தவர்கள் (ஹராம் ஜாதி) என்ற பொறுக்கி எடுத்த
முத்து களை உதிர்த்தார் மத்திய அமைச்சரான பெண்மணி - சாத்வி நிரஞ்சன் ஜோதி.
விஸ்வ ஹிந்து பரிஷத் ஏற்பாடு செய்திருந்த
தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பி.ஜே.பி.யைச் சேர்ந்த பிராச்சி சாமியாரிணி
என்ன பேசினார் தெரியுமா?
இந்துக்கள் நான்கு குழந்தை களைப் பெற
வேண்டும் என்று நாட்டு நலனில் அக்கறை கொண்டு பேசிய நமது மூத்த சாதுக்கள்
மற்றும் இந்து நலனுக்கு என்றென்றும் பாடுபடும் நமது அரசியல் தலை வர்கள்
கூறினால், தேச நலனுக்கு எதிரான சிலர் இந்தக் கூற்றைத் தவறாகச் சித்தரித்து
மக்களிடையே பொய்ப் பிரச்சாரம் செய்கின்றனர். இவர்கள் இந்து நலனுக்கு
எதிரானவர்கள், இந்து ராஷ்டிரம் அமைவதற்கு முட்டுக்கட்டை போடுப வர்கள்
இவர்களால் நமக்கு என்றும் தொல்லைதான்.
ஆனால், லவ்ஜிகாத் (முஸ்லீம்கள்)
செய்பவர்கள் 40 குழந்தைகளை நாய் களைப் போல பெற்றுத் தள்ளுகின்றனர் (மிஙிழி
லிமிக்ஷிணி 2.2.2015) என்று தேர்தல் நேரத்திலேயே இப்படி திருவாய் மொழிந்த
தீரர்கள் இவர்கள்.
பிரதமர் மோடியே தனிப்பட்ட முறையில்
முதல்வருக்கான எதிர்க்கட்சி வேட்பாளரை வேண்டும் அளவுக்குத் திட்டித்
தீர்த்தார் என்றால் மற்ற அரை வேக்காடுகளைக் குறை கூறி என்னபயன்?
இது ஒரு பக்கம் என்றால்... இன்னொரு பக்கம்
கிறித்தவர்களின் தேவாலயங்களை இடிக்கும், எரிக்கும் வேலையும் ஒகோ என்று
டில்லியில் நடைபெற ஆரம்பித்தன.
நவம்பர் 22 முதல் டிசம்பர் 3 வரை டில்லி
கிழக்கு தில்சாத் கார்டன்,தாகிர் பூர், கிழக்கு டில்லி தேவாலயம் மற்றும்
செயின்ட் செபாஸ்டியன் தேவாலயங்கள் சமூக விரோதிகளால் தீக்கிரையாக்கப்பட்டன.
மாலைஆராதனை நடந்து கொண்டி ருந்த பாத்திமா ஃபொரேன் தேவாலயத்தின் சாளரங்கள்
கடந்த டிசம்பர் மாதம் தொடர்ந்து 5 முறை கல்வீசி கண்ணாடி மற்றும் ஜன்னல்கள்
நொறுக்கப்பட்டன. இந்தத் தேவாலயம் தெற்கு டில்லியின் பாதுகாப்பு நிறைந்த
ஜசோலா பகுதியில் அமைந்திருக்கிறது
மேற்கு டில்லியின் விகாஸ் புரியில் ஒரு
தேவாலயம் ஜனவரி 15-ஆம் தேதி தாக்கப் பட்டது. இதற்கும் சற்று முன்பாக ஒரு
தேவாலயத்திற்கு வைக்கப்பட்ட தீயில் குழந்தை ஏசுவின் தொட்டில் கருகியது.
மேற்கு டில்லியின் ரோகினி என்னு மிடத்தில் இந்தத் தேவாலயம் அமைந்
திருக்கிறது. பிப்ரவரி ஒன்றாம்தேதி அதிகாலையில் புனித அல்போன்ஸா
தேவாலயத்துக்குள் நுழைந்து கூடாரத்தை உடைத்து இருக் கிறார்கள். பின்னர்
பாதிரியாரின் அங்கி மற்றும் திருவிருந்து பாத்திரங்கள் வைக்கப்
பட்டிருக்கும் அறைக்குள் பிரவேசித்து அவற்றை சேதப்படுத்தி இருக்கிறார்கள்.
இந்த சம்பவத்துக்கு விரைந்து நடவடிக்கை எடுப்பதாக காட்டிக் கொள்ள, கொள்ளை
முயற்சி வழக்கை போலீஸ் போட்டிருக் கிறது. ஆனால், தேவாலயத்தில் இருந்த விலை
உயர்ந்த பொருட்களும், காணிக்கை பணமும் கொள்ளை அடிக்கப்படவில்லை.
கிறித்தவர்கள் புனிதமாக கருதும் குறி யீடுகள் மட்டுமே கவனமாக சேதப்படுத்தப்
பட்டுள்ளன.
ஒரு தேர்தல் நேரத்தில் இப்படி வன்முறை
வெறியாட்டம் போடுகிறோமே என்பதைப் பற்றியெல்லாம் அந்தக் கூட்டம்
கவலைப்படவில்லை; கிறித்தவர், முசுலிம் களுக்கு எதிராக வன்முறையை ஏவிப்
பிரச்சினையை ஏற்படுத்தி - இந்து வாக்கு வங்கி - சிறுபான்மையினர் வாக்கு
வங்கி என்று உத்திப் பிரித்து வாக்குகளை வாரிக் கொட்டிக் கொள்ளலாம் எனும்
குரூரப் புத்திதான் இது.
ஏடுகளின் பித்தலாட்டம்!
கருத்துக் கணிப்பு என்ற பெயரில் பத்திரி
கையாளர்கள், ஊடகங்கள் தெரிவிக்கும் தகவல்கள் எந்த அளவுக்கு நம்பிக்கைத்
தன்மை வாய்ந்தவை என்பதற்கு நடந்து முடிந்த டில்லி சட்டப் பேரவைத் தேர்தல்
முடிவுகள் ஒன்று போதும்; அவை விருப்பு - வெறுப்பு அடிப்படையில்
திரிக்கப்படுபவை என்பதை இப்பொழுதாவது பொது மக்கள், வாக்காளர்கள்
தெரிந்துகொள்ள வேண்டும்.
5.2.2015 வெளிவந்த ஏடுகளில் வெளி வந்த கருத்துக் கணிப்பு என்ன?
இந்தியா டுடே மற்றும் சிரோ அமைப் புகள்
இணைந்து வெளியிட்ட கருத்துக் கணிப்பில் ஆம் ஆத்மிக்கு 38 முதல் 46
இடங்களிலும், பிஜேபிக்கு 19 முதல் 25 இடங்களிலும் காங்கிரசுக்கு 3 முதல் 7
இடங்களிலும் வெற்றி வாய்ப்புக் கிட்டும் என்று கூறப்பட்டு இருந்தது; இது
ஏடுகளில் வெளி வந்த நாள்: 5.2.2015
மறுநாள் (6.2.2015) வெளிவந்த கருத்துக் கணிப்புகள் தலைகீழாக மாறின.
ஆர்.டி.அய். நிறுவனம் வெளியிட்ட கருத்துக்
கணிப்பில் பிஜேபிக்கு வெற்றி வாய்ப்பு என்று வெளியிடப் பட்டது. பிஜேபிக்கு
41 முதல் 45 இடங்களிலும், ஆம் ஆத்மிக்கு 21 முதல் 25 இடங்களிலும், காங்கி
ரசுக்கு 4 இடங்களிலும் வெற்றி வாய்ப்பு என்று தெரிவித்தன. முதல் நாள் ஆம்
ஆத்மிக்கு வெற்றி வாய்ப்பு என்றவுடன் பிஜேபி அதிகார வர்க்கம் தலையிட்டு,
இல்லை இல்லை பிஜேபிக் குத் தான் ஆட்சி அமைக்க வாய்ப்பு என்று கருத்துக்
கணிப்பை வெளி யிடச் செய்தது தான் இதற்குக் காரணமாக இருக்க முடியும்.
எல்லாக் கருத்துக் கணிப்பு களையும்
குப்புறத்தள்ளி, ஆம் ஆத்மி இதுவரை காணாத வெற் றியை ஈட்டியுள்ளது. கருத்துக்
கணிப்பல்ல. கருத்துத் திணிப்பு தான் என்ற நமது கருத்து உறுதியாகி விட்டது.
ஆலை முதலாளிகள் கையிலும் (Corporates) உயர்ஜாதி பார்ப்பனர்கள்
கையிலும்தான் ஊடகங்கள் முடங்கிக் கிடப்பதால் அவர் களின் ஆசைக்கு ஏற்ப
இந்தக் கருத்துத் திணிப்புகள் நடந்து வருகின்றன என்பது தான் உண்மை. என்ன
பித்தலாட்டம் செய் தும் பிள்ளை பிழைக்கவில்லை - விளக் கெண்ணெய்க்குக்
கேடாகத்தான் முடிந்தது.
மக்களவையில் போதிய எண்ணிக் கையில்
காங்கிரஸ் இல்லை என்பதால் எதிர்க்கட்சி அந்தஸ்து கிடையாது என்று அரட்டை
அடித்த பிஜேபியின் நிலை - டில்லி சட்டமன்றத்தில் என்ன?
பரிதாப கரமான மூன்று சீட்டு முகவரியாக
அல்லவா அருகி விட்டது. ஆனாலும் கெஜ்ரிவாலோ மிகுந்த பெருந்தன்மையோடு மூன்று
சீட்டு என்றாலும் எதிர்க்கட்சி அந்தஸ்தைத் தரத் தயார் என்று கூறி,
பிஜேபியின் முகத் தில் மொத்தமாகக் கரியைப் பூசி விட்டார்.
தேர்தலுக்கு முன்னதாக மோடி அரசின்
சாதனைக்கு டில்லி மக்கள் வாக்களிப் பார்கள் என்று வக்கணைப் பேசியவர்கள்
படுதோல்வியைச் சந்தித்த நிலையில் டில்லி தேர்தல் முடிவுக்கும் மோடி
ஆட்சிக்கும் தொடர்பில்லை; அதுவேறு இது வேறு என்று சினிமா நகைச்சுவை வசனம்
போல பிதற்ற ஆரம்பித்து விட்டனர்.
நோயை எந்த அளவுக்கு மறைக் கிறார்களோ, அந்த
அளவுக்கு மரணப் படுக்கை அருகில் வருகிறது என்றுதானே பொருள். டில்லி
தேர்தல் மட்டுமல்ல; மத்தியில் பிஜேபி அரசு அமைந்த பிறகு தோல்வி முகம்
அவர்களை துரத்திக் கொண்டுதான் இருக்கிறது (பெட்டி செய்தி தனியே காண்க)
பத்து ஆண்டு தொடர்ந்து மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்ததால் எதிர் வாக்கு
களால் (Anti Incumbency) வெற்றியைப் பறித்தவர்களின் ஆட்டம் எட்டு மாதத்துக்
குள்ளேயே அடங்கி விட்ட பரிதாபத்தை என் சொல்ல!
ஆக மோடிக் கப்பல் கவிழ ஆரம்பித்து விட்டது; காப்பாற்ற நினைக்கிறவர்களையும் சேர்த்து அது கடலுக்குள் இழுத்து விடும் - எச்சரிக்கை!
------------------------
பாரப்பா பழனியப்பா - தோல்வி முகத்தை!
பத்து மாநிலங்களில் 3 மக்களவை, 33 சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.
இதன் முடிவு பாஜகவுக்கு கடும் பின்னடைவை
ஏற்படுத்தியுள்ளது. உ.பி., ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் அதிர்ச்சித்
தோல்வியை சந்தித்துள்ளது. அதே நேரத்தில், மக்களவை தேர்தலில் படுதோல்வியை
சந்தித்த சமாஜ்வாடி, காங் கிரஸ் கட்சிகள் இடைத்தேர்தலில் அதிர்வலையை
ஏற்படுத்தி உள்ளன. மக்களவை தேர்தலில் அமோக வெற்றி பெற்று ஆட்சியை
கைப்பற்றிய பாஜக, உத்தரகாண்ட், பீகார், மத்தியப் பிரதேசம், பஞ்சாப்,
கர்நாடகா சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் பின்னடைவை சந்தித்தது.
உத்தரகாண்டில் 3 தொகுதியிலும் தோற்றது. பீகார், ம.பி., பஞ்சாப்,
கர்நாடகாவில் 18ல் 8 தொகுதியை மட்டுமே கைப்பற்றியது. இந்நிலையில், உத்தரப்
பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் உள்ளிட்ட 10 மாநிலங்களில் காலியாக உள்ள 3
மக்களவை, 33 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 13ஆம் தேதி
நடந்தது. உ.பி.யில் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் ராஜினாமா
செய்த மெயின்புரி தொகுதியில் அவரது பேரன் தேஜ் பிரதாப் சிங் யாதவ் 3.21
லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தெலங்கானாவில் டிஆர்எஸ்
கட்சி தலைவரும் முதல்வருமான சந்திர சேகர ராவ் ராஜினாமா செய்த மேடக்
தொகுதியில் அக்கட்சி சார்பில் போட்டியிட்ட பிரபாகர் ரெட்டி 5,71,800
வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். சட்டப்பேரவை முடிவுகள்: சட்டப்பேரவை
தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு பெரும் பின்னடைவை தந்துள்ளன. 23 தொகுதியில்
போட்டியிட்ட பாஜக 13ல் தோல்வியை சந்தித்துள்ளது. குறிப்பாக பொதுத்
தேர்தலில், 80 தொகுதிகளில் பெரும்பாலானவற்றை கைப்பற்றி சாதனை படைத்த
உ.பி.யில் படுதோல்வியை சந்தித்துள்ளது.
இங்கு 11 தொகுதியில் இடைத்தேர்தல்
நடந்தது. இதில் 8 தொகுதிகளை சமாஜ்வாடி கைப்பற்றி உள்ளது. இதே போல,
ராஜஸ்தானில் ஆளும் பாஜக வசம் இருந்த 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்
நடந்தது. இதில் 3 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றி உள்ளது. தெற்கு கோட்டா
தொகுதியை மட்டுமே பாஜக தக்க வைத்துக் கொண்டுள்ளது. மோடியின் குஜராத்
மாநிலத்திலும் காங்கிரஸ் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இங்கு
இடைத்தேர்தல் நடந்த 9 தொகுதியில் 3ல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. 6
தொகுதிகளை பாஜக கைப்பற்றி உள்ளது. அசாமில் 3 தொகுதிகளில் ஏஅய்யுடிஎப்,
பாஜக, காங்கிரஸ் தலா 1 தொகுதிகளை கைப்பற்றி உள்ளன.
இதுதவிர, ஆந்திராவின் நந்திகாமா
தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சியின் சவுமியாவும், திரிபுராவின் மானு
தொகுதியில் மார்க்சிஸ்ட்டின் பிரபாத் சவுத்ரியும் வெற்றி பெற்றனர்.
ஜம்மு காஷ்மீரில் மொத்தம் உள்ள 87
தொகுதிகளில் 25 தொகுதிகளை கைப்பற்றி 2வது இடத்திற்கு வந்தது.
நாடாளுமன்றத்தேர்தல் வாக்குகளை கணக்கில் கொண்டால் இது பாஜகவிற்கு சரிவைக்
கொடுத்த தேர்தலாகும். முக்கியமாக நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வாக்குகளில்
பாதியைக்கூட காஷ்மீர் பகுதியில் பிடிக்கமுடியவில்லை. இதனைத் தொடர்ந்து
2015 பாரதீய ஜனதாவிற்கு பெரும் சரிவாக பலத்த அடியாக டில்லி சட்டசபை தேர்தல்
முடிவுகள் அமைந்துள்ளன. இது பிரதமர் ஆன பின்னர் மோடி முதல் முறையாக
சந்திக்கும் படுதோல்வி என்று கருதப்பட்டாலும், காஷ்மீர் மற்றும்
ஜார்கண்டில் வாக்குகள் சரிவே தோல்விக்கு அச்சாரமிட்டுவிட்டது என்று
கருதப்படுகிறது. கடந்த 2013-ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் டில்லியில் நடைபெற்ற
சட்டமன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா 32 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால்
ஆட்சி அமைக்க முடியவில்லை. தற்போதைய தேர்தலிலோ 3 இடங்களைக் கைப்பற்றுவதற்கே
பெரும்பாடாகி விட்டது viduthalai.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக