தனது தோளில் என்னை 8 நாட்கள் தாங்கினார் ராஜேஷ்.. மும்தாஜ்
ராஜேஷ் கன்னா குறித்த மலரும் நினைவுகளை அவருடன்
ஜோடியாக நடித்த ஹீரோயின்கள் வெளியிட்டுள்ளனர். அவர்களில் முக்கியமானவர்
மும்தாஜ். அவரும் ராஜேஷ் கன்னாவும் இணைந்து எட்டுப் படங்களில்
நடித்துள்ளனர். அத்தனையும் சூப்பர் டூப்பர் ஹிட் படங்கள். இதுவும் கூட
ராஜேஷ் கன்னாவின் சாதனைகளில் ஒன்றுதான்.
ராஜேஷ் கன்னாவுடனான அனுபவம் குறித்து மும்தாஜ் கூறியது...நானும், ராஜேஷ் கன்னாவும் அதிர்ஷ்டக்கார ஜோடிகள். ஒரு பிளாப் படத்தைக் கூட நாங்கள் தரவில்லை. நானும், அவரும் இணைந்து நடித்த கடைசிப் படம் ஆய்னா. அதில் அவர் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.
எங்களது முதல் படமான தோ ராஸ்தே மிகப் பெரிய ஹிட் ஆன படம். பாடல்கள்தான் அந்தப் படத்தின் மிகப் பெரிய வெற்றிக்குக் காரணம். அதன் பிறகு எனக்குத் திருமணமாகி விடை பெற்றுச் செல்லும் வரை அவருடன் நடித்த அத்தனையும் ஹிட் படங்கள்.
அவருடன் நடித்தபோது சுதந்திரமாக அவருடன் என்னால் பேச முடிந்தது. எங்களது ஜோடிக்கு ரசிகர்களிடையே கிடைத்த வரவேற்பு கடவுள் கொடுத்த ஆசிர்வாதம் என்றுதான் சொல்ல வேண்டும்.
அவருக்கு நிறைய நண்பர்கள் இருந்தனர் என்று சொல்ல முடியாது. ஆனால் அவருடன் இருந்த நண்பர்கள் அனைவருமே அவரை அதிகம் நேசித்தவர்கள். அப்படித்தான் அவர் தனது நட்பு வட்டத்தை அமைத்திருந்தார். என்னிடம் அவருக்கு எப்போதுமே அதிக பாசம் உண்டு. நல்ல நட்புடன் இருவரும் இருந்தோம். நடிக்கும்போதும் சரி, பாடல் காட்சிகளின்போதும் சரி, எனக்கு நிறைய டிப்ஸ் கொடுப்பார்.
மன்மோகன் தேசாயின் ரொட்டி படத்தில் நடித்தபோது என்னைத் தூக்கிக் கொண்டு பனி படர்ந்த மலையில் அவர் ஓடி வர வேண்டும். அப்போது நான் சற்று பருமனாக இருப்பேன். இதனால் என்னை அவர் கிண்டலடிப்பார். தினசரி காலையில் ஷூட்டிங் ஆரம்பிப்பார்கள், வெயிலுக்கு முன்பாகவே. என்னைப் பார்த்ததும், வாம்மா குண்டம்மா, ஓட ஆரம்பிக்கலாம் என்று சிரித்தபடி என்னை தூக்கிக் கொண்டு ஓடுவார். அது படத்தின் கிளைமேக்ஸ் காட்சி. இந்தக் காட்சியை மட்டும் எட்டு நாட்கள் எடுத்தார்கள். எட்டு நாட்களும் என்னைத் தூக்கிச் சுமந்தார் அவர். இதனால் அவரது தோள்பட்டையே சிவந்து போய் விட்டது.
ராஜேஷ் கன்னாவை இழந்தது பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது, எனக்கு மட்டுமல்ல, ரசிகர்களுக்கும்தான் என்றார் மும்தாஜ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக