கொல்கத்தா: குடியரசுத் தலைவர் தேர்தலில் பல திருப்பங்களை ஏற்படுத்தி
வந்த மமதா பானர்ஜி தமது இறுதி முடிவில் அதிரடியாக ஒரு பல்டி
அடித்திருக்கிறார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் பிரணாப்
முகர்ஜியை திரிணாமுல் காங்கிரஸ் ஆதரிக்கும் என்று அதிரடியாக
அறிவித்திருக்கிறார்.
குடியரசு துணைத் தலைவர் தேர்தல் பற்றி பின்னர்
அறிவிப்பதாகவும் மமதா கூறியுள்ளார்.கொல்கத்தாவில் தமது கட்சியினருடனான ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மமதா கூறியதாவது:
குடியரசுத் தலைவர் தேர்தலில் அப்துல்கலாமைத்தான் நிறுத்த விரும்பினேன்.ஆனால் இதர கட்சிகளின் ஆதரவு அதற்கு கிடைக்கவில்லை. தேர்தலில் வாக்களிக்காமல் இருந்தாலும் திரிணாமுல் காங்கிரஸின் வாக்குகள் வீணாகிவிடும்.
பிரணாப் முகர்ஜியை ஆதரிக்குமாறு பிரதமர் மன்மோகன்சிங்கும் கேட்டுக் கொண்டார்.பிரணாப்புக்கு வாக்களிக்க விருப்பம் இல்லை. இருப்பினும் மக்களின் விருப்பத்துக்காக பிரணாப் முகர்ஜியை ஆதரிக்கிறோம். மேலும் கூட்டணி நெருக்கடியால் இந்த முடிவை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது என்றார் அவர்.
முன்னதாக குடியரசுத் தலைவர் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக திரிணாமுல் காங்கிரஸ் அறிவித்துவிட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் பிரணாப் முகர்ஜியை வேறுவழியில்லாமல் ஆதரிப்பதாக மமதா கூறியுள்ளார். அதே நேரத்தில் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் தொடர்பாக எந்த முடிவையும் அவர் அறிவிக்கவில்லை. அது தொடர்பாக பின்னர் அறிவிப்பதாகவும் மமதா கூறியுள்ளார்.
மமதாவின் இந்த அறிவிப்புக்கு பிரணாப் முகர்ஜி நன்றி தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக