வியாழன், 19 ஜூலை, 2012

First Super Star ராஜேஷ் கன்னா


நடிகர் ராஜேஷ் கன்னா இன்று பிற்பகல் காலமானார். அவருக்கு வயது 69.
Rajesh-Khannaஇந்தித் திரையுலகில் மிகவும் புகழ் பெற்றவராக விளங்கியவர். பாலிவுட்டின் சூப்பர்ஸ்டார் என்று புகழப்பட்டவர். தனது தனித்துவமான நடிப்புத் திறமையால் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருந்தவர்.
உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் காலமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரது இயற்பெயர் ஜடின் கன்னா. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் 1942 டிசம்பர் மாதம் 29ம் தேதி செல்வ வளம் மிக்க குடும்பத்தில் பிறந்தவர்.
இவரது மனைவி டிம்பிள் கபாடியாவும் புகழ் பெற்ற நடிகையே. இவரை 1973ம் வருடத்தில் ராஜேஷ் கன்னா திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ட்விங்கிள் கன்னா, ரிங்கி கன்னா என இரு மகள்கள். இவர்களிருவரும் பாலிவுட்டில் நடிகையராக வலம் வந்தனர்.

ராஜேஷ் கன்னா முதலில் 1966ல் ஆக்ரி காட் என்ற படத்தில் நடித்தார். ஆனால் அது வெளிவரவில்லை. பின்னர் நடித்த சில படங்களும் சரியாக ஓடவில்லை. ஆனால், அவர் நடித்த ஆராதனா என்ற படம் அவருக்கு மிகப் பெரிய அங்கீகாரத்தையும் புகழையும் பெற்றுத் தந்தது. 1970களில் மிகப் பெரும் புகழ்பெற்ற நடிகராக வலம் வரத் துவங்கினார். 1970ல் ஆனந்த் படம் வெளியானது. அமர் ப்ரேம் 1971லும், 1973ல் டாக், நமக் ஹராம், 1974ல் ப்ரேம் நகர், ஆப் கி கஸம் ஆகிய படங்கள் வெளிவந்தன. பாலிவுட் கனவுக் கன்னிகளாகத் திகழ்ந்த மும்தாஜ், ஷர்மிலா டாகுர் ஆகியோருடன் இவர் நடித்த படங்கள் சக்கை போடு போட்டன.
இத்தகைய ஹிட் படங்களுடன் பின்னாளில் அவர் குடும்ப நாடகங்களை மையமாகக் கொண்ட திரைப் படங்களில் நடிக்கத் தொடங்கினார். அனுரோத், மெஹபூபா, கர்ம், அமர் தீபா, பால்கோ கி சாவோன் மேன், தோடி ஸீ பீவாஃபாய், சௌதான், அவதார், அம்ரித், கர் கா சிராக், அகர் தும் ந ஹோதே மற்றும் பல படங்கள் இவ்வாறு கதையம்சம் கொண்ட படங்களாக அமைந்தன. இவை எல்லாம் 1976 முதல் 1991 வரை வெளியாயின. சில படங்களில் குணசித்திர மற்றும் நட்பு முறையிலான சிறு சிறு வேடங்களில் நடித்தார். தரம் அவுர் கனூன், தரம் காந்தா, ராஜ்பூத், குத்ரத் மற்றும் டிஸ்கோ டான்ஸர் உள்ளிட்ட படங்கள் அவ்வாறு அமைந்தன. ரெட் ரோஸ் என்ற படத்தில் அவர் நெகட்டிவ் பாத்திரத்திலும் நடித்துள்ளார்.

ராஜேஷ் கன்னா காங்கிரஸ் கட்சியின் சார்பில் 1991-1996ல் நாடாளுமன்ற உறுப்பினராக புது தில்லி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்தக் காலத்தில் அவர் நடிப்பில் கவனம் செலுத்தவில்லை. அதன் பிறகு, 1999ல் ஆ அப் லௌட் சலே என்ற படத்தில் நடித்தார். அதன் பின்ன 2002ல் க்யா தில் நே கஹா மற்றும் 2007ல் ஒரு படத்திலும் நடித்தார்.

சில தொலைக்காட்சி தொடர்கள், நிகழ்ச்சிகளிலும் ஒப்பந்தமாகி நடித்துக் கொடுத்திருக்கிறார்.

சிறந்த நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருதினை ஆறு முறை பெற்றிருக்கிறார். அதுதவிர 11 முறை பிலிம்பேர் விருதுக்கு இவர் பெயர் பரிந்துரைக்கபட்டுள்ளது. பெங்கால் ஃபில்ம் ஜர்னலிஸ்ட் அசோஷியேஷன் விருதுகள், உள்பட இந்தியாவின் பல்வேறு திரையுலக விருதுகளையும் பெற்றவர் இவர்

கருத்துகள் இல்லை: