புதன், 23 மே, 2012

விவசாயம் செத்துக் கொண்டிருக்கிறது மரபணு மாற்ற (பி.டி) விதை

விவசாயி-தற்கொலை-4பருத்தி மற்றும் செய்தித்தாள் மூலம் தங்க குவிப்பு – பி.சாய்நாத்

ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கு முன்னர் மான்சான்டோ விதைகள் இந்தியாவுக்கு வந்தபோதே உலகமயமாக்கல்-ஏகாதிபத்தியங்களை எதிர்க்கும் புரட்சிகர அமைப்புகள், இந்த விதைகள் நமது நிலங்களை மலடாக்கிவிடும், எல்லா தானிய வகைகளிலும் மறுசுழற்சி விவசாய முறை முற்றிலும் அழிவதுடன், ஒவ்வொரு முறை விதைகள் தேவைப்படும் போதும் நாம் பிறரிடம் கையேந்த வேண்டியிருக்கும் என்கிற அபாயத்தை விரிவாக எடுத்து சொல்லின.  புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் போன்ற இதழ்களில் இவை குறித்து பல கட்டுரைகள் வந்தன.  ஆனாலும் இவற்றையெல்லாம் மீறி ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகளின் ஆதரவுடன், பன்னாட்டு நிறுவனமான மஹிகோ மான்சான்டோ பயோடெக் இந்தியா என்ற பெயரில் உருவான பன்னாட்டு நிறுவனம் பி.டி.பருத்தி விதைகளை இந்திய விவசாயிகளின் தலையில் கட்டியது.  அதற்கு எந்த அளவுக்கு ஊடகங்கள் பொய் விளம்பரங்கள் செய்து ஏமாற்றியது என்பதை விரிவாகத் தோலுரித்துக் காட்டியிருக்கிறார் பத்திரிகையாளர் திரு பி.சாய்நாத்.

“இந்த 2 கிராமங்களிலிருந்து ஒருவர் கூட தற்கொலை செய்து கொள்ளவில்லை”

செய்தியா - விளம்பரமா - டைம்ஸ் ஆப் இந்தியா மோசடி
மான்சாண்டோவுக்கு மாமா வேலை பார்க்கும் TOI
மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளைப் பயன்படுத்துவது தொடர்பாக இந்தியா முழுவதும் சர்ச்சை பொங்கி எழுந்து கொண்டிருக்கிற நேரத்தில், ஒரு செய்தித்தாள் அதையே தொழில்நுட்ப வெற்றி என ஆதாரப்பூர்வமான புகைப்படங்களுடன் கட்டுரை எழுதியிருந்தது.
இங்கு தற்கொலைகள் என்பதே இல்லை.  மக்கள் விவசாயத்தால் நல்ல முன்னேற்றம் கண்டு வருகின்றனர். வழக்கமாகப் பயிரிடப்படும் பருத்தியிலிருந்து மரபணு மாற்றப்பட்ட பி.டி.பருத்தி விதை முறைக்கு மாறியதால் இந்த இரண்டு (பாம்பிரஜா, அன்டார்காவூன்) கிராமங்களில் கடந்த மூன்று – நான்கு ஆண்டுகளாக சமூக, பொருளாதார மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது”
இதை உறுதிப்படுத்தி நம்பிக்கையூட்டும் விதத்தில் அதே செய்தித்தாளில், அதே செய்திக்கட்டுரை வரிக்கு வரி மாறாமல் (டைம்ஸ் ஆப் இந்தியா, ஆக 28, 2011) வெளியிடப்பட்டது.  அந்த கிராமங்களைச் சேர்ந்தவர்கள் வேறுவிதமான கதைகளைச் சொல்லக் காத்திருக்கிறார்கள் என்பது பற்றி எந்தக் கவலையுமின்றி மேற்படி செய்தி வெளியிடப்பட்டது.
இந்த ஆண்டு மார்ச் மாதம் பாம்பிரஜா வந்திருந்த நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்களிடம், “எங்கள் கிராமத்தில் 14 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்” எனப் போராடும் விவசாயிகள் கூட்டம் தெரிவித்த போது வந்தவர்கள் அதிர்ந்து போயினர். “இங்கு மரபணு மாற்ற (பி,டி) விதைகள் வந்தபின் தான்  பெரும்பான்மையான தற்கொலைகள்  நிகழ்ந்துள்ளன” என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.  தி இந்து நாளிதழ் தரப்பில் சரிபார்த்ததில் 2003 முதல் 2009 வரை 9 பேர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர் என்பது தெரிய வந்தது. இப்பிரச்சினை தொடர்பான ஆர்வலர் குழுக்கள் அதன் பின் இன்னும் 5 தற்கொலைகள் நடந்துள்ளன என்கின்றனர்.  எல்லாமே 2002 க்கு பின்னர், அதாவது டைம்ஸ் ஆப் இந்தியா விவசாயிகள் பி.டி. விதை விவசாயத்திற்கு மாறிவிட்டனர் எனத் தெரிவித்த பிறகு இவை நடைபெற்றுள்ளன.

விவசாயத்தில் மறுமலர்ச்சியா?

அதிர்ச்சியில் உறைந்து கவனித்துக் கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடம், கோபத்துடன் விவசாயிகள் ‘அய்யா, இங்கு பல விளைநிலங்கள் தரிசாகி விட்டன, பலர் விவசாயத்தின் மீது நம்பிக்கை இழந்து விட்டனர், நஷ்டம் சற்று குறைவாக இருக்கட்டுமே என பலர் மாற்றுப்பயிராக சோயா பீன்ஸ் விதைத்துள்ளனர்’ என்று தெரிவித்தனர்.
மஹிகோ மான்சான்டோ மரபணு மாற்றப்பட்ட பி.டி. பருத்தியை காரணம் காட்டி இந்த கிராமங்களிலிருந்து நில உரிமையாளராக இருந்த விவசாயிகள் உட்பட பலர் புலம் பெயர்ந்து சென்று விட்டனர். நாங்கள் பாம்பிரஜா கிராமத்திற்கு கடந்த செப்டம்பரில் சென்றிருந்த போது சுரேஷ் ராம்தாஸ் பாண்ட்ரே என்பவர் “விவசாயம் செத்துக் கொண்டிருக்கிறது என்பதால் பலர் வெளியேறி விட்டனர்” எனத் தனது கணிப்பை தெரிவித்தார்.  அரசாங்கம் ஆகஸ்ட் 2011 இல் நாடாளுமன்றத்தில் இந்திய உயிர் தொழில்நுட்ப ஒழுங்குமுறை ஆணையம் (பிஆர்ஏஐ) அறிமுகப்படுத்திய மசோதா தோல்வியடைந்தவுடன், பிணம் உயிர்பெற்று எழுவது போல பி.டி. விவசாய முறையைப் பாராட்டி, புகழந்து பேசும் 2008 ஆம் ஆண்டின் டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி பிரசுரமானது.  மசோதாவை பட்டியலிடுவதில் ஏற்பட்ட தோல்வி என்பது விவசாய-உயிரியியல் தொழிலின் எதிர்கால லாபத்தைப் பாதிக்கும் அம்சமாகும்.  அதன் காரணமாக விரைவில் மீண்டும் அதைக் கொண்டு வர வேண்டும் என்பதற்கான தரகுப் பணி துவங்கியது. “பி.டி.பருத்தி மூலம் தங்கம் அறுவடை” என்கிற தலைப்பிட்டு ஆகஸ்டு 2008 இல் டைம்ஸ் ஆப் இந்தியா செய்தித்தாளில் முழுப்பக்க செய்தி வெளியானதைத் தொடர்ந்து, அடுத்த நாளிலிருந்து டைம்ஸ் ஆப் இந்தியா மற்றும் சில செய்தித்தாள்களில் மஹிகோ-மான்சான்டோ பயோடெக் (இந்தியா) லிட் நிறுவனத்திலிருந்து தொடர்ச்சியாக விளம்பரம் வரத் துவங்கியது. இந்த விளம்பரங்கள் ஆகஸ்டு 29, 30, 31, செப் 1 மற்றும் 3 ஆகிய தேதிகளில் பிரசுரமானது. அதற்கான மசோதா  இறுதியாக மழைக்கால மற்றும் குளிர்கால கூட்டத்தொடர் இரண்டிலும் விவாதத்திற்கு பட்டியலிடப்பட்டிருந்த போதிலும் அறிமுகப்படுத்தவோ, நிறைவேற்றப்படவோ இல்லை. நாடாளுமன்றம் பி.டி. பருத்தியை தவிர்த்த வேறு பிரச்சினைகளில் சிக்குண்டதால், செய்தித்தாளை வைத்து சிலருக்கு தங்க அறுவடை நடந்தது.
இத்தகைய தொடர் விளம்பரங்கள் நாடாளுமன்ற நிலைக்குழுவின்  முடிவை மாற்றவில்லை என்பதுடன், மரபணு மாற்றங்கள் செய்யப்பட்ட உணவுப் பயிர்களை அனுமதிப்பது தொடர்பாக ஆழமாகப் பரிசீலிக்க வேண்டிய நிலைமையைத் தோற்றுவித்தது.  பல்வேறு கட்சிகளிலிருந்து வந்திருந்த நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் விதர்பா மாவட்டத்தில் ஏற்பட்ட கடுமையான துன்பம், விவசாய தற்கொலைகள் போன்ற தகவல்களால் அதிர்ச்சியடைந்து அந்தப் பகுதிகளைப் பார்வையிட முடிவு செய்தனர்.
அறிவார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பாபுதேப் ஆச்சார்யா தலைமையிலான குழுவின் தெளிவான இலக்கு என்பது மஹிகோ-மான்சான்டோவின் அதிசய மாதிரி கிராமம் என்று சொல்லப்பட்ட பாம்பிரஜா என்பதாக இருந்தது. மற்றொன்று மாரேகான்-சோனாபுர்டி ஆகும்.  ஆனால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எந்தக் கிராமத்திலும் தங்கத்தைப் பார்க்கவில்லை. விவசாயப் புரட்சி – அதிசயம் என்று சொல்லப்பட்டது தகர்ந்து, மேலும் அரசின் தோல்வியாக போனதாலேயே துன்பம் நேரிட்டது.
இந்தியாவில் பி.டி.பருத்தி அறிமுகப்படுத்தி 10 ஆண்டுகள் நிறைவான 2012 இல் மீண்டும் இந்தப் பிரச்சினை (டைம்ஸ் ஆப் இந்தியாவில் சொல்லியிருப்பது போல்) பொறி பறக்கும் விவாதப் பொருளாகியது.  கடந்த ஆண்டு ஆக 28 செய்தித்தாளில் தோன்றிய “பி.டி.பருத்தி மூலம் தங்கம் அறுவடை” என்பது “ஒரு நுகர்வோர் தொடர்பிற்கான முன்முயற்சி” எனத் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டது.  வேறு வார்த்தைகளில் சொல்வதானால் விளம்பரத்திற்காகப் பணம் கொடுத்து செய்தியாக்கப்பட்டது எனலாம். எனினும் அந்தச் செய்தியில் உள்ள விபரங்கள் எல்லாம் டைம்ஸ் ஆப் இந்தியாவின் தொழில்முறை செய்தியாளர்கள், புகைப்படக்காரர்களால் தயாரிக்கப்பட்டதே.  இன்னும் குறிப்பாக விளம்பரமாக மாறிய அந்தக் கதை ஏற்கெனவே வார்த்தைக்கு வார்த்தை மாறாமல் டைம்ஸ் ஆப் இந்தியா நாக்பூர் பதிப்பில் 31 ஆக 2008 இல் வெளியான ஒன்றாகும்.  பிரசுரமானதே மீண்டும் பிரசுரமானது கண்டுபிடிக்கப்பட்டு கடுமையான விமர்சனத்திற்குள்ளாகியது.  ஆக 28, 2011 இல் வெளியான செய்தியிலேயே அது சரிபார்க்கப்படாத செய்தியின் மறுபதிப்பு என்பது லேசாக ஒப்புக் கொள்ளப்பட்டிருந்தது.  இருப்பினும் 2008 இல் வெளியான செய்தியில் விளம்பரம் எனச் சொல்லப்படவில்லை.  ஆனால் இருமுறை பிரசுரமானதிலும் ஒப்புக்கொள்ளப்பட்டிருந்த ஒரு விச‌யம் யாதெனில், யாவாட்மால் கிராமத்தைப் பார்வையிடுவதற்கான பயண ஏற்பாடுகள் மஹிகோ-மான்சான்டோ பயோடெக் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டது என்பதாகும்.  அந்த நிறுவனம் ’2008 இல் வெளியானது டைம்ஸ் ஆப் இந்தியாவின் செய்தித் தொகுப்பாகும்’ என்றது.  2008 இல் வெளியான செய்தித் தொகுப்பு என்பது ஆசிரியர் குழும அதிகார வரம்பிற்குட்பட்டு செய்தியாளர்கள் குறிப்பிட்ட கிராமங்களில் சென்று சேகரித்த அறிக்கைகள் ஆகும்.  நாங்கள் செய்தியாளர்கள் அங்கு சென்று வருவதற்கான பயண ஏற்பாடுகளை மட்டும் செய்தோம் என்கிறார், கடந்த வாரம் தி இந்து நாளிதழிடம் பேசிய மஹிகோ-மான்சான்டோ நிறுவன செய்தித் தொடர்பாளர்.  2011 செய்தி என்பது, வணிக நோக்கத்தில் 2008 இல் வெளியான செய்தியையே திருத்தங்கள் மேற்கொள்ளாமல் வெளியிட்டதே ஆகும்.
2008 முழுப்பக்கச் செய்தி நாக்பூர் பதிப்பில் வெளியானது.  2011 இல் “சந்தைப்படுத்தும் சிறப்பிதழாக” வெளியான செய்தி அந்தச் செய்தித்தாளின் பல மாவட்ட வெளியீடுகளில் (அதன் இணைய தளத்தில் சிறப்புச் செய்திப் பகுதியில் சொடுக்கினால் பார்வையிடலாம்)  வெளியானது.  ஆனால் நாக்பூர் பதிப்பில் மட்டும் வெளியாகவில்லை.  நாக்பூர் பதிப்பில் வெளியாகியிருந்தால் கண்டிப்பாக அது பெரும் வியப்பை ஏற்படுத்தியிருக்கும்.
விவசாயி-தற்கொலை-3
மருத்ராவ் தோகே என்ற இந்த விவசாயி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக தனது மனைவியின் தாலியை (மங்களசூத்ரா) அடகு வைப்பதற்காக கவலையுடன் பார்த்துக் கொண்டிருக்கும் காட்சி - படம் நன்றி thehindu.com
ஒரே முழுப்பக்கச் செய்தி மூன்று ஆண்டுகளுக்குள் இரண்டு முறை பிரசுரமாகியுள்ளது.  முதல் முறை செய்தியாக, 2 வது முறை விளம்பரமாக. முதல் முறை வெளியானது அந்தச் செய்தி ஊடகத்தில் பணிபுரியும் செய்தியாளர்கள், புகைப்படக்காரர்களால் வெளியிடப்பட்டது.  2 வது முறை புதையுண்ட பிணத்தைத் தோண்டியெடுத்து, பிரேதப் பரிசோதனை செய்வது போல் அதன் விளம்பரப் பிரிவால் வெளியிடப்பட்டது.  முதல் முறை செய்தி சேகரிப்பிற்கான பயணம் மஹிகோ-மான்சான்டோ நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. 2 வது முறை மஹிகோ-மான்சான்டோ நிறுவனத்தின் விளம்பரத்திற்காக வெளியிடப்பட்டது.  முதல் முறை வெளியானது அவலம்.  2 வது முறை வெளியானது கேலிக்கூத்து.
மஹிகோ நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தாங்கள் மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் இருப்பதாகத் தெரிவிக்கிறார். நாங்கள் 2 வது முறை வெளியிடச் சொல்லும் போது தெளிவாக “இது அக் 31, 2008 நாக்பூர் பதிப்பில் வெளியான செய்தியின் மறுபதிப்பு” என மூலச் செய்தி மற்றும் தேதிக்கான பகுதியில் குறிப்பிட வலியுறுத்தினோம் என்கிறார்.  ஆனால் அவரின் மின்னஞ்சல் வழியாக எழுதிய பதிலில் அந்த விளம்பரப்படுத்தும் செய்தி வெளியான சூழ்நிலைமை பற்றி எழுப்பிய தி இந்து வின் கேள்விக்கு பதில் தெரிவிக்கப்படவில்லை.  விவசாயத்தில் பருத்தி விதைகள் மற்றும்  தாவர உயிர்தொழில்நுட்பத்தின் பங்கு பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 2011 இல் குறுகிய கால தகவல் தொடர்பு முன்முயற்சியாக இது செய்யப்பட்டது என அவர் சொல்கிறார்.  ஆனால் இந்திய உயிர்தொழில்நுட்ப ஒழுங்கு முறை ஆணையத்தின் மசோதா நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட நேரத்தில் இதை வெளியிட்டதன் நோக்கம் என்ன என்ற தி இந்துவின் கேள்விக்கு விடையளிக்கப்படவில்லை.
ஆனால் நடைபெற்றது அதைவிட அதீதமானது. டைம்ஸ் செய்தியுடன் வெளியிடப்பட்டிருந்த விவசாய அதிசயம் குறித்த புகைப்படங்கள் அந்த பி.டி.பருத்தி விதைக்கப்பட்ட பாம்பிரஜா மற்றும் அன்டார்காவுன் கிராமங்களில் எடுக்கப்படவில்லை.  அதில் தோன்றுபவர்கள் பாம்பிரஜா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்ற போதிலும், அந்தப் படங்கள் பாம்பிரஜாவில் எடுக்கப்பட்டதல்ல என்கிறார் அந்தக் கிராமத்தை சேர்ந்த பாபன்ராவ் காபந்தே.

போலித் தோற்ற அதிசயம்

டைம்ஸ் ஆப் இந்தியா கதையில் சிறப்பான கல்வியறிவு பெற்றிருந்த விவசாயியாகக் குறிப்பிடப்படும் நந்து ரவுத் ஒரு ஆயுள் காப்பீட்டுக் கழக முகவரும் ஆவார்.  அவருடைய வருவாய் பி.டி.பருத்தி விதை காரணமாக எதிர்பாரா விதத்திற்கு உயர்ந்ததாகச் சொல்லப்பட்டது.  “நான் கடந்த ஆண்டு ரூ. 2 லட்சம் சம்பாதித்தேன்”  கடந்த செப்டம்பரில் அவர் என்னிடம் இவ்வாறு தெரிவித்தார்.  “ஏறக்குறைய ரூ. 1.6 லட்சம் நான் விற்ற எல்ஐசி பாலிசிகளால் கிடைத்தது” என்றார்.  அதாவது சுருக்கமாகச் சொன்னால் அவர் விவசாயத்தில் சம்பாதித்ததைப் போல் நான்கு பங்கு ஆயுள் காப்பீடு முகவர் பணியில் சம்பாதித்துள்ளார்.  அவரின் 4 பேர்கள் அடங்கிய குடும்பத்திடம் 7 1/2 ஏக்கர் நிலம் இருந்தது.
ஆனால் டைம்ஸ் ஆப் இந்தியா விவரித்த கதையில் “பூச்சிக் கொல்லி மருந்து உபயோகிக்காமல் இருந்ததன் வழியாக அந்த விவசாயி ஒரு ஏக்கருக்கு ரூ. 20,000 வரை அதிகமாக சேமித்ததாக (அழுத்தம் கட்டுரையாளரால் சேர்க்கப்பட்டது) விவரிக்கிறது”.  அவர் 4 ஏக்கரில் பருத்தி பயிர் செய்திருந்ததால் அவரது சேமிப்பு “பூச்சி மருந்தில்”  ரூ. 80,000 என்கிறது கணக்கு.  ஆனால் பாம்பிரஜாவிலுள்ள விவசாயிகள் மிகுந்த கோபத்துடன், ஏக்கருக்கு ரூ. 20,000 அல்லது அதற்கு மேல் சம்பாதித்த யாரேனும் ஒருவரை இங்கே சுட்டிக் காண்பியுங்கள் பார்ப்போம் என்கின்றனர்.  கிராம வாரியாக ஆய்வு மேற்கொண்ட போது திரு. ரவுத் ஒப்பமிட்டுக் கொடுத்த புள்ளி விபரம் (தி இந்துவின் வசமுள்ளது) அவரின் வருவாய் குறித்து வேறு வித்தியாசமான கதையை தெரிவிக்கிறது.
படம் நன்றி thehindu.com
மத்திய அரசின் விவசாய அமைச்சர் தெரிவிக்கும் புள்ளி விபரங்கள் ‘பி.டி. அதிசயம்’ என்பதற்குப் பதிலாக அதன் மீது ஏளனத்தை உமிழ்கின்றனர் பாம்பிரஜா மற்றும் மாரேகவுன் விவசாயிகள்.  இந்திய நாடாளுமன்றத்தில் 2011 டிசம்பர் 19 அன்று அமைச்சர் சரத்பவார், விதர்பாவில் ஒரு ஹெக்டேருக்கு சராசரியாக 1.2 குவிண்டால் பஞ்சு கிடைக்கிறது என்றார்.  அதிர்ச்சியுறும் வகையில் அது மிகக்குறைந்த அளவே. அதை இரண்டு பங்காகக் கணக்கிட்டால் கூட குறைவுதான்.  விவசாயிகள் சுத்தம் செய்யப்படாத நிலையில்தான் பருத்தியை விற்கின்றனர்.  நூறு கிலோ அறுவடை என்றால் அதில் 35 கிலோ பஞ்சும் 65 கிலோ பருத்தி விதையும் கிடைக்கும். (அதிலும் கூட இழையாடும் போது மேலும் 2 கிலோ இழப்பு ஏற்படும்).  மேலும் திரு. பவார் தெரிவிக்கும் விபரத்தின்படி பார்த்தால் ஒரு ஏக்கருக்கு 3.5 குவிண்டால் விதையுடன் கூடிய பஞ்சா?  அல்லது வெறும் 1.4 குவிண்டால்தானா?.  திரு. பவார் மேலும் தெரிவிக்கையில் விவசாயிகள் ஒரு குவிண்டாலுக்கு ரூ. 4200 வீதத்தில் அதிகமான விலையையே பெறுகின்றனர் என்கிறார்.  அவருக்கு ஏற்புடையதல்ல என்ற போதிலும், விவசாயம் செய்ய ஆகும் செலவினத்திற்கு அருகாமையில் அவர் சொல்லும் தொகை இருப்பதால்தான் அங்கு மோசமான சூழல் வளர்ந்துள்ளதாகக் கருதுகிறேன்.  திரு. பவார் தெரிவிக்கும் புள்ளி விபரங்கள் சரியென்றால் நந்து ரவுத்தின் மொத்த வருவாய் ஒரு ஏக்கருக்கு ரூ. 5900 ஐத் தாண்டியிருக்க வேண்டும்.  ஆனால் 1 1/2 பாக்கெட் விதை மட்டும் ரூ. 1400 என்பதைக் கழித்துப் பார்த்தால், ஏறக்குறைய அவருக்கு மீதம் ஏதுவுமேயில்லை.  ஆனால் டைம்ஸ் ஆப் இந்தியா அந்த விவசாயியின் வருவாய் ஏக்கருக்கு ரூ. 20000 க்கு மேல் என்கிறது.
மேற்சொன்ன செய்தியில் உள்ள மிகைப்படுத்தலைப் பற்றி கேட்டபோது மஹிகோ-மான்சான்டோ நிறுவன செய்தி தொடர்பாளர்- “எங்கள் நிறுவனத்தின் ஊழியர் சொன்னதாக பத்திரிகையில் செய்தியாக வந்ததை நாங்கள் வழிமொழிகிறோம்” என்றார்.   முழுப்பக்க விளம்பரமாக மாறிய அந்தச் செய்தியில் அவர் குறிப்பிட்ட ஒரு சிறு பத்தியில் எங்குமே ஏக்கருக்கு ரூ. 20000 க்கு மேல் என்றோ, வேறு தொகை குறிப்பிட்டோ புள்ளி விபரம் ஏதுமில்லை.  வெறும் “பி.டி.பருத்தியால் விவசாயிக்கு வருவாய் உயர்வு” என்றும், பல ஏக்கர் பரப்பளவுள்ள நிலங்களில் அந்த பருத்தி பயிரிடப்பட்டுள்ளதைப் பற்றி மட்டுமே பேசும் விதத்தில் அது இருந்தது.  ஆனால் ஏக்கருக்கு எவ்வளவு மகசூல் என்பது பற்றி அதில் குறிப்பிடப்படவில்லை.  மேலும் அந்த இரு கிராமங்களிலும் ஒருவர் கூட தற்கொலை செய்து கொள்ளவில்லை என்ற வகையில் எதுவும் அவர் குறிப்பிடும் செய்திக் குறிப்பில் இல்லை.  எனவே மான்சான்டோ நிறுவனம் மிகக் கவனமாக டைம்ஸ் ஆப் இந்தியா தெரிவிக்கும் செய்திகளை உறுதிப்படுத்தாமல் நழுவியதோடு, அவர்களின் சந்தைப்படுத்தும் முக்கியக் குறிப்புகளில் மட்டுமே கவனமாக இருந்துள்ளனர்.
இந்தச் செய்தியைப் பற்றி மஹிகோ-மான்சான்டோ உயிர்தொழில்நுட்ப இந்தியா நிறுவனச் செய்தித் தொடர்பாளர் தெரிவிக்கையில், “செய்தியாளர்கள் மேற்கண்ட கிராம விவசாயிகளிடம் நேரடியாக பேட்டிகள் எடுத்து, அவர்களின் அனுபவங்களைக் கேட்டறிந்து, விவசாயிகள் குறிப்பிட்டு சொன்னவற்றையே செய்தியாக்கியுள்ளனர்” என்றார்.
‘விளம்பரமாக மாறிய கதை’ மீண்டும் தோன்றிய போதும் நந்து ரவுத், போல்கார்டு II விதையின் மூலம் ஏக்கருக்கு 20 குவிண்டால் மகசூல் பெற்றுள்ளார் என்கிறது.  அதாவது விவசாய அமைச்சர் தெரிவிக்கும் 1.4 குவிண்டால் என்பதைப் போல் 14 பங்கு அதிகம்.  அதாவது பருத்திக்கு 2 முதல் 3 முறை நீா்ப்பாய்ச்சுவது தேவைப்படும் நிலையில், மழை குறைந்த மாவட்டமான விதர்பாவில் மகசூல் குறைந்து விட்டது என வருத்தப்படுகிறார் திரு. பவார்.  ஆனால் அதே சமயம், தேசியவாத காங்கிரசு – காங்கிரசு கூட்டணி ஆளும் மகாராஷ்டிராவின் ஏறக்குறைய பெரும்பாலான மழைக் குறைவுப் பகுதிகளில் தண்ணீர் மிகவும் தேவைப்படும் இந்த பி.டி.பருத்தி விதையை ஊக்குவித்தது எவ்வாறு என்ற கேள்வி எழும் போது திரு பவார் அமைதி காக்கின்றார்.  ஏழு ஆண்டுகளுக்கு முன்பாக மழை குறைந்த பகுதிக்கு பொருந்தி வராத இந்த பி.டி. விதைகளை மகாராஷ்டிரா அரசு விதைக் கழகம் அதன் மாநில விவசாய ஆணையர் மூலமாக விநியோகித்தது.  டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியின்படி பார்த்தால், நந்து ரவுத் பணத்தில் உருளுகின்றார்.  அமைச்சரின் கூற்றுப்படி பார்த்தால் அந்த விவசாயி தண்ணீருக்குள் விழுந்த போதிலும், மூழ்காமல் மிதக்கிறார்.
2011 இல் ஒரே வாரத்தில் சரமாரியாக வெளியான மஹிகோ-மான்சான்டோ பயோடெக் விளம்பரங்கள் வேறு தீயை பற்ற வைத்தது.  இந்திய விவசாயிகள் மிகுந்த பணப்பலன்கள் பெறுகிறார்கள் என்ற வகையில் தோன்றிய ஒரு விளம்பரத்தின் (டெல்லியிலிருந்து வெளியாகும் வேறு ஒரு செய்தித்தாளிலும் வந்திருந்தது) மீது இந்திய விளம்பரத் தரக்கட்டுப்பாட்டுக் குழுமத்தின் முன்வைக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து, இந்திய விளம்பர தரக்கட்டுப்பாட்டுக் குழுமம்  ”புகாருக்குள்ளான விளம்பரத்தில் வைக்கப்பட்ட வாதம் மெய்ப்பிக்கப்படவில்லை” என்ற முடிவிற்கே வந்தது.  மான்சான்டோ நிறுவனச் செய்தி தொடர்பாளர், விளம்பர தரக்கட்டுப்பாட்டு குழுமம் முன் வைக்கப்பட்ட குறிப்புகளை தொடர்ந்து விளம்பரம் திருத்தியமைக்கப்பட்டு விட்டது என்றார்.  மஹிகோ-மான்சான்டோ நிறுவனம் விளம்பரத்தை திருத்தியமைத்ததை விளம்பர தரக்கட்டுப்பாட்டு குழுமம் ஒப்புக்கொண்டது.
மார்ச் மாதத்தில் நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் அந்த கிராமத்தை விட்டு வெளியேறிய பின் நாங்கள் மீண்டும் திரு. நந்துவை சந்தித்த போது, “இன்று என்னைக் கேட்டால், நீர்வளம் குறைந்த இந்த கிராமங்களில் மரபணு மாற்ற (பி.டி) விதைகளைப் பயன்படுத்தாதீர்கள் என்பேன், நிலைமை தற்போது மிக மோசம்” என்றார்.  நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன் அவர் (நந்து) ஏன் ஒரு வார்த்தை கூட தெரிவிக்கவில்லையென்றால், தாம் மிகவும் தாமதமாக வந்ததாகத் தெரிவித்தார்.
“நாங்கள் வட்டிக்கு கடன் கொடுப்பவர்களை ஒதுக்கி விட்டோம், இனி எங்கள் எவருக்கும் அவர்கள் தேவையில்லை” டைம்ஸ் ஆப் இந்தியா விளம்பரமாக மாறிய செய்தியில் மாங்கூ சவான் என்ற விவசாயி இவ்வாறு தெரிவித்ததாகக் கூறப்பட்டுள்ளது.  அதாவது பி.டி. விதையினால் அன்டார்காவுன் கிராமத்தில் ஏற்பட்ட செழிப்பினால் இந்த நிலை ஏற்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.  பாம்பிரஜாவில் உள்ள 365 விவசாய வீடுகள் மற்றும் அன்டார்காவுனில் உள்ள ஏறக்குறைய 150 வீடுகளில் ‘விதர்பா ஜன் அந்தோலன் சமிதி’ (விஜாஸ்) மேற்கொண்ட ஆய்வுக் கணக்கெடுப்பில் ஏறக்குறைய வங்கிக் கணக்குள்ள அனைத்து விவசாயிகளும் கடன் கட்ட முடியாமல் போவதாகவும், ஏறக்குறைய 60 சதவீத விவசாயிகள் கந்து வட்டிக்கு கடன் கொடுக்கும் தனியாரிடம் மாட்டிக் கொண்டுள்ளதாகவும் தெரிகின்றது என்கிறார் விஜாஸ்-ன் தலைவர் கிஷோர் திவாரி.
மகாராஷ்டிரா அரசு நிலைக்குழு (பாராளுமன்ற) உறுப்பினர்களை மாதிரி கிராமம் என்று சொல்லப்பட்ட பாம்பிரஜா கிராமத்திற்குள் வர விடாமல் திசைதிருப்ப மிகக் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டது.  இருப்பினும் குழுவின் தலைமை உறுப்பினர் பாசுதேப் ஆச்சார்யா மற்றும் அவரின் சக உறுப்பினர்கள் குறிப்பிட்ட கிராமத்தை பார்வையிட வேண்டும் என்ற தமது நிலையில் உறுதியாக இருந்தனர். நாடாளுமன்ற உறுப்பனர்கள் வருகையால் ஊக்கம் பெற்ற மக்கள் அந்த இரு கிராமங்களிலும் தங்கள் எண்ணங்களை வார்த்தைகளாக இதயத்திலிருந்து வெளிப்படையாக தெரிவித்தனர்.  தேசிய குற்றப்பதிவு ஆணையப் பதிவுகள் தெரிவிக்கின்றபடி, மகாராஷ்டிராவின் பதிவுகளில் மிக மோசமாக 1995  இல் இருந்து 2010 வரை 50000 விவசாய தற்கொலைகள் நடைபெற்றுள்ளது.  அதிலும் அந்த மாநிலத்தில் விதர்பா மாவட்டம் அத்தகைய இறப்புகளில் முன்னிலை வகிக்கிறது. இன்னமும் மிகப்பெரிய, அரசின் கொள்கை சார்ந்த பிரச்சினைகள் விவசாய நெருக்கடிக்கு இட்டுச் செல்கின்றன என்கின்றனர் இங்குள்ள விவசாயிகள்.
பி.டி.பருத்தியின் வரவால் விவசாய தற்கொலை பிரச்சினை குறைந்தது என எந்த விவசாயியும் தெரிவிக்கவில்லை.  அதே சமயம் அவர்கள் அதிசயம், செலவு குறைப்பு, சேமிப்பு என்பனவற்றில் உள்ள போலித் தோற்றங்களை கருத்துக்களாக வெளிப்படுத்தினர்.  அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அரசியல் மேற்கொள்ள செய்தியானது.  ஆனால் பணம் கொடுத்து போடப்பட்ட செய்தி பற்றியோ, சந்தைப்படுத்தும் வியாபார தந்திரம் என்பது பற்றியோ எந்தப் பேச்சும் இதுவரை இல்லை.
________________________________________________
நன்றி- தி இந்து (10 மே 2012)
தமிழில்- சித்ரகுப்தன்.

கருத்துகள் இல்லை: