வியாழன், 24 மே, 2012

அழகிரி: “மதுரைக்கு ‘நாடோடி மன்னன்’ யாரும் கிடையாது”

Viruvirupu
ஸ்டாலின் நாட்டில் இல்லாத நேரமாகப் பார்த்து, அழகிரியின் கை ஓங்கத் துவங்கியிருக்கிறது. அழகிரியின் ஆதரவாளர்கள் 16 பேர் மீது எடுக்கப் போவதாக கட்சி மேலிடம் அறிவித்த ‘ஒழுங்கு நடவடிக்கை’ ஓசைப் படாமல் ரத்து செய்யப்பட்டுள்ளது என்று கட்சி வட்டாரங்களில் கூறப்படுகிறது.
“அண்ணன் (அழகிரி) தமது ஆதரவாளர்களை எப்போதுமே கைவிட்டதில்லை. தலைவருடன் நேரடியாகவே பேசி, உடனடியாகவே உத்தரவைப் பெற்று வந்துவி்ட்டார். மீடியாக்காரர்கள் இதை பெரிதுபடுத்தி விடுவார்கள் என்பதால், ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட்ட விஷயத்தை அடக்கி வாசிக்க தீர்மானித்துள்ளது கட்சி” என்றார் மதுரை தி.மு.க. முக்கியஸ்தர் ஒருவர்.
“நடவடிக்கை ரத்து” என்ற அறிவித்தல் 16 பேருக்கும் கிடைத்து விட்டது எனவும் அவர் உறுதிப்படுத்தினார்.

அழகிரி தம்மைச் சந்தித்த மதுரை கட்சி முக்கியஸ்தர் ஒருவரிடம், “இதற்காக கொண்டாட்டம் ஏதும் வேண்டாம். இதெல்லாம் ஒரு பெரிய விஷயம் என்று காட்டினால், எமக்குத்தான் கேவலம். நம்மாட்கள் மீது கைவைக்க முடியாது. மதுரைக்கு ஒரே மன்னன்தான். நாடோடி மன்னன் என்று யாரும் கிடையாது  என்று ‘புரிய வேண்டியவர்களுக்கு’ (ஸ்டாலின்?) புரிந்தால், அதுவே எனக்கு போதும்” என்று சொன்னதாக மதுரையில் சொல்கிறார்கள்.
ஸ்டாலின் மதுரைக்கு விஜயம் செய்தபோது அவரை வரவேற்க செல்லவில்லை என்றே அழகிரி ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
மொத்தம் 17 பேருக்கு நோட்டீஸ் வந்து சேர்ந்தது. 17 பேரும் அனுப்பிய பதில்களில் சபைத் தலைவர் இசக்கிமுத்து அனுப்பிய பதில், சரியில்லை என்று சொல்லப்பட்டு அவர், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். “மீதி 16 பேர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் கூறப்பட்டிருந்தது.
இதில் வேடிக்கை என்னவென்றால், இசக்கி அனுப்பிய பதிலுக்கும், மற்றையவர்கள் அனுப்பிய பதில்களுக்கும் வார்த்தைகளில் வேறுபாடு இருந்தாலும், அர்த்தம் ஒன்றுதான் என்கிறார்கள் மதுரை தி.மு.க.-வினர்.
“யாராவது ஒருவரையாவது கட்சியில் இருந்து தூக்க வேண்டும்” என்று ஸ்டாலினின் பிடிவாதமாக இருந்ததால், இசக்கியின் தலை உருண்டது என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.
இசக்கி கட்சியில் இருந்து நீக்கப்பட்டாலும் மதுரையில் அவருக்கு முன்பு கொடுக்கப்பட்ட அதே முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று அழகிரி வாய்மொழி உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார் என்பதும் மதுரைத் தகவல்தான்.
அடுத்த தடவை ஸ்டாலின் மதுரை வந்தால், கட்சி முக்கியஸ்தர்கள் யாருமே தலையைக் காட்டப் போவதில்லை என்பதே இங்குள்ள லேட்டஸ்ட் நிலவரம்.

-மதுரையிலிருந்து அதிபன் தங்கராசுவின் குறிப்புகளுடன், ரிஷி

கருத்துகள் இல்லை: