வாஷிங்டன்: இந்தியாவைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினியர் அடித்துக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக 3 வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திவ்யேந்து சின்கா (49) அமெரிக்காவில் சீமென்ஸ் நிறுவனத்தில் ஆராய்ச்சியாளராக பணியாற்றி வந்தார்.
இவர் நியூஜெர்சி நகரில் உள்ள ஓல்டு பிரிட்ஜ் பெலா டிரைவ் பகுதியில் வசித்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு தனது 2 மகன்களுடன் வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக காரில் வந்த 3 வாலிபர்கள் திவ்யேந்து சின்காவையும், அவரது மகன்களையும் அடித்து உதைத்தனர்.
படுகாயடைந்த மூவரும் நியூ பர்ன்ஸ்விக்கில் உள்ள ராபர்ட் உட் ஜான்சன் பல்கலைக்கழக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஆனால், திவ்யந்து சின்கா சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
இது தொடர்பாக போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர். மூவரும் 18 வயதுக்கு உட்பட்டவர்கள். அவர்களது விவரத்தையும் தாக்குதலுக்கான காரணத்தையும் போலீசார் இன்னும் வெளியிடவில்லை.
அவர்கள் மிடிலசெக்ஸ் கவுன்டி சிறார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இது இனவெறித் தாக்குதலா என்று தெரியவில்லை. முழு விசாரணை முடிந்த பிறகே எந்த தகவலும் சொல்ல முடியும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஐஐடி காரக்பூரில் படித்த திவ்யேந்து அமெரிக்காவின் ஸ்டேடென் ஐலென்ட் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றியவர் ஆவார். ஹோபோகேனில் உள்ள ஸ்டீவன் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜியில் பி.எச்டி பட்டம் பெற்ற இவர் கம்ப்யூட்டர் இமேஜிங் தொடர்பாக பல புத்தகங்களும் எழுதியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக