செவ்வாய், 29 ஜூன், 2010

வடக்குக்கு புதிதாக 250 வைத்தியர்கள்! தாதியர்கள் பற்றாக்குறையை நீக்கவும் புதிய நியமனம்!

வட மாகாணத்தில் நிலவி வரும் வைத்தியர்கள் மற்றும் தாதிமார்கள் பற்றாக்குறையை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய வட மாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களுக்கும் 250 வைத்தியர்களும், 250 தாதிமார்களும் புதிதாக நியமிக்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

சுகாதார அமைச்சு இந்த புதிய நியமனங்களுக்கான சகல ஏற்பாடுகளையும் பூர்த்தி செய்து அதற்கான ஆவணங்களை தனக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்த ஆளுநர்இ ஜுலை மாதத்தில் வைத்தியர்களும்இ ஆகஸ்ட் மாதத்தில் தாதிமார்களும் நியமிக்கப்படவுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.
வட மாகாண சபையின் கீழ் இயங்கும் வைத்தியசாலைகளில் நிலவும் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையிலேயே புதிதாக வைத்தியர்கள் மற்றும் தாதிமார்களை உடனடியாக நியமிக்க தீர்மானித்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதற்கமைய யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 54 வைத்தியர்களும், வவுனியா மாவட்டத்திற்கு 34 வைத்தியர்களும், மன்னார் மாவட்டத்திற்கு 56 வைத்தியர்களும், கிளிநொச்சி மாவட்டத்திற்கு 52 வைத்தியர்களும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 54 வைத்தியர்களும் என்ற அடிப்படையில் மொத்தமாக 250 டாக்டர்கள் புதிதாக நியமிக்கப்படவுள்ளனர்.
இதேவேளை, யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 77 தாதிமார்களும், வவுனியா மாவட்டத்திற்கு 62 தாதிமார்களும், மன்னார் மாவட்டத்திற்கு 48 தாதிமார்களும், கிளிநொச்சி மாவட்டத்திற்கு 52 தாதிமார்களும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கு 40 தாதிமார்களும் என்ற அடிப்படையில் 250 தாதிமார்களும் புதிதாக நியமிக்கப்படவுள்ளனர் என்றும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை இடம்பெயர்ந்த மக்களுக்காக வவுனியா, செட்டிக்குளம் பிரதேசத்தில் அமைக்கப்பட்டிருந்த நவீன வசதிகளைக் கொண்ட தற்காலிக வைத்தியசாலைகளை மன்னார், கிளிநொச்சி மாவட்டத்தில் தேவைப்படும் பகுதிகளுக்கு எடுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.
இதற்கமைய தற்காலிக வைத்திய சாலைகள், வைத்தியர்கள் தங்கும் அறைகள் மற்றும் உபகரணங்கள் என்பன எடுத்துச் செல்லப்படவுள்ளன. இடம்பெயர்ந்த மக்களில் அனேகமானவர்கள் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஆளுநர் தெரிவித்தார்.
விசேடமாக பூநகரி, துணுக்காய், முசலி, நானாட்டான், மாந்தை போன்ற பகுதிகளுக்கு இந்த தற்காலிக வைத்திய சாலைகள் முதற்கட்டமாக மாற்றப்படவுள்ளன என்றும் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை: