ஞாயிறு, 26 அக்டோபர், 2025

Karur Killings - சிபிஐ விசாரிக்கும் போது நடிகர் விஜய்யின் மாமல்லபுரம் சந்திப்புக்கு தடை கோரி நீதிமன்றத்தில் வழக்கு?

 மின்னம்பலம் -Mathi  : கரூரில் பலியானவர்களின் குடும்பத்தினரை தவெக தலைவர் நடிகர் விஜய் மாமல்லபுரத்துக்கு ‘வரவழைத்து’ ஆறுதல் கூறுவதற்கு எதிராக சென்ன உயர்நீதிமன்றத்தில் புதிய வழக்கு தொடர வாய்ப்புள்ளதாக சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வருகிறது.
கரூரில் தவெக தலைவர் நடிகர் விஜய் செப்டம்பர் 27-ல் நடத்திய பிரசாரத்தின் போது நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகினர்.
இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுப்படி சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தியது. 
இந்த விசாரணைக்கு எதிராக தவெக தரப்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். 


இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டது; 
மேலும் சிபிஐ-ன் விசாரணையை உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழு கண்காணிக்கும் எனவும் உத்தரவிட்டது.

இதனடிப்படையில் தற்போது, கரூர் துயர வழக்கு சிபிஐ -க்கு மாற்றப்பட்டுள்ளது. சிபிஐ-ம் கரூர் துயர வழக்கு விசாரணையை தொடங்கி உள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக சிபிஐ பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிவிக்கையில், கரூர் தவெக மா.செ. மதியழகன், தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், சமூக ஊடக பொறுப்பாளர் நிர்மல்குமார் ஆகியோர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

மேலும் கரூர் துயரம் தொடர்பான பல வழக்குகளின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ஶ்ரீவஸ்தவா பெஞ்ச் நாளை (அக்டோபர் 27) மேற்கொள்கிறது.

இந்த நிலையில் நடிகர் விஜய், கரூரில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தினரில் 30 பேரின் குடும்பத்தினரை வரவழைத்து மாமல்லபுரம் நட்சத்திர ஹோட்டலில் தங்க வைத்து நாளை (அக்டோபர் 27) ஆறுதல் கூற இருக்கிறார்.

விஜய் தரப்பில் அழைத்தும் எஞ்சிய 11 பேரின் குடும்பத்தினர் மாமல்லபுரம் வர மறுத்துவிட்டனர்.

தற்போது, நடிகர் விஜய் மாமல்லபுரத்தில் நடத்தும் இந்த சந்திப்புக்கும் சட்ட சிக்கல் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் சந்திப்புக்கு எதிரான ஏன் வழக்கு?

கரூர் துயர சம்பவத்தைப் பொறுத்தவரை

    சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது
    கரூர் சம்பவத்தில் தவெகதான் முதன்மை குற்றவாளி
    தவெக நிர்வாகிகள்தான் குற்றவாளிகளாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்
    குற்றவாளிகளாக சேர்க்கப்பட்ட தவெக, பாதிக்கப்பட்டவர்களை கரூரில் இருந்து மாமல்லபுரத்துக்கு வரவழைத்து ஆறுதல் கூறுவது என்பதும் ஒரு வகையில், ‘சாட்சியங்களை வளைக்கும்’ முயற்சிதான்.
    சிபிஐ விசாரணை நடக்கும் போது குற்றம்சாட்டப்பட்ட தரப்பு, பாதிக்கப்பட்டவர்களை தங்களது பக்கம் வளைக்கும் நோக்கத்துடன் ஒரு நிகழ்ச்சியை நடத்துவது சிபிஐ விசாரணைக்கு பாதிப்பை ஏற்படுத்தவே செய்யும்;
    ஆகையால் சிபிஐயின் விசாரணைக்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய நடிகர் விஜய்யின் மாமல்லபுரம் சந்திப்பு தடை விதிக்க கோரி பொதுநலன் வழக்கு தொடரவே வாய்ப்புகள் அதிகம் என சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வருகிறது.


கருத்துகள் இல்லை: