வியாழன், 30 அக்டோபர், 2025

சீமானை ‘செந்தமிழர் சீமான்’ என பசும்பொன் சந்திப்பில் முழக்கமிட்ட வைகோ!

 hindutamil.in  : மதுரை: அரசியலில் எதிரும், புதிருமாக இருந்து வந்த வைகோ, சீமான் பசும்பொன்னில் ஒன்றாக சந்தித்துக் கொண்டதோடு, சீமானை ‘செந்தமிழர் சீமான்’ என முழக்கமிட்டதோடு அவரை ஆரத்தழுவி கட்டி அனைத்துக் கொண்டது, நாதகவினர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தமிழக அரசியலில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் தங்கள் அரசியல் நிலைப்பாடுகளில் எதிரெதிர் துருவமாக செயல்பட்டு வந்தனர். விடுதலைப் புலிகள் அமைப்பு சம்பந்தமான விவகாரத்தில் ஒருவர் மீது ஒருவர் மிகக் கடும் விமர்சனங்களை செய்துவந்த நிலையில் இன்று இருவரும் ஒரே நேரத்தில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்திற்கு வந்தனர். இருவரும் ஒரே நேரத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.



அப்போது வைகோ கூறுகையில், “செந்தமிழர் சீமானும், நானும் ஒரே வேளையில் பசும்பொன் வந்தது எல்லையில்லா மகிழ்ச்சி அளிக்கிறது. அவரது முயற்சிகளும் வெற்றி மேல் வெற்றி பெறட்டும். நான் மருத்துவமனையில் இருந்தபோது என்னை வந்து பார்த்தார். அவருக்கு உடல்நிலை சரியில்லாவிட்டால் நான் கவலையுடன் பேசுவேன்.” என்றார்.

அதற்கு உடனே சீமான், ”நானும், எண் அண்ணனும், அவரது அம்மா இறந்தபோது ஒன்றாக நின்று பேட்டிக் கொடுத்தோம்” என்று சிலாகித்தார். அதற்கு வைகோ, ”என் தாய் இறப்பிற்கு கலிங்கப்பட்டிக்கு ராத்திரியோடு ராத்திரியாக சீமான் வந்துட்டாரு, சீமானின் அரசியல் பயணம் தொடரட்டும்” என்றார்.

பசும்பொன்னில் வைகோ, சீமானை ‘செந்தமிழர் சீமான்’ என்று முழக்கமிட்டதோடு, இருவரும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி கட்டி அனைத்துக் கொண்ட சம்பவம் நாம் தமிழர் கட்சியினர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: