திங்கள், 15 செப்டம்பர், 2025

அதிமுகவின் அடுத்த புள்ளிக்கு..தூண்டில் போட்ட திமுக..கொத்தாக சிக்கும் பெரிய மீன்..எடப்பாடிக்கு செக்?

 tamil.oneindia.com -  Shyamsundar :  சென்னை: அதிமுகவில் இருந்து முக்கிய பிரமுகர்கள் திமுகவில் இணைவது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. விரைவில் இன்னொரு முக்கிய புள்ளி திமுகவில் இணையலாம் என்று கூறப்படுகிறது.
அதிமுகவின் முக்கிய முகங்களான அன்வர் ராஜா மற்றும் மைத்ரேயன் ஆகியோர் கட்சியில் இருந்து விலகி திமுகவில் சமீபத்தில் இணைந்தனர். 
அன்வர் ராஜா அடிமட்ட தொண்டராக இருந்து உயர்ந்தவர் என்றால், மைத்ரேயன் ஆரம்பம் முதலே திமுகவின் அரசியல் எதிரியாக அறியப்பட்டவர். 
இந்த இருவரின் விலகலும் அதிமுக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் அதிமுக எம்.பி. மைத்ரேயன், அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவரை உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்றனர். "திமுக ஆட்சியில் தமிழ்நாடு நம்பர் ஒன் மாநிலமாக உள்ளது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் வெற்றி உறுதியானது. இரண்டாவது இடத்திற்குத்தான் போட்டி நடக்கும்" என்று மைத்ரேயன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அதிமுகவின் தற்போதைய போக்கு குறித்து விமர்சித்த மைத்ரேயன், "எடப்பாடி பழனிசாமி தன்னை எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்று நினைத்துக்கொண்டிருக்கிறார். எவ்வளவுதான் உயரமாகப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்து ஆகாது" என்று தெரிவித்தார். இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பரவலாக விவாதிக்கப்பட்டது.
அதிமுகவின் முக்கிய முகங்களான அன்வர் ராஜா மற்றும் மைத்ரேயன்

சமீபத்தில் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த அன்வர் ராஜாவின் முடிவு பல விவாதங்களை எழுப்பியுள்ளது. அதிமுகவின் முக்கியமான இஸ்லாமிய முகங்களில் ஒருவரான அன்வர் ராஜா, திமுகவில் இணைந்தது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. இவர் அதிமுகவின் அமைப்புச் செயலாளராகவும், முன்னாள் எம்.பி.யாகவும் இருந்தார்.

அன்வர் ராஜா, 2001-ஆம் ஆண்டு ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியிலிருந்து அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழக அரசில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகப் பணியாற்றிய அனுபவமும் இவருக்கு உண்டு. 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற 16-வது மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். எம்.ஜி.ஆர் காலம் தொட்டே அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இருந்து வந்தவர் அன்வர் ராஜா.
அதிமுகவின் அடுத்த புள்ளிக்கு.. தூண்டில் போட்ட திமுக

இந்நிலையில், அதிமுகவின் மற்றொரு முக்கிய புள்ளி விரைவில் திமுகவில் சேர வாய்ப்புள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தல்களுக்கு முன்பு நிர்வாகிகள் கட்சி மாறுவது வழக்கமான நிகழ்வு. வெற்றிபெறக்கூடிய கட்சியிலும், பெரும்பாலும் ஆளுங்கட்சியிலும் இணைவது பொதுவான போக்கு.

திமுக வட்டாரங்கள் தரும் தகவலின்படி, அந்த முக்கியப் புள்ளி கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவர் என்றும், சிலர் அவர் சென்னையைச் சேர்ந்தவர் என்றும் கூறுகின்றனர். அவர் மீது சில வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்ததை அவர் விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.

சுமார் 5,000 பேருடன் இணைந்து அவர் திமுகவில் இணைய உள்ளதாகவும், இதற்கான இணைப்பு விழா விரைவில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு வரவிருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்புகள் வழங்கப்படலாம் எனத் தெரிகிறது. அவர் மாறும் பட்சத்தில் அதிமுகவின் அடித்தளம் பெரிய அளவில் ஆட்டம் காணும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
5,000 பேருடன் திமுகவில் இணைகிறார்

இந்த நகர்வு அதிமுகவின் ஆதரவாளர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது அதிமுகவுக்கு ஒரு பின்னடைவாகக் கருதப்படலாம். அரசியல் கட்சிகளின் உறுப்பினர்கள் கட்சி மாறுவது தேர்தலுக்கு முன்பு ஒரு பொதுவான நிகழ்வுதான் என்றாலும், இது கட்சிகளின் பலத்தில் மாற்றங்களை ஏற்படுத்தும்.

அதிமுகவைச் சேர்ந்த அந்த முக்கியப் பிரமுகர் திமுகவில் இணைவதற்கான காரணம் குறித்து பல்வேறு யூகங்கள் பரவி வருகின்றன. கட்சியின் கொள்கைகள் மீதான அதிருப்தி, பாஜகவுடன் கூட்டணி வைத்ததில் எதிர்ப்பு, பதவி கிடைக்காத விரக்தி, நிலுவையில் உள்ள வழக்குகள் உள்ளிட்ட பல காரணங்கள் கூறப்படுகின்றன. இந்த நிகழ்வுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

கருத்துகள் இல்லை: