செவ்வாய், 12 ஆகஸ்ட், 2025

பிகார் தேர்தல் தில்லுமுல்லு : உயிரோடு ஆஜராகி உச்ச நீதிமன்றத்தை அதிர வைத்த இருவர்.. தேர்தல் ஆணையத்திற்கு அதிர்ச்சி

 tamil.oneindia.com  -  Velmurugan P :  டெல்லி: பீகாா் மாநில வாக்காளா் பட்டியல் தொடர்பாகதேர்தல் ஆணையத்தின் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு (Special Intensive Revision - SIR) எதிரக்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 
இந்தியாவே எதிர்பார்க்கும் மிகமுக்கியமான வழக்கில், சமூக ஆர்வலர் யோகேந்திர யாதவ் முக்கியமான வாதங்களை வைத்து வருகிறார்.
தேர்தல் ஆணையத்தால் உயிரிழந்தவர்களாக குறிப்பிடப்பட்ட நபர்கள் நேரில் ஆஜர்படுத்தி இன்று உச்ச நீதிமன்றத்தையே அதிர வைத்துள்ளார்.
சமூக ஆர்வலர் யோகேந்திர யாதவ் பீகாரின் வாக்காளர் பட்டியலில் இருந்து பெருமளவில் வாக்காளர்கள் நீக்கப்படுவதாகவும், இந்த நீக்கம் தற்செயலானது அல்ல என்றும், அது திட்டமிடப்பட்ட செயல் என்றும் உச்ச நீதிமன்றத்தில் இன்று குற்றம்சாட்டியிருக்கிறார்.



 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஜோய்மால்யா பக்சி அமர்வு முன் யோகேந்திர யாதவ் இன்று உச்ச நீதிமன்றத்தில் வைத்த முக்கிய வாதங்கள் மற்றும் புள்ளிவிவரங்கள் பற்றி பார்ப்போம்.

பீகாரில் வாக்காளர்கள் பெருமளவில் நீக்கப்படுவதாக யோகேந்திர யாதவ் குற்றம் சாட்டினார். இதுபற்றி அவர் கூறும் போது, பீகாரில் நீக்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 65 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கலாம் என்றும், SIR தொடர்ந்தால் இது 1 கோடியை எட்டக்கூடும் என்றும் வாதிட்டார்.
மக்கள் தொகை மற்றும் வாக்காளர்கள்

மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பீகாரில் 18 வயது நிறைவடைந்த மொத்த மக்கள் தொகை 8.18 கோடி யாகும் ஆனால், தற்போது உள்ள வாக்காளர் பட்டியலில் 7.9 கோடி மக்கள் மட்டுமே உள்ளனர். ஆரம்ப நிலையிலேயே 29 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இல்லை. எனவே தேர்தல் ஆணையத்தின் இந்த சிறப்பு திருத்தமானது அந்த இடைவெளியை சரிசெய்ய வேண்டும் என்றும் யோகேந்திர யாதவ் வாதிட்டார்
சர்வதேச புள்ளிவிவரங்கள்

வாக்காளர்களைச் சேர்க்கும் பொறுப்பு அரசிடம் இருந்து குடிமக்களிடம் மாற்றப்படும்போது, மொத்த வாக்காளர்களில் குறைந்தது கால் பகுதி பேர் பட்டியலில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளது என்று சர்வதேச புள்ளிவிவரங்களின் அடிப்படையில் யோகேந்திர யாதவ் இன்று வாதத்தின் போது தெரிவித்தார். நீக்கப்படுபவர்களில் பெரும்பாலானோர் ஏழைகள், விளிம்புநிலை மக்கள் மற்றும் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்றும் கூறினார். பீகாரில், 97% ஆக இருந்த வாக்காளர் தகுதி, இந்த ஒரே திருத்தத்தின் மூலம் 88% ஆக குறைந்துவிட்டது என்றும் யோகேந்திர யாதவ் குற்றம்சாட்டினார்.

வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களின் பாலின விகிதத்திலும் பாரபட்சம் இருப்பதாகவும் இன்று உச்ச நீதிமன்றத்தில் யோகேந்திர யாதவ் குற்றம் சாட்டினார். புள்ளிவிவரங்களின்படி, 25 லட்சம் ஆண்களின் பெயர்கள் மற்றும் 31 லட்சம் பெண்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், பொதுவாக, இறப்பு விகிதம் பெண்களை விட ஆண்களிடம் அதிகம் என்பதாலும், பெண்கள் தனியாக வேறு மாநிலங்களுக்கு குடியேறுவது குறைவாக இருப்பதாலும், இந்த புள்ளிவிவரம் ஒருதலைப்பட்சமான சார்பைக் காட்டுவதாக யோகேந்திர யாதவ் கூறினார்.
யாரையும் சேர்க்காமல் மொத்தமாக நீக்கவே இந்த SIR திருத்தம்

பீகாரில் நடைபெற்ற SIR எனப்படும் திருத்தம் என்பது வாக்காளர்களைச் சேர்க்காமல், பெருமளவில் நீக்குவதற்காகவே நடத்தப்பட்டது என்றும் யோகேந்திர யாதவ் வாதிட்டார். இந்த திருத்தத்தில் ஒரேயொரு நபரைக் கூட புதிதாக சேர்க்கவில்லை என்பது அசாதாரணமானது என்றும் அதிர்ச்சிகரமான தகவலை அவர் சுட்டிக்காட்டினார்.
இரண்டு பேர் உயிருடன் ஆஜர்

அதேபோல் யோகேந்திர யாதவ் இன்று உச்ச நீதிமன்றத்தில் திடீரென இரு வாக்காளர்களை ஆஜர்படுத்தினார்.அவர்கள் இருவரும் யாரென்றால் தேர்தல் ஆணையத்தால் அண்மையில் வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் உயிரிழந்துவிட்ட நபர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளவர்கள் என்று கூறினார். இதுபற்றி அவர் கூறும் போது, ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ள இவர்கள், இன்னும் இருக்கிறார்கள். அதை நீங்களே இப்போது நேரில் பாருங்கள். அவர்களிடம் ஆதார் அட்டை மற்றும் பிற ஆவணங்களும் இருக்கின்றன. ஆனால், அவற்றையும் மீறி இன்னும் அவர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இணைக்கப்படவில்லை" என்று யோகேந்திர யாதவ் குற்றம்சாட்டினார்.

இதற்கு பதில் அளித்த. தேர்தல் ஆணையத்தின் வழக்கறிஞர் ராகேஷ் திவேடி, இந்த நீக்கங்கள் 'தற்செயலான பிழைகள்' என்றும், அவற்றைத் திருத்த முடியும் என்றும் கூறினார். உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தை நாளை மீண்டும் விசாரிக்க உள்ளது.

கருத்துகள் இல்லை: