செவ்வாய், 12 ஆகஸ்ட், 2025

கோயில்கள் தோறும் கொண்டாட்டம் குடமுழுக்கு .பொருளாதார வளர்ச்சியோ ஸிரோ .. இலங்கை வடக்கில்

 Veluppillai Thangavelu  :   வடக்கு மாகாணத்தில் இருக்கும் அத்தனை கோயில்களிலும் தேர், தீர்த்தம், குடமுழுக்கு என ஒரே கொண்டாட்டம்.  
விடிய விடிய 10-20 சோடி நாதசுரக்  கச்சேரி. பெரிய கோயில், சின்னக் கோயில் என்ற வேற்றுமை கிடையாது. இந்த விழாக்களுக்கு கோடிக்கணக்கான பணம் செலவாகிறது. நேரச் செலவு எவ்வளவு? 
ஆனால் வடமாகாணம் பொருளாதார வளர்ச்சியில் கடைசி இடத்தில் இருக்கிறது. கல்வி வளர்ச்சியில் ஒன்பது மாகாணங்களில் கடைசி இடம். மக்கள் தொகையில் 19 விழுக்காடு வீழ்ச்சி. 
இந்த விழாக்களால் ஏதாவது பயன் இருக்கிறதா? நோய், நொடி இல்லாமல் போய்விட்டதா?  நேற்றுக் கூட டெங்கு நோயால் ஒருவர் மரணித்துள்ளார்.


சரி போகட்டும். வயல் விளைச்சல் ஒரு மடங்கு கூடியிருக்கிறதா? தோட்டக்காரர்கள் வயிறாரச் சாப்பிடுகிறார்களா? 
மாதம் மும்மாரி  பெய்கிறதா? மும்மாரி வேண்டாம் ஒரு மாரியாவது பெய்கிறதா? யாழ் குடாநாட்டில் தண்ணீர் பஞ்சம். நிலத்தடி நீர் குறைந்து கொண்டு போகிறது!
பின் எதற்காக இந்தத் திருவிழாக்கள்? கடவுள் தன்னை தேரில் வைத்து இழுக்கச் சொன்னாரா? திருமணம் செய்து வைக்கச் சொன்னாரா? வேட்டையாட கேட்டாரா?  மோதகம், முறுக்கு, அவல், சுண்டல் கேட்டாரா? 
இஸ்லாமியர் வாரத்தில் ஒரு நாள் வெள்ளிக் கிழகை மசூதிக்குச் சென்று தொழுகிறார்கள். சடங்கு இல்லை.
கிறித்தவர் வாரத்தில் ஞாயிற்றுக் கிழமை தேவாலயத்துக்குச் சென்று பிரார்த்தனை செய்கிறார்கள். சடங்கு இல்லை. தமிழ்நாடு விதிவிலக்கு. இந்துக்களை பின்பற்றி  கொடியேற்றம், தேர், தீர்த்தம் நடக்கிறது.
இந்துக்கள் திருமூலர் போன்ற மகான்கள் சொல்வதையே நம்புவதில்லை.
'உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளற் பிரானுக்கு வாய் கோபுரவாயில்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளாமணி விளக்கே'
-ஆசான் திருமூலர்-
நம் முன்னோர்கள் இயற்கையை வழிபட்டு இருக்கின்றனர். இயற்கையின் தன்மையை உணர்ந்து,வென்று சிவத்தை(கடவுள்தன்மை) யடைந்த மனிதர்களை(சித்தர்களை)வழிபட்டு இருக்கின்றனர். ஆனால் அவர்கள் நமக்கு விட்டுச்சென்ற கோவில்கள் அனைத்தும் நமது உடம்பேயன்றி வேறொன்றும் இல்லை என்பதை  உணரவில்லை. ஆகவேதான் இறைவனைத் தேடி  கோவில் கோவிலாக அலைகிறார்கள். 
"உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்
உடம்புக்குள்ளே உறு பொருள் கண்டேன்
உடம்புளே உத்தமன் கோயில் கொண்டானென்று
உடம்பினை யான் இருந்து ஓம்புகின்றேனே"
- ஆசான் திருமூலர்
என்று மானுட உடம்பின் மகத்துவத்தை மனித மனத்தில் பதிய வைத்த ஆசான் திருமூலர். இதோடு நின்று விடாது,
"உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்"
என்று பாடியவர் மேலும் கூறுகிறார்,
"உள்ளத்தின் உள்ளே உளபல தீர்த்தங்கள்
மெள்ளக் குடைந்து நின்றாடார் வினைகெடப்
பள்ளமும் மேடும் பறந்து திரிவாரே
கள்ள மனமுடைக் கல்வி இலோரே!
என்று உள்ளத்துள்ளே இறைவனைக் காணாது வேறு எங்கெங்கோ தேடி அலையும் வீனரை மூடர் என்றே ஏசுகிறார்.
உடம்பில் நன்மையும், தீமையும் சேர்த்தே இயற்கை அன்னை படைத்துள்ளாள். இந்த உடம்பில் தீமை சேர்த்து படைத்ததின் காரணம், நெல்லுக்கு உமி இல்லை என்றால் மீண்டும் முளைக்காது. ஆகவே, இந்த தேகத்தில் கேட்டையும், ஆக்கத்தையும் சேர்த்து படைத்திருக்கிறாள். கேடாகிய உமி நீங்கினால் அரிசி மீண்டும் முளைக்காது. (புற உடம்பாகிய மும்மல தேகம் நீங்கினால்) அதேபோல் கேடான மும்மலம் என்னும் உமி நீங்கினால் மலமற்ற ஒளி உடம்பாகிய ஜோதி உடம்பு உண்டாகும். ஜோதி உடம்பு உண்டானால் மீண்டும் பிறக்காது (உமி நீங்கினால் அரிசி முளைக்காதது போல).
கங்கையிலே காவிரியில் நூறுமுறை மூழ்கி
கணக்கற்ற திருக்கோயில் கால்தேய சுற்றி
வெங்கொடிய பலநோன்பு ஏற்றுடலை வருத்தி
வேதங்கள் கூறுகின்ற யாகமெல்லாம் செய்து
பங்கமிலா வேதியர்கை பணம்அள்ளி தந்து
பசுவதைப் பூசித்து அதன்கழிவை உண்டு
தங்களுயிர் மோட்சத்தை அடைவதற்கே முயலும்
தயவில்லார் சத்தியமாய் முத்தியதை யடையார்.
-ஆசான் வள்ளலார் - 14.
ஆகவே கோவிலுக்கு செல்வதால் பலனில்லை. நாம் நம் உடலை புரிந்து கொண்டு அதை சரியாக ஓம்புவதால் மட்டுமே நம்மால் நம் உள்ளம் நன்றாக வேலை செய்யும். நம் உளம் நன்றாக வேலை செய்தால் நம்முடைய சுற்று வட்டாரங்கள் நமக்கு சாதகமாக இருக்கும். ஏனெனில் நம் உலகம் ஒன்றுகொன்று தொடர்புடையதே. ஆகையால் வெற்றி வேண்டுமெனில் நாம் நம்மிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். அதை விடுத்து கோவில் கோவிலாக ஏறி இறங்கி விட்டு கடவுள் எனக்கு ஒன்றும் செய்ய வில்லையே என்று புலம்புதல் நன்றல்ல.

கருத்துகள் இல்லை: