வெள்ளி, 21 ஜூன், 2024

பூரண மதுவிலக்கு வேண்டும்! - அரசுக்கு திருமாவளவன் வைத்த கோரிக்கை

 tamil.samayam.com -  எழிலரசன்.டி :  கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் மெத்தனால் கலந்த கள்ளச் சாராயத்தை குடித்த 42 பேர் பலியான சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
சுமார் 100க்கும் அதிகமானோர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதென மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.
இந்த சூழலில் கருணாபுரம் பகுதிக்கு இன்று இரவு நேரில் சென்ற விசிக தலைவர் திருமாவளவன்,
அங்கு உயிரிழந்தோரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
முன்னதாக திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதுதான் இந்தக் கொடுமையைத் தடுக்கும் நிரந்தர தீர்வு என்று குறிப்பிட்டுள்ளார்.



மெத்தனால் என்னும் நஞ்சு கலந்த கள்ளச் சாராயம் கூடுதல் போதை அளிப்பதாகச் சொல்லி, சட்டத்துக்கு விரோதமாக ஒரு கும்பல் அதனை விற்று வருவதாகவும், இதுபோன்ற கள்ளவணிகம் கள்ளக்குறிச்சிப் பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அதன்விளைவாக தற்போது 40க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் விவரித்தார்.
கள்ளச்சாராய மரணங்கள் : அமித்ஷாவுக்கு பறந்த முக்கிய கடிதம் - சிபிஐ விசாரணை கேட்கும் அண்ணாமலை..கடந்த ஆண்டு மரக்காணம் பகுதியில் மெத்தனால் கலந்த நச்சு சாராயத்தைக் குடித்து 22 பேர் உயிரிழந்தனர் என்பதை சுட்டிக்காட்டிய திருமாவளவன், “அந்த சமயத்தில் மெத்தனால் கள்ள வணிக நடமாட்டத்தைக் கண்காணிப்போம் என்று அரசு தரப்பில் கூறப்பட்டது. எனினும், கள்ளச் சந்தையில் மெத்தனால் கட்டற்ற முறையில் புழக்கத்தில் இருப்பது உறுதியாகியுள்ளது. இனியாவது மெத்தனால் விநியோகத்தைக் கண்காணிப்பதற்கு அரசு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என வலியுறுத்தினார்.

அரசின் நடவடிக்கைகளை வரவேற்கிற அதேவேளையில், மெத்தனாலின் கள்ளவணிகத்தோடு தொடர்புடைய அதிகாரிகளை அடையாளம் கண்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், கள்ளச் சாராயத்தை ஒழிப்பதற்காகவே அரசின் சார்பில் டாஸ்மாக் கடைகள் நடத்தப்படுவதாக நியாயப்படுத்தப்படுகிறது. ஆனால், அது ஏற்புடையது இல்லை என்பதை கள்ளச் சாராய மரணங்கள் உறுதிப்படுத்தியுள்ளன என்று தெரிவித்தார்.

மேலும், “மதுக்கடைகள் நடத்துவதற்கு வருவாய் ஒரு காரணமாக சொல்லப்படுவதும் ஏற்புடையதாக இல்லை. தமிழ்நாட்டின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். படிப்படியாக மதுக்கடைகளை மூட அரசு முன்வர வேண்டும். மது விலக்கை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு மாநில அரசுக்கு மட்டுமல்ல, ஒன்றிய அரசுக்கும் உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டுகிறோம்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி விலகியே ஆகணும்.. எடப்பாடி பழனிசாமி காட்டம்!

கள்ளச் சாராயம் குடித்து உயிரிழப்பவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அளிப்பதை விடவும் முழுமையான மது விலக்கின் தேவை குறித்து மக்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகவும் இன்றியமையாதது” என்றும் வலியுறுத்தியுள்ளார்.

எழிலரசன்.டி

கருத்துகள் இல்லை: