திங்கள், 17 ஜூன், 2024

மேற்கு வங்க ரயில் விபத்து 15 பேர் உயிரிழப்பு ! “மோடி அரசின் தவறான நிர்வாகமே காரணம்” - காங்கிரஸ் குற்றச்சாட்டு

 hindutamil.in :  புதுடெல்லி: மேற்கு வங்க ரயில் விபத்துக்கு நரேந்திர மோடி அரசின் 10 ஆண்டு கால தவறான நிர்வாகமே காரணம் என்று காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. முன்னதாக, இன்று காலை மேற்கு வங்கத்தில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதிய விபத்தில் ரயில் ஓட்டுநர் உள்பட 15 பேர் உயிரிழந்தனர்.
மல்லிகார்ஜுன் கார்கே கண்டனம்: இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மேற்கு வங்கத்தின் ஜல்பைகுரி அருகே நிகழ்ந்த ரயில் விபத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்துச் செய்தி மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்துக் காட்சிகளைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது.



பாதிக்கப்பட்ட குடும்பங்களை எண்ணி என் இதயம் வேதனை கொள்கிறது. இந்த துயரமான நேரத்தில், அவர்கள் ஒவ்வொருவருக்கும் எனது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறோம். பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக முழுமையான இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசு, ரயில்வே அமைச்சகத்தை மிகவும் தவறாக நிர்வகித்து வந்துள்ளது. சுய விளம்பரத்துக்கான மேடையாக, கேமராவால் இயக்கப்படும் ஒரு துறையாக திட்டமிட்ட ரீதியில் மோடி அரசு அதனை மாற்றிவிட்டது. ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக இதனை சுட்டிக்காட்டுவது எங்கள் கடமை என்று கருதுகிறோம்.

இந்த அப்பட்டமான யதார்த்தத்தின் மற்றொரு நினைவூட்டலாகவே இன்றைய சோகச் சம்பவம் இருக்கிறது. எங்கள் மீது குற்றம் காணாதீர்கள். நாங்கள் எங்கள் கேள்விகளை தொடர்ந்து முன்வைத்துக்கொண்டே இருப்போம். மேலும், இந்திய ரயில்வேயை கைவிட்ட குற்றத்தை இழைத்த மோடி அரசை அதற்கு பொறுப்பேற்கச் செய்வோம்" என தெரிவித்துள்ளார்.

அரசுக்கு பவன் கெரா கேள்வி: காஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் செய்தித் தொடர்பு பிரிவின் தலைவர் பவன் கெரா, ​​“இதுபோன்ற மனதை உலுக்கும் சம்பவங்களின் பட்டியல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால், அரசாங்கம், அமைச்சகம் அல்லது அமைச்சர் என யாரும் எதையும் கற்றுக்கொள்ளவில்லை. விபத்து நடந்த இடத்துக்கு மத்திய ரயில்வே அமைச்சர் சென்றிருக்கிறார். அங்கிருந்து ஒரு வீடியோவை அவர் வெளியிடுவார்.

பின்னர் அதற்காக அவர் பாராட்டும் பெறுவார். இதுபோன்ற விபத்துக்களுக்காக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த வரலாறு எங்கள் கட்சிக்கு உண்டு. அதுபோன்ற ஒரு முன்னுதாரணத்தை படைத்தவர்கள் நாங்கள். விபத்து நடந்த இடத்துக்கு ரயில்வே அமைச்சர் செல்வது என்பது அவரது கடமை. ஆனால், இதுபோன்ற விபத்துக்கள் ஏன் அடிக்கடி நடக்கின்றன?” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

கருத்துகள் இல்லை: