மின்னம்பலம் - ஆரா : கலைஞர் பேனாவுக்கு ஆதரவு: திமுகவின் ஸ்லீப்பர் செல்லா காயத்ரி?
மெரினாவில் அமைய இருக்கும் கலைஞர் பேனா நினைவுச் சின்னத்துக்கு பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட காயத்ரி ரகுராம் ஆதரவு தெரிவித்துள்ளார்.
முதுபெரும் அரசியல் தலைவரான மறைந்த கலைஞர் நினைவாக சென்னையில் மெரினா கடற்கரையில் கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்திருக்கிறது.
இது தொடர்பாக நேற்று (ஜனவரி 31) சென்னையில் நடந்த கருத்துக் கேட்புக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கலந்துகொண்டு பேனா நினைவுச் சின்னம் அமைக்க கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
பூவுலகின் நண்பர்கள் போன்ற அமைப்புகளும் சுற்றுச் சூழல் காரணம் காட்டி இத்திட்டத்தை எதிர்க்கிறார்கள்.
இந்த நிலையில் அண்மையில் பாஜகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட காயத்ரி ரகுராம் கலைஞர் பேனா நினைவுச் சின்னம் திட்டத்துக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று (பிப்ரவரி 1) தனது ட்விட்டர் பதிவில் அவர்,
“பேனா பொதுவானது, பேனா சிலையை மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இது வெறும் பேனாவாக இருக்கக்கூடாது, அனைவரும் சுற்றுலா பார்வையிடக்கூடிய புதிய ஹாலோகிராபிக் அல்லது லேசர் நிகழ்ச்சியுடன் தமிழ்நாட்டின் வரலாற்று பேனாவாக இருக்க வேண்டும்.
இது சுற்றுலா பயணிகளுக்கு சுவாரஸ்யமாக இருக்கும். புயல்களால் கூட சேதப்படுத்த முடியாத இந்த பேனா வலுவாக இருக்க வேண்டும்.
இந்த பேனா தமிழ்நாடு மக்களின் ஜனநாயகக் குரலாக இருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே காயத்ரி ரகுராமை திமுகவின் ஸ்லீப்பர் செல் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் நிலையில்,
கலைஞர் பேனா நினைவுச் சின்னத்துக்கு தனது ஆதரவை பகிரங்கமாக தெரிவித்துள்ளார் காயத்ரி ரகுராம்.
மேலும், திமுகவின் ஸ்லீப்பர் செல் என்பதற்கும் விளக்கம் அளித்துள்ளார்.
அண்ணாமலை மற்றும் அவரது போலி செய்தி தொழிற்சாலையின் படி எனக்கு திமுக ஸ்லீப்பர் செல் என்று ஒரு நல்ல போஸ்டிங் உள்ளது. அது போதுமான சக்தி இல்லையா? வார்ரூம் சோர்வடையும் வரை கத்திக்கொண்டே இருக்கட்டும்.😌 https://t.co/ejUeTONloa
— Gayathri Raguramm 🇮🇳 (@Gayatri_Raguram) February 1, 2023
“அண்ணாமலை மற்றும் அவரது போலி செய்தி தொழிற்சாலையின் படி எனக்கு திமுக ஸ்லீப்பர் செல் என்று ஒரு நல்ல போஸ்டிங் உள்ளது.
அது போதுமான சக்தி இல்லையா? வார் ரூம் சோர்வடையும் வரை கத்திக்கொண்டே இருக்கட்டும்” என்று கூறியுள்ளார் காயத்ரி.
அதாவது திமுகவின் ஸ்லீப்பர் செல் என்பதே தனக்கு ஒரு நல்ல பதவிதான் என்றும் அண்ணாமலையை எதிர்க்க அது தனக்கு போதுமான சக்தி என்றும் குறிப்பிட்டுள்ளார் காயத்ரி.
இதுமட்டுமல்ல, ஈரோடு கிழக்கில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ள காயத்ரி ரகுராம்,
அதே தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தென்னரசு, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா ஆகியோருக்கும் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
–வேந்தன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக