Kalaignar Seithigal - KL Reshma : வாணியம்பாடி கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்களின் குடும்பங்களுக்கும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பெண்களின் குடும்பங்களுக்கும் நிவாரணம் அறிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வாரச்சந்தை மைதானத்தில் நாளை தைப்பூச திருவிழாவை ஒட்டி ஐயப்பன் ப்ளூ மெட்டல்ஸ் உரிமையாளர் ஐயப்பன் தனது சொந்த செலவில் ஐந்தாயிரம் பேருக்கு இலவச வேட்டி சேலை வழங்குவதற்காக இன்று டோக்கன் விநியோகம் செய்ய இருந்தார்.
இதனை அறிந்து சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் ஒரே நேரத்தில் கூடியதால் கூட்ட நெரிசலில் சிக்கி நான்கு பெண்கள் உயிரிழந்தனர்.
மேலும் மூன்று பெண்கள் கவலைக்கிடமான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதோடு மேலும் எட்டு நபர்கள் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் அறிந்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர்குஸ்வாஹா, வேலூர் சரக டி.ஐ.ஜி முத்துசாமி, திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் சிகிச்சைகள் குறித்து நலம் விசாரித்தனர். பின்னர் அதிகாரிகளுக்கு உரிய முறையில் சிகிச்சை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
இந்த செய்தி அறிந்து தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சரும் திருப்பத்தூர் மாவட்ட பொறுப்பு அமைச்சருமான எ.வ.வேலு, உயிரிழந்த 4 குடும்பங்களுக்கு தலா 25,000 ரூபாய் ஈம சடங்கு செலவிற்காக தனது சொந்த செலவில், வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா மூலம் உயிரிழந்த குடும்பத்தினரிடம் வழங்கினார். உடன் நகர திமுக செயலாளர் சாரதிகுமார், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் பிரபாகரன் உடன் இருந்தனர்
இந்த நிலையில் உயிரந்தோர் குடும்பங்களுக்கு முதலமைச்சர் நிவாரணம் அறிவித்துள்ளார். இது குறித்து வெளியான செய்தி குறிப்பில், “திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வட்டம் மற்றும் நகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் அய்யப்பன் என்பவர் நாளை (5.2.2023) நடைபெறும் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, அங்குள்ள பொதுமக்களுக்கு வேட்டி சேலை வழங்குவதற்காக, இன்று (4.2.2023) காலை வாணியம்பாடி காய்கறி சந்தைக்கு அருகில் டோக்கன் விநியோகித்தார்.
அதை வாங்குவதற்காக ஏராளமான பொதுமக்கள் கூடியதால், அங்கு கூட்டநெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்டநெரிசலில் சிக்கி வள்ளியம்மாள் (வயது 60) க/பெ. சண்முகம், ராஜாத்தி (வயது 62) க/பெ. ஜெமினி, நாகம்மாள் (வயது 60) க/பெ. சின்னத்தம்பி மற்றும் மல்லிகா (வயது 70), க/பெ. மணி ஆகிய வயதான நான்கு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.
மேலும் மூன்று பெண்கள் காயமுற்று, மூச்சுத் திணறல் ஏற்பட்டு, வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிசிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவத்திற்குக் காரணமான அய்யப்பன் உடனடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த துயர சம்பவத்தைக் கேள்வியுற்று, நான் மிகவும் வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களைப் பிரிந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த வயதான நான்கு பெண்களின் குடும்பத்தாருக்கு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து, தலா 2 இலட்சம் ரூபாயும், கடும் காயமடைந்து, மூச்சுத் திணறல் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மூன்று பெண்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதியுதவி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக