Kalaignar Seithigal -Prem Kumar: தமிழ் உள்ளிட்ட மொழிகளில் 1,268 உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டுள்ளன. இது மிகப்பெரிய முயற்சியாகும். மிகப்பெரிய சிந்தனை மாற்றமும் ஆகும். தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளின் உரிமைகள் நிலைநாட்டப் பட்டதாகவே இதனைப் பார்க்க வேண்டும். இதற்கே இத்தனை ஆண்டுகள் ஆகியிருக்கிறது என்று நினைத்ததாலும், இப்போதாவது நடந்துள்ளதே என்று மகிழ்ச்சியடையவே வேண்டும்!
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பொறுப்பேற்றதற்கு பிறகு நடக்கும் மிக முக்கிய மாற்றம் இது. மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தலைமை நீதிபதி, 'உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் மாநில மொழிகளில் வெளியிடப்பட வேண்டும்' என்று வெளிப்படையாகவே பேசி இருந்தார்கள். இதனை பிரதமர் நரேந்திரமோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்று இருந்தார்கள்.
தீர்ப்புகளை மாநில மொழிகளில் மொழிபெயர்ப்பதற்காக உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வுபெற்ற ஏ.எஸ்.ஓகா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில் ஆறுபேர் இடம்பெற்று இருந்தார்கள். இவர்கள் தங்கள் பணிகளை தீவிரமாகச் செய்து வந்தார்கள். இதனை உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தெரிவித்தார்கள்.
“உச்சநீதிமன்றத்தின் மின்னணு துறை சார்பாக 34 ஆயிரம் தீர்ப்புகள் தனியாக தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்புகளை மக்கள் இலவசமாக பார்க்கும் வகையில் வசதி செய்து தரப்பட உள்ளது. இதில் இருந்து முதல் கட்டமாக 1,268 தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் மொழி பெயர்க்கப்பட இருக்கிறது. இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளில் இவை வெளியாகும்.
“தமிழில் தீர்ப்பு மிகப்பெரிய சிந்தனை மாற்றம்.. அனைத்து மொழிகளுக்கும் உரிமையானதே உச்சநீதிமன்றம்” : முரசொலி
உச்சநீதிமன்றத்தின் அனைத்துத் தீர்ப்புகளும் மாநில மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடப்படும். வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்துக்கு ஒத்துழைக்க வேண்டும்” என்றும் தலைமை நீதிபதி கேட்டுக் கொண்டுள்ளார். இதன்படி குடியரசு நாளன்று தீர்ப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இது இந்திய நீதித்துறை வரலாற்றில் மிக முக்கியமான நாளாகும்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற விழாவுக்கு அப்போது தலைமை நீதிபதியாக இருந்த ரமணா வருகை தந்தார்கள். அந்த விழாவில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மூன்று கோரிக்கைகளை முன் வைத்தார்கள்.
* உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியும் கருத்தில் கொள்ளப்படவேண்டும்
*தமிழ் மொழியினையும் உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்காடு மொழியாக ஆக்க வேண்டும்.
* பொதுமக்கள் மற்றும் வழங்கறிஞர்களின் நலனைக் கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றத்தின் ஒரு கிளையினை சென்னையில் அமைக்க வேண்டும் - என்பதுதான் முதலமைச்சர் அவர்கள் கேட்டுக் கொண்டார்கள். இவை மூன்றுக்கும் அதே மேடையில் உச்சநீதிமன்ற நீதியரசர் பதில் அளித்திருந்தார்.
“தமிழில் தீர்ப்பு மிகப்பெரிய சிந்தனை மாற்றம்.. அனைத்து மொழிகளுக்கும் உரிமையானதே உச்சநீதிமன்றம்” : முரசொலி
நீதிபதிகளை நியமிக்கும்போது சமூகப் பிரதிநிதித்துவம் நிச்சயமாகப் பரிசீலிக்கப்பட வேண்டும், உச்சநீதிமன்றத்தின் மண்டல அளவிலான கிளைகளை அமைப்பது குறித்து ஏற்கனவே மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சனால் நாடாளுமன்றத்தில் தனிநபர் மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒன்றிய அரசு முடிவு செய்யும் - என்றும் தலைமை நீதிபதி ரமணா அப்போது சொன்னார்கள்.
''It is important that regional languages are made languages of the court because the litigant must understand the process of administration of justice. It should not be like chanting of mantra that no one understands. (எவருக்கும் புரியாத வகையில் மந்திரம் உச்சரிப்பதைப் போன்று இல்லாமல், வழக்காடுபவர்கள் நீதித்துறையின் நிர்வாக செயல்பாடுகளை புரிந்து கொள்ளும் வகையில் நீதிமன்றங்களின் வழக்காடு மொழியாக மாநில மொழிகள் ஆக்கப்பட்ட வேண்டியது அவசியம்) - என்பது அவரது உரையின் மிக முக்கியமான பகுதி ஆகும்.
“தமிழில் தீர்ப்பு மிகப்பெரிய சிந்தனை மாற்றம்.. அனைத்து மொழிகளுக்கும் உரிமையானதே உச்சநீதிமன்றம்” : முரசொலி
இதன் முதல் கட்டமாகத்தான் தீர்ப்புகள் முதலில் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி இருக்கின்றன. அடுத்து வாதாடும் மொழியாக மாநில மொழிகளும் ஆகும் காலம் வெகு தொலைவில் இல்லை. உச்சநீதிமன்றம் என்பது அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானது ஆகும்.
உச்சநீதிமன்றமானது டெல்லியில் இருந்து செயல்படுகிறது அவ்வளவுதான். அதனால் டெல்லிக்குச் சொந்தமானது அல்ல. டெல்லியில் இருந்து செயல்படலாம் என்று அரசமைப்புச் சட்டத்தின் 130 ஆவது பிரிவு சொல்கிறது. குடியரசுத் தலைவர் ஒப்புதல் தந்தால் வேறு மாநிலத்தில் இருந்தும் செயல்படலாம் என்று விதிகள் சொல்கின்றன.
எனவே இடத்தை வைத்து தீர்மானிக்க முடியாது. டெல்லியில் இருந்தாலும் அனைத்து மொழிகளுக்கும் உரிமையானதே உச்சநீதிமன்றம். 2019 ஆம் ஆண்டு 100 தீர்ப்புகள் மட்டும் ஐந்து மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது. இந்தி, தெலுங்கு, கன்னடம், அசாமி, ஒடியா ஆகியவை அந்த மொழிகள். இதில் தமிழும் இல்லை, மற்ற மொழிகளும் இல்லை. அதிகமாக மேல் முறையீடு வரும் மொழிகளில் இருந்து இந்த ஐந்து மொழிகளை தேர்வு செய்ததாக அப்போது சொன்னார்கள்.
தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்ட பிறகுதான் 9 மொழிகளில் வெளியிடப்படும் என்று அறிவித்தார்கள். அதில் தமிழும் ஒன்று. சில வாரங்களுக்கு முன்னால் உச்சநீதிமன்றத்தில் இந்தியில் ஒரு வழக்கறிஞர் வாதாடினார். அதனை நீதிபதிகள் ஏற்கவில்லை. 'உச்சநீதிமன்றத்தின் வழக்காடு மொழி ஆங்கிலம். இந்தியில் நீங்கள் பேசியது புரியவில்லை. நீங்கள் விரும்பினால் உங்களுக்கு உதவ ஒரு வழக்கறிஞரை வைக்கிறோம்' என்று நீதிபதிகள் சொன்னார்கள்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழ் ஆக வேண்டும் என்பதை தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. உச்சநீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைக்க வேண்டும் என்றும் தி.மு.க. வலியுறுத்தி வருகிறது. இவை இரண்டும் தமிழுக்கும் தமிழ்நாட்டுக்குமான கோரிக்கைகள் ஆகும். அதுமட்டுமல்ல, நீதித்துறை போற்றிப் பாதுகாக்க வேண்டிய சமூகநீதியும் ஆகும் இது. உயர்நீதி மன்றங்களில் கூடுதல் ஆட்சி மொழியாக அந்தந்த மாநில மொழிகள் ஆக்கப்பட வேண்டும். கீழமை நீதிமன்றங்களில் மாநில மொழிகளே ஆட்சி மொழியாக ஆதல் வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக