மாலை மலர் : புவனேஸ்வர் ஒடிசா மாநிலத்தில் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜு ஜனதா தளம் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அவரது மந்திரி சபையில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை மந்திரியாக இருப்பவர் நபா கிஷோர் தாஸ்.
பிஜு ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரான அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 12.30 மணிக்கு ஜார்சுகுடா மாவட்டத்தில் உள்ள பிரஜராஜ் நகருக்கு அருகே உள்ள காந்தி சவுக் பகுதிக்கு சென்றார்.
காரில் இருந்து இறங்கிய அவர் மீது மர்ம நபர்கள் 3 பேர் திடீரென சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். 2 ரவுண்டுகள் துப்பாக்கியால் சுட்டதாக தெரிகிறது.
இதில் மந்திரி நபா கிஷோர் தாஸ் மீது குண்டுகள் பாய்ந்தன. அவரது மார்பை துப்பாக்கி குண்டுகள் துளைத்தன.
இதில் சம்பவ இடத்திலேயே அவர் சுருண்டு விழுந்தார்.
ரத்த வெள்ளத்தில் மிதந்த அவரை மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதுபற்றி அறிந்ததும் அவரது ஆதரவாளர்கள் கடும் ஆத்திரம் அடைந்தனர். பல்வேறு இடங்களில் அவர்கள் போராட்டங்கள் நடத்தினர்.
போலீஸ் பாதுகாப்பை மீறி மந்திரி மீது துப்பாக்கி சூடு நடத்து இருப்பதால் சந்தேகம் எழுந்துள்ளது. இந்த தாக்குதல் திட்டமிட்ட சதியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக