dhinkaran :dinakaran.com : காபூல்: ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க இடைக்கால தடை விதித்த தலிபானின் உத்தரவுக்கு ஐ.நா. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும் இங்கிலாந்து, அமெரிக்காவும் கண்டித்துள்ளது. கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றினர்.
இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டத்தின்படியே ஆட்சி என்று அறிவித்தனர்.
அதேவேளையில், ‘கடந்த முறையை போல் ஆட்சி இருக்காது. பெண் கல்வி, பெண் சுதந்திரம் பேணப்படும், உலக நாடுகளுடன் நட்புறவு ஏற்படுத்தப்படும்’ என்று உறுதியளித்தனர்.
ஆனால், தலிபான்களின் ஆட்சி அவ்வாறாக நடைபெறவில்லை.
தற்போது, அங்குள்ள பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிக்க இடைக்கால தடை விதித்து தலிபான் அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து அனைத்து அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களுக்கும் ஆப்கன் அரசின் உயர்கல்வி அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவில், “மறு அறிவிப்பு வரும் வரை பெண்களுக்கு அனுமதி இல்லை. இந்த உத்தரவை நீங்கள் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவை உயர்கல்வி அமைச்சக செய்தி தொடர்பாளர் ஜியாவுல்லா ஹாஷிமி உறுதி செய்தார்.
இதுகுறித்து ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் துஜாரிக் நேற்று கூறும்போது, “ஆப்கனில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து கல்வியில் மட்டுமின்றி, பொது இடங்களிலும் பெண்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது மிகவும் கவலையளிக்கிறது. பெண்கள் கல்வி கற்காமல் ஒரு நாடு எவ்வாறு வளர்ச்சியடையும்” என்று கவலை தெரிவித்தார். மேலும், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவும் கண்டனம் தெரிவித்துள்ளது. இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ‘மகள்களுக்கு தந்தையாக, அவர்களுக்கு கல்வி மறுக்கப்படும் உலகத்தை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியாது. ஆப்கானிஸ்தானின் பெண்களுக்கு வழங்க நிறைய இருக்கிறது.
அவர்களுக்கு பல்கலைக்கழகத்தில் நுழைய அனுமதி மறுப்பது மிக பெரிய பின்னடைவாகும்’ என பதிவிட்டுள்ளார். இதேபோல், வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்களில் பெண்கள் படிப்பதற்கு இடைக்கால தடை விதித்துள்ள தலிபான்களின் முடிவை அமெரிக்கா கண்டிக்கிறது. ஆப்கானிஸ்தான் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு ஆதரவாகவும், அந்நாட்டு மக்களுக்கு மனிதாபிமான ஆதரவை வழங்குவதற்கும் எங்களின் முயற்சிகளை முன்னெடுப்பதற்கு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்’ என தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக