வெள்ளி, 25 நவம்பர், 2022

`கண்பட்டதுபோல்’ ஆகிவிட்டது; நாங்கள் இருவரும் அக்கா, தம்பி!" - சூர்யா சிவா, டெய்சி பேட்டி ம.பா.இளையபதி

 vikatan.com :  தமிழக பா.ஜ.க ஓ.பி.சி பிரிவு மாநில பொதுச்செயலாளர் சூர்யா சிவா, கட்சியின் சிறுபான்மையினர் அணித் தலைவர் டெய்சி சரண் இருவருக்கும் இடையேயான சர்ச்சைக்குரிய ஆடியோ பதிவு, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.
இந்த விவகாரம் தொடர்பாக, இருவரிடமும் இந்த அலைபேசி உரையாடல் குறித்து விசாரித்து கட்சித் தலைமைக்கு 7 நாள்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, மாநில துணைத்தலைவரும், ஒழுங்கு நடவடிக்கை குழுத் தலைவருமான கனகசபாபதியிடம் தெரிவித்தார்.


இந்த நிலையில், அலைபேசி உரையாடல் குறித்து திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் சிறுபான்மை அணித்தலைவர் டெய்சி சரண், ஓ.பி.சி பிரிவு மாநில பொதுச்செயலாளர் திருச்சி சூர்யா ஆகியோர் நேற்று விசாரணைக் குழு முன்பு வியாழக்கிழமை ஆஜராகி விளக்கமளித்தனர்.

சூர்யா சிவா - டெய்சி
கட்சியின் மாநில துணைத்தலைவர் கனகசபாபதி, மாநிலச் செயலாளர் மலர்கொடி ஆகியோர் டெய்சி சரண், திருச்சி சூர்யா ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். தனித்தனியாக விசாரணை நடந்தது. இது உட்கட்சி விவகாரம் என்பதால் பத்திரிகையினர் மற்றும் வெளிநபர்கள் அனுமதிக்கப்படவில்லை. 3 மணிநேரத்துக்கு மேல் நடந்த விசாரணையின் அறிக்கை, தலைமைக்கு அனுப்பப்படும் என விசாரணைக்குழுவினர் தெரிவித்தனர். இந்த நிலையில் டெய்சி சரண், திருச்சி சூர்யா ஆகியோர் கூட்டாக, திருப்பூர் பா.ஜ.க அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது பேசியவர்கள், ``சமீபத்தில் வெளியான ஆடியோ விஷயம், எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்த அவல் ஆகும். ஆனால் பாஜக-வில் சேர்ந்த நாள் முதல் அப்படி இல்லை. நாங்கள் ஒருவருக்கொருவர் பேசி முடிவுக்கு கொண்டுவந்துவிட்டோம். இதில் யாருடைய வற்புறுத்தலும் இல்லை. பிரதமர் மோடியின் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு வந்தவர்கள் நாங்கள். ’கண்பட்டது போல்’ இந்த ஆடியோ சம்பவம் அரங்கேறிவிட்டது. தற்போது யாருடைய வற்புறுத்தலும் இன்றி பேசி முடித்துக்கொண்டோம். ஆடியோ வெளியானதால், இருவரும் எங்களுடைய கருத்தை தெரிவித்துவிட்டோம்.

எங்களுக்குள் இருந்த பிரச்னைகளை சுமுகமாகப் பேசி முடித்துவிட்டோம். எங்கள் தரப்பிலிருந்து ஆடியோ வெளியிடப்படவில்லை. இது தொடர்பாக, கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு தணிக்கை செய்து வருகிறது. கட்சியிலும் தெரிவித்துவிட்டோம். நாங்கள் அக்கா, தம்பியாக குடும்பமாக பழகி வந்தோம். இனி அதே நிலை தொடரும். ஆடியோ விவகாரம், சின்னதொரு அசாம்பாவிதம்தான். கே.டி.ராகவன் இன்றுவரை கட்சி பணியை தொடரவில்லை" என்றனர்.

அதைத் தொடர்ந்து பேசிய திருச்சி சூர்யா, ``கட்சி எடுக்கும் நடவடிக்கைக்கு கட்டுப்படுவேன். கட்சியின் வெளிப்படைத்தன்மைக்கு இது உதாரணம். ஆனால் தி.மு.க அப்படி இல்லை. பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான பலர், இன்றைக்கு திமுக-வில் அமைச்சர்களாக உள்ளனர். திமுக எங்களை பார்த்து திருத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.

கருத்துகள் இல்லை: