minnambalam.com - Kalai : தமிழகத்தில் அங்கன்வாடிகளில் 1 முதல் 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வாரத்திற்கு 3 முட்டைகள் வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னையில் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் இன்று(நவம்பர் 21)நடைபெற்றது.
அதில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் தமிழ்நாட்டில் பொது விநியோக திட்டத்துடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தின்படி ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு சத்துக்கள் அடங்கிய செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கப்படும்.
அங்கன்வாடியில் 1 வயது முதல் இரண்டு வயது உள்ள குழந்தைகளுக்கு வாரம் 1 முட்டை வழங்கப்பட்டு வந்த நிலையில் நவம்பர் மாதம் முதல் மேலும் 2 முட்டைகள் சேர்த்து 3 முட்டைகள் கொடுக்கப்படும் என்றார்.
அதற்கான அரசாணையும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மேலும், சத்துமாவு வழங்குவது, ஊட்ட சத்து குறைந்த குழந்தைகளுக்கு பிஸ்கட் வழங்குவது தொடர்பான டெண்டர் விடுவது குறித்தும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் முட்டைகள் வழங்கப்படுகிறது என்று அரசு தெரிவித்துள்ளது.
குழந்தைகளுக்கு கூடுதலாக முட்டைகள் வழங்கும் அரசின் திட்டத்திற்கு தமிழ் நாடு கோழிப் பண்ணையாளர்கள் சங்கத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களில் உள்ள குழந்தைகளுக்கு வாரந்தோறும் புதன் கிழமை முட்டை வழங்கப்பட்டு வந்தது.
தற்போது திங்கள், புதன், வியாழக் கிழமைகளில் என வாரந்தோறும் மூன்று முட்டைகள் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதன் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு கூடுதலாக 40 லட்சம் முட்டைகள் நாமக்கல் பகுதிகளில் உள்ள பண்ணைகளில் இருந்து அனுப்பப்படும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கலை.ரா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக