திங்கள், 21 நவம்பர், 2022

அவதூறு வழக்கு.. கிஷோர் கே சுவாமி கைது.. முன்ஜாமீன் ரத்து செய்யப்பட்டதால் போலீஸ்....

 tamil.oneindia.com - Vigneshkumar  :  சென்னை: அரசியல் விமர்சகர் கிஷோர் கே சுவாமி சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்பியதாக போலீசார் முக்கிய நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
அரசியல் விமர்சகர் கிஷோர் கே சுவாமி தனது சமூக வலைத்தளங்களில் பதிவிடும் கருத்துகள் தொடர்ச்சியாகச் சர்ச்சையைக் கிளப்பும் வகையில் இருந்து வருகிறது.
ஏற்கனவே இது தொடர்பாக அவர் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கிடையே தமிழக போலீசார் இன்று காலை அவரை கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
அரசியல் விமர்சகரான கிஷோர் கே சுவாமி சமூகவலைத்தளங்களில் அவதூறு பரப்பிய வழக்கில் ஏற்கனவே கைதாகி, விடுவிக்கப்பட்டு இருந்தார்.


இதற்கிடையே அரசியல் விமர்சகர் கிஷோர் கே சுவாமி மீண்டும் முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு கருத்துகளைப் பரப்புவதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் அவரை விசாரணைக்காக ஆஜராகும்படி அறிவுறுத்தி இருந்தனர்.

அவதூறு தகவல்கள்
அதாவது தமிழ்நாட்டில் பரவலான இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், முதல்வர் ஸ்டாலின் கடந்த 1ஆம் தேதி வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்தார். அதை விமர்சிக்கும் வகையில் அரசியல் விமர்சகர் கிஷோர் கே சுவாமி கருத்துகளைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். நவம்பர் 5, 7, 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் விசாரணைக்கு ஆஜராகும்படி போலீசார் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர்.

முன்ஜாமீன் மனு
இப்படி போலீசார் பல முறை நோட்டீஸ அனுப்பியும் கூட அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. இந்த வழக்கில் எங்கு தான் கைது செய்யப்படுவோம் என நினைத்த கிஷோர் கே சுவாமி, விசாரணைக்கு ஆஜராகாமல் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவர் முன் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதி எஸ் அல்லி சில முக்கிய உத்தரவைப் பிறப்பித்தார்.

இரு தரப்பு வாதம்
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, நண்பரை மட்டுமே குறிப்பிட்டு ட்விட்டரில் இதைப் பதிவு செய்ததாக கிஷோர் கே சாமி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இருப்பினும், கிஷோர் கே சுவாமி இதை வாடிக்கையாக வைத்து உள்ளதாகத் தெரிவித்த போலீசார், சமூக வலைத்தளங்களில் அவர் தொடர்ச்சியாக இப்படி மற்றவர்களைத் துன்புறுத்தும் கருத்துகளைப் பதிவிட்டு வருவதாகவும் இது தொடர்பாக அவர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

நீதிமன்றம்
இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி அல்லி, "போலீசார் விசாரணைக்கு ஆஜாராகும்படி பல முறை அழைத்தும், இவர் ஆஜராகவில்லை. விசாரணைக்கு ஆஜராகாத நபருக்கு இப்போது முன்ஜாமீன் கொடுத்தால், அது நீதிமன்றம் இந்த சமூகத்திற்குத் தவறான தகவலைத் தெரிவிப்பது போல அமைந்துவிடும். எனவே, முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து செய்யப்படுகிறது" என்று அவர் தனது உத்தரவில் கூறி இருந்தார்.

கைது
இந்தச் சூழலில் புதுச்சேரியில் வைத்து கிஷோர் கே சுவாமியை போலீசார் இன்று காலை செய்தனர். புதுச்சேரி ஆரோவில் அருகே இருந்த அவரை, தமிழ்நாடு போலீசார் இன்று காலை கைது செய்ததாகக் கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டுள்ள கிஷோர் கே சுவாமியைத் தமிழ்நாடு அழைத்து வந்து அவரிடம் விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை: