வெள்ளி, 19 ஆகஸ்ட், 2022

பாஜக - ஆம் ஆத்மி மோதல்! குறி வைக்கப்பட்ட சிசோடியா! 2024 தேர்தல் போர் ஆரம்பித்து விட்டது?

 Halley Karthik  -  Google Oneindia Tamil :  டெல்லி: டெல்லி முதலமைச்சராக உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் மத்திய அரசுக்குமான தற்போதைய மோதல் போக்கானது ஒன்றும் புதிதல்ல.
சிபிஐ ரெய்டில் சிக்கிய டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா
கடந்த 2013ல் டெல்லியின் முதலமைச்சராக பொறுப்பேற்ற நாளிலிருந்தே அவர் மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைப்பிடித்துதான் வந்திருக்கிறார்.
முதலமைச்சராக பதவியேற்றவுடன் அவர் சிபிஐ ரெய்டுகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. ஆனாலும் அவர் மனம் தளராமல் தனது கட்சியை தொடர்ந்து வளர்த்தார்.


டெல்லியின் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியாவுக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ தொடர் சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. மதுவிலக்கு மாற்றம் செய்த விவகாரத்தில், கலால் வரியில் முறைகேடு நிகழ்ந்திருப்பதாக புகார்கள் எழுந்த நிலையில் சிசோடியா தொடர்புடைய சுமார் 21 இடங்களில் சிபிஐ சோதனையை மேற்கொண்டு வருகிறது. ஆனால் மத்திய அரசுக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையேயான இப்படியான மோதல்கள் என்பது ஏதோ இன்நு நேற்று தொடங்கியது அல்ல.

இவரின் அரசியல் தொடக்கமானது அன்னா அசாரேவுடன் தொடர்புடையதாகும். அதாவது, 2010ல் அன்னா அசாரேவுடன் இணைந்து, ஜன் லோக்பால் மசோதா மத்திய அரசால் நிறைவேற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். ஜன் லோக்பால் மசோதா என்பது இந்தியாவில் ஊழல், பொதுமக்கள் பணம் கையாடல் முதலிய தவறிழைக்கும் அரசியல்வாதிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் மக்களால் நேரடியாக தண்டிக்கப்படவேண்டும் என்ற அடிப்படை சித்தாந்தத்தில் முன்மொழியப்பட்ட ஒரு மசோதாவாகும்.

இப்படியாக தொடங்கப்பட்ட இந்த பயணம், 2013 ஆம் ஆண்டு டெல்லி சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு 70 இடங்களில் 28 இடங்களை வெல்லும் அளவுக்கு சென்றது. தேசிய காங்கிரசின் நிபந்தனையற்ற ஆதரவுடன் கெஜ்ரிவால் அரசாங்கத்தை உருவாக்கி தில்லியின் முதலமைச்சராக பதவியேற்றார். ஆனால் 49 நாட்களில் அவர் ஜன் லோக்பால் அமைக்கப்படாததைக் கண்டித்து பதவியை ராஜினாமா செய்தார். இதற்கடுத்த நாட்களில் நரேந்திர மோடியின் வாரணாசி தொகுதி, பஞ்சாப், என நூற்றுக்கணக்கான தொகுதிகளில் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி போட்டியிட்டது. ஆனால் பஞ்சாபை தவிர அக்கட்சியால் எங்கும் வெற்றிபெற முடியவில்லை.

நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜவை எதிர்த்து போட்டியிட்ட இடங்களில் பாஜகவே வென்றது. ஆம் ஆத்மி பூஜ்ஜியமாக இருந்தது. ஆனால் நிலைமை இதேபோல இருந்திருக்கவில்லை. டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி அமோக வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. இதன் விளைவு சிபிஐ ரெய்டு. ஆனாலும் கெஜ்ரிவால் இதற்கு அஞ்சவில்லை. இதன் காரணமாக மத்திய அரசின் துணை ஆளுநரிடம் கெஜ்ரிவால் தொடர்ந்து மோதல் போக்கை அப்போதிலிருந்து கடைப்பிடித்து வந்திருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக பெரும் வெற்றி பெற்றது. டெல்லி நாடாளுமன்ற தொகுதிகள் அனைத்தையும் பாஜகவே கைப்பற்றியது. ஆம் ஆத்மி இதில் ஒரு இடங்களில் கூட வெற்றிப் பெறவில்லை. ஆனாலும் கெஜ்ரிவால் விட்டுக்கொடுக்கவில்லை. இதே பலத்துடன் ஆம் ஆத்மி பஞ்சாபிலும், இதர மாநிலங்களிலும் சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட்டது. இதன் விளைவாக பஞ்சாப் முழுவதுமாக கைப்பற்றப்பட்டது. கோவாவில் ஒரு சில இடங்களை பெற முடிந்தது.

டெல்லியில் கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற கலவரம், பாஜக கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு டெல்லியில் இஸ்லாமியர்களின் குடியிருப்புக்கள் இடிக்கப்பட்டது போன்ற பிரச்னைகள் கெஜ்ரிவால் அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இதிலிருந்து ஆம் ஆத்மி திசை திரும்பி, தேசியவாதம், தேசபக்தி மற்றும் இந்துத்துவா போன்ற விசயங்களின் மீதான தனது விமர்சனத்தை கட்சி கூர்மைப்படுத்தியது. ஆம் ஆத்மியின் விமர்சனத்தை எதிர்த்து பிரதமர் முதல் பாஜக கட்சித் தலைவர் மனோஜ் திவாரி வரை டெல்லி அரசு மீது கருத்தியல் தாக்குதல்களை நடத்தினர்.

குறிப்பாக இலவசங்கள் குறித்து சமீபத்தில் பிரதமர் மோடி பேசியது பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆம் ஆத்மி அரசின் 'டெல்லி ஜல் போர்டு' உள்ளிட்ட திட்டங்கள் மக்களுக்கு இலவசமாகவும் அல்லது அதிக மானியத்துடன் கூடிய சேவையையும் வழங்கி வருகிறது. இதன் காரணமாக மத்திய அரசுக்கு டெல்லி அரசு வழங்க வேண்டிய கடன் தொகை அதிகரித்துள்ளது என்றும் பாஜக கடுமையாக விமர்சித்தது. ஆனாலும் மக்களுக்கான இதுபோன்ற சேவைகள் தொடரும் என கெஜ்ரிவால் உறுதியளித்துள்ளார்.

தற்போது இந்த ஆண்டு குஜராத் மாநிலம் சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றிபெற இலவசங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. ஆனால் இம்மாநிலத்தில் இதைவிட பெரிய பிரச்னை உள்ளது. அதாவது, கடந்த சில நாட்களுக்கு முன்னர் பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை வழக்கிலிருந்து 11 குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தை எதிர்த்து ஆம் ஆத்மி களம் காணவில்லை. ஏனெனில் இது அம்மாநிலத்தில் இந்துக்களின் வாக்குகளை குறைத்துவிடும்.

குஜராத் மட்டுமல்லாது இமாச்சல பிரதேசத்திலும் தேர்தல் நடைபெற உள்ளது. இதன் காரணமாக ஆம் ஆத்மி-பாஜக மோதல் சூடுபிடித்துள்ளது. இது மட்டும் அல்லாது பல்வேறு காரணிகளும் இந்த மோதலுக்கு காரணமாக சொல்லப்படுகிறது. உதாரணமாக பிரதமர் தேர்த்தல். ஒவ்வொரு முதலமைச்சருக்கும் இந்நாட்டை ஆள வேண்டும் எனும் எண்ணம் நிச்சயம் இருக்கும். 1996ல் தேவகவுடா பிரதமரானபோது, ​​அவரது கட்சி சார்பில் நாடாளுமன்றத்திற்கு தேர்வாகி இருந்தவர்களின் எண்ணிக்கை வெறும் 46தான். எது எப்படியாயினும், அரசியலில் பாஜகவுக்கு ஆம் ஆத்மி உண்மையான சவாலாக இருக்குமா என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற

English summary

(பாஜகவுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வரும் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு): BJP and AAP are fighting over many issues. Here's why the escalation is more about Kejriwal's push for 2024 national polls.

கருத்துகள் இல்லை: