ராதா மனோகர் : யாழ்ப்பாண பல்கலை கழகம் உருவான வரலாறு பற்றி பல செய்திகள் இன்னும் பொது வெளிக்கு வரவில்லை என்றே கருதுகிறேன்
சேர் பொன்னம்பலம் ராமநாதன் அவர்கள் ராமநாதன் கல்லூரியையும் பரமேஸ்வரா கல்லூரியையும் கட்டும்பொழுதே அவை ஒரு பல்கலை கழகமாக உருவாக்கி வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தார்.
இந்த செய்தியை அவரின் செயலாளராகவும் அன்பு நண்பராகவும் இருந்த மறைந்த திரு சங்கரப்பிள்ளை அய்யா அவர்கள் தனது அந்திம காலங்களில் பலரிடம் கூறியிருக்கிறார்.
அடியேன் சிறுவயதில் அவரின் வீட்டிற்கு செல்வதுண்டு . சங்கரப்பிள்ளை அய்யாவின் மகன்தான் திரு பண்டிதர் ராமச்சந்திரன் அவர்கள்
பன்மொழி திறமையும் பேரறிவும் கொண்டவர்
திரு ராமச்சந்திரனை பார்க்கவும் பேசவும் தினசரி ஏராளமானோர் வருவார்கள்..
அக்கூட்டத்தில் ஒரு சிறுவனாக அடியேனும் இருந்திருக்கிறேன்
யாழ்ப்பாண பல்கலை கழகத்தை பற்றி சேர் பொன்னம்பலம் ராமநாதன் கண்ட கனவு பற்றி நான் அறிந்தது அந்த காலங்களில்தான்.
1961 ஆம் ஆண்டு இந்த ராமநாதனின் கனவை நனவாக்க அரசியல் ரீதியாக முயன்றவர் அப்போதைய யாழ்ப்பாண தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த திரு அல்பிறெட் துரையப்பா அவர்களாகும்.
அப்போது பிரதமராக இருந்த ஸ்ரீமா அம்மையாரோடும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியோடும் மிகுந்த நட்போடு இருந்து இணைக்க அரசியலை முன்னெடுத்த துரையப்பா அவர்கள் யாழ்ப்பாண பல்கலை கழகம் அமைப்பதற்கு ஸ்ரீமாவோ அம்மையாரின் அனுமதியை பெற்றார்
அப்போதய கல்வி அமைச்சர் திரு அல்ஹாஜ் பதியுதீன் முகமத் தலைமையில் மூதூர் எம்பி மஜீத்தையும் கலகதர எம்பி திரு அப்துல் ஜப்பாரையும் துரையப்பாவோடு கூடவே அனுப்பி மேற்கண்ட இரு கல்லூரிகளையும் பார்த்து அது பற்றி தொடர்பு உடையவர்களோடு கலந்துரையாடி வருமாறு அனுப்பியிருந்தார்.
அமைச்சர் பதியுதீன் தலைமையிலான குழுவுக்கு இந்த இரு கல்லூரிகளும் பல்கலை கழகத்திற்கு உரிய இடம்தான் என்ற நம்பிக்கை ஏற்பட்டது
இதன் பின்பு பல அரசியல் பொருளாதாரநெருக்கடிகளால் இது உடனே நிறைவேறாமல் போய்விட்டது .
1965 இல் ஸ்ரீ மாவோ அம்மையார் தேர்தலில் தோல்வி அடைந்தார்.
இந்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி தமிழரசு தமிழ் காங்கிரஸ் கட்சியின் துணையோடு ஒரு கூட்டணி அரசை அமைத்தது.
தமிழரசு கட்சி அமைச்சர் பதவியையும் பெற்றது
ஆனால் 1970 வரை ஆட்சி புரிந்த ஐக்கிய தேசிய கட்சியின் கூட்டணி அரசனது பல்கலை கழக திட்டத்திற் கிடப்பில் போட்டுவிட்டது
தமிழரசு கட்சி கிழக்கில் தமிழ் பல்கலை கழகம் வேண்டும் என்று கேட்டது.
தமிழ் காங்கிரஸோ ஏற்கனவே பல்கலை கழகத்திற்கு ஏற்றதாக கருத பட்ட ராமநாதன் - பரமேஸ்வர கல்லூரிகளில் பல்கலை கழகம் வேண்டும் என்று கேட்டது.
டட்லி சேனநாயக்காவின் வேலை சுலபமாகி விட்டது. நீங்கள் உங்களுக்குள் சண்டை போடாமல் ஒரு தெளிவான தீர்மானத்திற்கு வாருங்கள் அதை நாம் நிறைவேற்றுவோம் என்றார் பிரதமர் டட்லி .
1970 ஆம் ஆண்டு தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி படுதோல்வி அடைந்தது
ஸ்ரீமாவோஅம்மையார் மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு ஆட்சிக்கு வந்தார்
அந்த தேர்தலில் திரு அல்பிரட் துரையப்பா வழக்கம்போல சுயேட்சையாகவே நின்றார் .
வெறும் 56 வாக்குகளால் தோல்வி அடைந்தார்.
அத்தேர்தல் முடிவினை ஆட்சேபித்து திரு அல்பிரட் துரையப்பா அவர்கள் வழக்கு தொடர்ந்தார்.
அவ்வழக்கு துரையப்பா அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் வாய்ப்பு அறிந்த தமிழரசு கட்சியை சேர்ந்த யாழ்ப்பாண எம்பி திரு சி எக்ஸ் மார்ட்டின் உடனே ஸ்ரீமாவோ அம்மையாரின் கட்சிக்கு தாவினார்.
இதன் காரணமாகவோ என்னவோ திரு அல்பிரட் துரையப்பா அவர்கள் மேற்கொண்டு அந்த வழக்கை உரிய முறையில் முன்னெடுக்கவில்லை என்று தெரிகிறது .
இருந்த போதும் ஏற்கனவே திரு அல்பிரட் துரையப்பாவுக்கு கொடுத்த வாக்கிற்கு அமைய யாழ்ப்பாண பல்கலை கழகத்தை அமைத்தார்
அதன் திறப்பு விழாவிற்கு வருகை தந்த பிரதமர் ஸ்ரீ மாவோ அம்மையாரின் வரவிற்கு எதிராக கறுப்புக்கொடி காட்டி தெருக்களில் டயர்களை எரித்து தங்கள் எதிர்ப்பினை தமிழரசு கட்சி காட்டியது
பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில்தான் யாழ்ப்பாண பல்கலை கழகம் திறக்கப்பட்டது
யாழ்ப்பாண பல்கலை கழகத்தை தமிழரசு கட்சியினர் அன்று ஏன் எதிர்த்தார்கள்?
யாருக்காவது இந்த கேள்விக்கு பதில் கூற முடியுமா?
இது பற்றிய பத்திரிக்கை செய்தி ஒன்றை இங்கே தந்திருக்கிறேன்
19 08 1961 ஈழநாடு யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணத்தில் தமிழ் கலாச்சார பல்கலை கழகம்.
ராமநாதன் , பரமேஸ்வரா கல்லூரிகள் தகுந்தவை . கல்வி மந்திரி கருத்து.
யாழ்ப்பாணத்தில் தமிழ் கலாசார பல்கலை கழகம் நிறுவுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் விரைவில் எடுக்க இருப்பதாக யாழ்ப்பாண்திரு விஜயம் செய்த கல்வி அமைச்சர் கருத்து வெளியிட்டு இருக்கிறார்
ஒரு கலாச்சார பல்கலை கழகத்திற்கு தரமுயர்த்துவதற்கான தகுதி ராமநாதன் கல்லூரிக்கு உண்டென்பதை அங்கு நேரில் சென்று பார்வையிட்ட கல்வி மந்திரி திரு. பதியுதீன் ஏற்று கொண்டதுடன் உடனடியாக அதனை பல்கலை கழகமாக மாற்றவேண்டும் என்று வலியுறுத்தி அங்குள்ள பதிவு புத்தகத்தில் எழுத்து மூலம் தனது கருத்தை வெளியிட்டார்.
கலகதர எம்பி அப்த்துல் ஜப்பார் , மூதூர் எம்பி ஏ எல் எல் மஜீத் ஆகியோர் சகிதம் அவர் தனது பாரியாருடனும் பிள்ளைகளுடனும் அங்கு வந்து சேர்ந்த போது முன்னாள் தபால் வானொலி அமைச்சர் திரு நடேசபிள்ளையின் பாரியாரான திருமதி சொர்ணலட்சுமி நடேசபிள்ளை உட்பட பல பிரமுகர்கள் வரவேற்று கல்லூரி கட்டிடம் முழுவதையும் சுற்றி காண்பித்தனர்
சேர். பொன். ராமநாதனின் அவர் அழைத்து செல்லப்பட்டார்.
இந்து கலாச்சார பல்கலை கழகத்திற்கு பயன்படுத்தவிருக்கும் மற்றொரு கல்லூரியாக பரமேஸ்வரா கல்லூரிக்கும் அழைத்து செல்லப்பட்டார் .
யாழ்ப்பாணம் எம்பி திரு அல்பிறெட் தங்கராஜா துரையப்பாவுடன் அமைச்சர் நண்பகல் விருந்துண்டார் .
மாலையில் பலாலி அரசினர் பயிற்சி கலாசாலைக்கு விஜயம் செய்தார்.
நேற்று மாலை விமானம் மூலம் கொழும்புக்கு பயணமானார். 19 08 1961 ஈழநாடு யாழ்ப்பாணம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக