திங்கள், 20 ஜூன், 2022

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக வழக்குகள்: நீதிமன்றத்தில் பன்னீரின் கடிதம்!

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக வழக்குகள்: நீதிமன்றத்தில் பன்னீரின் கடிதம்!

மின்னம்பலம் : அதிமுக பொதுக்குழுவை கூட்டுவதற்கு தடை கோரி சென்னை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப் பட்டிருக்கிறது.  இந்த மனு மீது பதிலளிக்குமாறு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வரும் ஜூன் 23 ஆம் தேதி சென்னையை அடுத்துள்ள வானகரத்தில் அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
 கடந்த ஒரு வாரமாக பன்னீர் செல்வத்துக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே நடக்கும் மோதலால்,  பொதுக்குழுக் கூட்டத்தைத் தள்ளி வைக்க வேண்டும் என்று பன்னீர்செல்வம், எடப்பாடிக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
ஆனால் எடப்பாடியோ பொதுக்குழுவை நடத்தி அதில் தன்னை ஒற்றைத் தலைமையாய் நிலை நிறுத்த தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறார்.


இந்த நிலையில் ஈரோடு மாவட்டம்  பெருந்துறை ஒன்றிய அதிமுக மாணவர் அணி முன்னாள் பொருளாளரான சி.பாலகிருஷ்ணன் இந்த பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் இன்று (ஜுன் 20) வழக்குத்  தொடுத்துள்ளார்.

அவரது மனுவில்,  “2021 டிசம்பர் 7 ஆம் தேதி நடைபெற்ற அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் உட்கட்சி தேர்தலில் அடிப்படை உறுப்பினர்கள் போட்டியிட போதிய அவகாசம் வழங்கவில்லை. மேலும், கட்சி தேர்தலுக்கு முன்பு கட்சியின் அடிப்படை உறுப்பினர்களின் அடையாள அட்டையை  புதுப்பிக்கவில்லை. அதனால் புதிய உறுப்பினர்கள் தேர்தலில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதுகுறித்து அதிமுக தலைமைக்கு புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

இது தவிர அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர்  நியமனத்தை ரத்து செய்யக்கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு நிலுவையில் இருக்கிறது.  எனவே இந்த பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும். தேர்தல் விதிகளை முழுமையாக முறையாக பின்பற்றி மீண்டும் உட்கட்சித் தேர்தல் நடத்த வேண்டும். ஏற்கனவே நடந்ததாக தெரிவிக்கப்பட்ட உட்கட்சித் தேர்தலை ரத்து செய்ய வேண்டும்” என்று அந்த மனுவில் பாலகிருஷ்ணன்  கோரிக்கை வைத்திருந்தார்.  

இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, நாளை மறுதினம் பதில் அளிக்குமாறு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அமைப்புச் செயலாளர் பொன்னையன், தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

இதற்கிடையே அதிமுகவின் பொதுக்குழுவை  கூட்டத் தடை கோரி, திண்டுக்கல் சூரியமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வேறொரு வழக்குத் தொடுத்திருந்தார். இந்த மனுவை நிராகரிக்க வேண்டும் என்று ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சார்பில் ஏற்கனவே மனுக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.  இவ்வழக்கு விசாரணை ஜூன் 22 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், ‘23 ஆம் தேதி பொதுக்குழு என்ற நிலையில் வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும்’ என்று சூரியமூர்த்தி நீதிமன்றத்தில்  மனு தாக்கல் செய்தார். அந்த மனு நீதிபதி பிரியா முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வழக்கறிஞர் ராஜலட்சுமி ஆஜராகி,  “பொதுக்குழுக் கூட்டத்தை தள்ளி வைக்கக் கோரி இணை ஒருங்கிணைப்பாளருக்கு ஒருங்கிணைப்பாளர் கடிதம் எழுதியுள்ளார்” என்று வாதிட்டார். அந்தக் கடிதமும் நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது.    

இதையடுத்து  அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது.  இதையடுத்து வழக்கு ஜூன் 21 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

-வேந்தன்

கருத்துகள் இல்லை: